under review

சி.டி. ஞானமணி

From Tamil Wiki
சி.டி. ஞானமணி

சி.டி. ஞானமணி (சி. தேவதாஸ் ஞானமணி; சங்கை தேவதாஸ் ஞானமணி; சி. தேவதா ஞானமணி) (ஜூலை 14, 1890-1953) கிறித்தவ மத போதகர். கவிஞர். கிறிஸ்தவத் தமிழ்க் கீர்த்தனைகள் பலவற்றை இயற்றினார். தமிழகத்திலும் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிலும் மதப்பணி ஆற்றினார்.

பிறப்பு, கல்வி

சி.டி. ஞானமணி, ஜூலை 14, 1890 அன்று, திருநெல்வேலியில், சி.பி. ஞானமணி-ஞானசௌந்தரி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். பள்ளிக் கல்வியை முடித்த இவர், இங்கிலாந்து திருச்சபையைச் சேர்ந்த எஸ்.பி.ஜி. மிஷனரியில் குருப்பட்டம் பெற்றார். தமிழ், ஆங்கிலம், மலையாளம் கற்றார்.

தனி வாழ்க்கை

சி.டி. ஞானமணி, மணமானவர். இரண்டு மகள்கள். முதல் மகள் ஸ்டெல்லா; இரண்டாவது மகள் செலினா.

மதப் பணிகள்

  • 1922-ல், திருச்சி சகலப் பரிசுத்தவான்கள் ஆலயத்தில் ஓர் ஆண்டு பணி.
  • 1932-ல், சிங்கப்பூரில் உள்ள தூய பேதுரு ஆலயத்தில் பணி.
  • 1938-ல், கேரளா சிரியன் திருச்சபையில் முதல் குருவாக நியமனம்
  • 1939-ல், மலேசியாவில் உள்ள மலாக்காவில், சிங்கப்பூர் அரசின் கீழ் இருந்த கோலாலாம்பூர் நகரின் தூய மரியாள் ஆலயத்தில் தமிழ்ப் போதகர் பணி.
  • 1942-ல், சேலம் மாவட்டம் சேர்வராயன் மலையில் உள்ள ஏற்காட்டில் அஞ்சலகத் தலைவர் பணி.
  • பினாங்கில் உள்ள தூய ஜார்ஜ் ஆலயத்தில் குருவாகப் பணி செய்தார்.

அமைப்புச் செயல்பாடுகள்

சி.டி. ஞானமணி, சிங்கப்பூரில் இறைப்பணி செய்த காலத்தில், தமிழர்களுக்காக தனியாக ஒரு கிறிஸ்துநாதர் ஆலயத்தை உருவாக்கினார். சிங்கப்பூரில் உள்ள தூய பேதுரு ஆலய இடத்தை சிங்கப்பூர் அரசாங்கம் அபிவிருத்திப் பணிக்காகக் கையகப்படுத்தியபோது, அரசாங்க அதிகாரிகளிடம் உரையாடி புதிய ஆலயம் கட்டுவதற்கான ஈட்டுத் தொகையைப் பெற்றார். யுத்த நாட்களில் மலாக்காவில் இருந்த ஆலயக் கட்டடத்தை ஜப்பானிய அதிகாரிகள் போர்ப் பண்டசாலையாக மாற்றினர். ஜப்பானிய அதிகாரிகளிடம் ஞானமணி வாதாடி ஆலயத்தை மீட்டார். வழமைபோல் ஆராதனைகள் நிகழ்வதற்கான அனுமதியைப் பெற்றார். சீன மக்களுக்கும் ஓர் ஆலயம் கட்டுவதற்கான இடத்தை அரசிடம் வாதாடிப் பெற்றுக் கொடுத்தார்.

ரப்பர் தோட்டங்களிலும், யுத்த முகாம்களிலும் குடியேறியிருந்த மக்களைச் சந்தித்து அவர்களுக்கு கிறிஸ்துவின் போதனைகளை உபதேசித்தார். மலையாள மக்களுக்கும் பல்வேறு உதவிகளைச் செய்து அவர்களை கிறிஸ்துவின் வழியில் ஈடுபடுத்தினார். கடும் பஞ்சம் நிலவிய காலத்தில், மலேரியா முதலிய வியாதிகள் பரவியிருந்த இடங்களுக்கும், தொலைதூரத்தில் அமைந்திருந்த ராணுவ முகாம், ரப்பர் தோட்டங்கள் போன்ற இடங்களுக்கும் சென்று, தம் ஊழியத்தைத் தொடர்ந்தார். தமிழ்க் கிறிஸ்தவர்களுக்கென்று சிறு சிறு சபைகளைத் தோற்றுவித்தார். பல வெளிநாடுகளுக்குச் சென்று கிறிஸ்துவின் போதனைகளைப் பரப்பினார்.

சி.டி. ஞானமணி கீர்த்தனைகள் தொகுப்பு நூல்

கீர்த்தனைகள்

கிறிஸ்துவின் சிலுவைத்தியானம், திருமண வாழ்த்து ஆகிய தலைப்புகளில் கீர்த்தனைப் பாடல்களை இயற்றினார். தனிப் பாடல்களாக 32 ஞானப்பாடல்களை இயற்றினார்.

போன்றவை சி.டி. ஞானமணியின் கீர்த்தனைப் பாடல்களில் புகழ்பெற்றவை.

பட்டம்

சி.டி. ஞானமணி, இங்கிலாந்து திருச்சபையாரிடமிருந்து கனோன் (Canon) பட்டம் பெற்றார்.

மறைவு

சி.டி. ஞானமணி,1953-ல், பினாங்கில் காலமானார்.

வரலாற்று இடம்

சி.டி. ஞானமணி, கிறிஸ்துவை முழுமையாக ஏற்றுக்கொண்டு, அதன் கொள்கைகளின் படிச் செயல்பட்டார். மதமாற்றத்தை நோக்கமாகக் கொண்டு பல நூல்களை இயற்றினார். தமிழில் இயேசு கிறிஸ்து மீது பல முக்கியமான கீர்த்தனைகளை இயற்றினார். முன்னோடி கிறிஸ்தவ போதர்களுள் ஒருவராக சி.டி. ஞானமணி அறியப்படுகிறார்.

நூல்கள்

  • ஸ்நான முனி சரிதை
  • கிறிஸ்து குலக் கும்மி
  • கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகள்
  • திருமறைப் பாடல்கள் பேரில் கீதங்கள்
  • கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பேரிலான பாடல்கள்
  • கீர்த்தனை ஞானப்பாடல்
  • கிறிஸ்து குலக் கும்மி

உசாத்துணை


✅Finalised Page