சிவராம் காரந்த்
கோடா சிவராம் காரந்த் (Kota Shivaram Karanth, அக்டோபர் 10, 1902 - டிசம்பர் 9, 1997) ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளர். கன்னட இலக்கியம் மற்றும் பண்பாட்டின் வளர்ச்சியிலும், மறுமலர்ச்சியிலும் பெரும்பங்கு வகித்தார். சூழியல் போராளி, கலைக்களஞ்சியத் தொகுப்பாளர், வரலாற்றாசிரியர், நடனக்கலைஞர், நாடகக் கலைஞர். கன்னட வரலாறு, நுண்கலைகள், கிராமியக்கலைகள், நாட்டார் மரபுகள் ஆகியவற்றில் அவர் வாழ்ந்த காலத்தில் இறுதிவரியைச் சொல்லத் தகுதி படைத்த பேரறிஞர். யக்ஷ கானம் என்னும் கர்நாடகத்தின் பழமையான நிகழ்த்துகலையை மீட்டுருவாக்கம் செய்தவர். சிற்ப ஆராய்ச்சியாளர். நவீன இந்தியாவின் சிற்பிகளில் ஒருவர். பத்ம பூஷண் விருது பெற்றவர். நெருக்கடிநிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதை திரும்பக் கொடுத்துவிட்டார்.
பிறப்பு, கல்வி
சிவராம் காரந்த் உடுப்பி அருகே கோடா என்ற சிற்றூரில் மாத்வ பிராமணக் குடும்பத்தில் சேஷ காரந்த்- லக்ஷ்மம்மா இணையருக்கு அக்டோபர் 10, 1902 அன்று ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். குந்தாபுராவில் பள்ளிப்படிப்பு முடித்தார். கல்லூரியில் படிக்கையில் காந்தியப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டு சிறை சென்றார். 1927 வரை கர்னாட் சதாசிவராவ் தலைமையில் கதர் மற்றும் சுதேசி இயக்கப் போராளியாக இருந்தார். காந்தியுடன் கடிதத் தொடர்பில் இருந்தார். காசி, பிரயாக் போன்ற இடங்களில் ஆன்மிகம் என்னும் பெயரில் போலித் துறவிகளின் செயல்களை கண்டு வெறுத்த காரந்த் சமூக சீர்திருத்தம் மீது நாட்டம் கொண்டார்.
தனி வாழ்க்கை
நடனப் பள்ளி ஒன்றில் நடனம் கற்பித்தும் நாடகங்கள் இயக்கியும் வந்த சிவராம் காரந்த் தன் மாணவியான லீலா ஆல்வாவைத் தம் முப்பதாவது வயதில் மணந்தார். லீலா பண்ட்(Bant) வகுப்பைச் சேர்ந்தவர். கலப்பு மணம் செய்துகொண்டதன் காரணமாக சுற்றத்தாரின் கேலிக்கு ஆளானார். லீலா காரந்த் மராத்தி நாவல்களைக் கன்னடத்தில் மொழியாக்கம் செய்தார். சிவராம் காரந்தின் நாடகங்களில் நடித்தார். இவர்களுக்கு உல்லாஸ், ஹர்ஷா என இரு மகன்களும் மாளவிகா, க்ஷமா என இரு மகள்களும் பிறந்தனர். ஹர்ஷா தனது 21-ஆவது வயதில் புற்றுநோயால் காலமானார். உல்லாஸ் காரந்த் விலங்கியலாளர். புலிகளைப்பற்றி குறிப்பிடத்தக்க ஆய்வுகள் மேற்கொண்டவர். சிவராம காரந்த் பற்றி அவரது பிள்ளைகள் மாளவிகா கபூர், உல்லாஸ் காரந்த், க்ஷமா ராவ் மூவரும் இணைந்து எழுதிய 'Growing up Karanth'[1] என்ற நூலில் தங்கள் தந்தை மற்றும் தாயின் நினைவுகளையும் அவர்களின் குடும்பச் சூழலையும் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.
சிவராம் காரந்த் 1932 முதல் 1972 வரை புத்தூரில் 'பாலவனா' என்ற தன் இல்லத்தில் வசித்தார். புத்தூர் அக்காலகட்டத்தில் கர்நாடகத்தின் முக்கியமான கலாசார மையமாகத் திகழ்ந்தது.
இலக்கிய வாழ்க்கை
சிவராம் காரந்தின் முதல் கவிதைத் தொகுப்பான 'ராஷ்ட்ரகீத சுதாகரா' (தேசியக்கவிதைகளின் தேனூற்று) 1924-ம் ஆண்டு வெளியானது. தொடர்ந்து முதல் நாவலான 'விசித்ரகூட' வெளியானது. நிர்பாக்ய ஜன்மா' மற்றும் 'சூலய சம்சாரா' (பாலியல் தொழிலாளியின் குடும்பம்) எளிய மக்களின் நிலையச் சித்தரித்த படைப்புகள். விமர்சகர்களால் சிவராம காரந்தின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் 'தேவதூதரு' (தேவதூதன்) சமகால இந்தியாவின் அரசியல், சமூக சூழலை அங்கதத்துடன், எள்ளலுடன் சித்தரித்த படைப்பு.
அறிவியல் துறை
காரந்த் சமகால விஞ்ஞானத்துறைகளில் விரிவான ஞானம் பெற்றவர். இரு நண்பர்கள் புதன் கிரகத்திற்கு பயணம் செய்வதைப் பற்றி அவர் எழுதிய' பஷுபலா'(மிருக பலம் -1928) கன்னட மொழியின் முதல் அறிவியல் புனைவுச் சிறுகதையாகக் கருதப்படுகிறது. . ஆசியாவின் முதல் குழந்தைகளுக்கான ரயில் வண்டியை உருவாக்கினார். அவர் உருவாக்கிய வண்டியை மாதிரியாகக் கொண்டு கப்பன் பூங்காவில் குழந்தைகளுக்கான சிறிய புகைவண்டி செயல்பட்டது.
மண்ணும் மனிதரும்
'மரளி மண்ணிகே' (மண்ணும் மனிதரும்) செவ்வியல் பண்பு கொண்ட யதார்த்தவாத நாவல். தென் கன்னடக் கடலோரப் பகுதி கிராமத்தில் உள்ள இரு குடும்பங்களின் நான்கு தலைமுறைப் பயணத்தை உறவுகளின் உள்ளடுக்குகள், காட்சிகளின் நுட்பம், வளர்ந்து விரிவடையும் சம்பவங்கள் இவற்றின் ஊடாக முதிர்ந்து மொத்தச்சித்திரத்தை அளிக்கும் படைப்பு. தமிழில் சித்தலிங்கையாவால் 'மண்ணும் மனிதரும்' என்ற பெயரில் மொழியாக்கம் செய்யப்பட்டது.
சோமனின் உடுக்கை
'சோமன துடி' (சோமனின் உடுக்கை[2]) நாவலில் சமூகத்தில் தலித் பிரக்ஞை உருவாகும் முன்பாகவே ஒரு தலித்தின் வாழ்க்கையை இந்த நாவலில் சிவராம காரந்த் முன்வைத்திருந்தார். பெரிய பண்ணையில் விவசாயக்கூலியாக வேலை செய்யும் சோமனன் சொந்தமாக விவசாயம் செய்ய ஒரு துண்டு நிலம் வேண்டி சுமந்தலையும் கனவு மெல்லக் குலைகிறது. சோமனனின் உடுக்கை ஏற்படுத்தும் ஒலி அவனது உள்மனதின் ஒலியாக வெளிப்படுகிறது. சோமன துடி திரைப்படமாக்கப்பட்டு 1975-ல் சிறந்த திரைப்படத்துக்கான தங்கத் தாமரை விருதைப் பெற்றது.தமிழில் 'சோமனின் உடுக்கை; என்ற பெயரில் தி. சு. சதாசிவத்தால் மொழியாக்கம் செய்யப்பட்டது.
ஊமைக்கிழவியின் கனவுகள்
'மூகஜ்ஜிக கனசுகளு' (ஊமைக்கிழவியின் கனவுகள்) 1977-ம் ஆண்டுக்கான ஞானபீடப்பரிசைப் பெற்றது. புலன்களுக்கு அப்பாற்பட்டு கடந்தகாலத்தையும் வருங்காலத்தையும் உணர்ந்தறியும் திறன் கொண்ட 80 வயதான மூதாட்டி மூகாம்பிகையையும் வரலாற்றில் ஆர்வமுடைய பேரன் சுப்பையாவையும் சுற்றி வரும் கதை. பிறப்பு, இறப்பு, வினை, கடவுள் முதலியவற்றைப்பற்றிய ஆழமான கேள்விகளை எழுப்பும் படைப்பு. தமிழில் சித்தலிங்கையாவால் 'ஊமைப்பெண்ணின் கனவுகள்' என்ற பெயரில் மொழியாக்கம் செய்யப்பட்டது. 2019-ல் திரைப்படமாக்கப்பட்டு பல பரிசுகளை வென்றது.
அழிந்த பிறகு
'அலிடே மேலே' (அழிந்த பிறகு[3] ) கதைசொல்லி தான் ரயிலில் சந்தித்த மனிதரின் இறப்புக்குப்பின் அவரது நாட்குறிப்பை வைத்து அவரது வாழ்க்கையைப் பற்றிக் கண்டடைந்ததை சொல்லும் கதை. தமிழில் சித்தலிங்கையாவால் மொழியாக்கம் செய்யப்பட்டது.
பாலர் இலக்கியம்
மூன்று பாகங்கள் கொண்ட, வண்ணப்படங்களோடு கூடிய குழந்தைகள் கலைக்களஞ்சியத்தையும்,12 பாகங்கள் கொண்ட கன்னடக் கலைக்களஞ்சியத்தையும் நான்கு பாகங்கள் கொண்ட அறிவியல் கலைக்களஞ்சியத்தையும் உருவாக்கினார். 240 குழந்தைகள் நூல்களை எழுதினார்.
பிற படைப்புகள்
காரந்த் 47 நாவல்களும் 31 நாடகங்களும் ஆறு கட்டுரை தொகுதிகளும் கலைவிமர்சனங்களின் தொகுதிகளாக 31 நூல்களும் சாளுக்கியக் கட்டிடக்கலை பற்றிய ஆய்வுநூல் ஒன்றும் யட்சகானத்தைப்பற்றிய இரு பெரும் தொகை நூல்களையும் எழுதினார்.
'ஹுச்சுமானசிய ஹத்து முககளு' (பித்தனின் பத்து முகங்கள்) என்னும் தன்வரலாற்று நூலில் தன்னை ஓர் நிரந்தரப் பயணியாகவே முன் வைக்கிறார்.
4 பயண நூல்களையும் பறவைகளைப்பற்றி 2 நூல்களையும் எழுதியிருக்கிறார். சிவராம் காரந்த் எழுதியவை மொத்தம் 417 நூல்கள்.
கலை, பண்பாட்டுச் செயல்பாடுகள்
யக்ஷ கானம் -கலையின் மீட்டுருவாக்கம்
சிவராம் காரந்த் யக்ஷ கானத்தின் தந்தை என்றே அழைக்கப்படுகிறார். கர்நாடகத்தின் அழியும் நிலையிலிருந்த பழமையான நிகழ்த்து கலையான யக்ஷ கானத்தை மீட்டுருவாக்கம் செய்தார். கர்நாடக கிராப்புறங்களில் பயணம் செய்து, ஓலைச்சுவடிகளைப் படித்து, நூற்றுக்கணக்கான கலைஞர்களைச் சந்தித்து, யக்ஷ கானத்தின் மரபான வடிவத்தையும், 600 வருட வரலாற்றையும், முறைகளையும் காலப்போக்கில் உருவான மாற்றங்களையும் ஆராய்ந்தறிந்தார். யக்ஷகானத்தில் பாடப்படும் பாடல்களுக்கான 80-க்கு மேற்பட்ட ராகங்களைக் கண்டறிந்து பட்டியலிட்டார். தான் ஆராய்ந்தறிந்தவற்றை 'யக்ஷ கானா' (கன்னடம், ஆங்கிலம்), 'யக்ஷ கான பயலட' (கன்னடம்) என்ற இரு நூல்களாக எழுதினார். 'யக்ஷ கானா' நூல் ஸ்வீடிஷ் அகாதமியின் பரிசைப் பெற்றது. யக்ஷ கானத்தில் நவீன காலத்திற்கேற்ப மாற்றங்களைச் செய்து,பல பரிசோதனை முயற்சிகளையும் மேற்கொண்டார். நிகழ்ச்சியின் நேர அளவை 12 மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாக மாற்றியமைத்தார். பெண் பாத்திரங்களையும் ஆண்களே நடித்து வந்த இக்கலையில் பெண்களும் இடம் பெறத் துவங்கினர். பெண் கதாபாத்திரங்களின் ஒப்பனை மற்றும் உடையலங்காரத்தில் பல புதுமைகளைப் புகுத்தினார். அரங்க அமைப்பு மற்றும் நடன அசைவுகளிலும் பல மாற்றங்களைச் செய்தார். (பார்க்க: காரந்த் யக்ஷகானம் பயிற்சியளிக்கும் காணொளி: [4]
நெல்லிக்கட்டே பள்ளி, பாலவனா
சிவராம் காரந்த் புத்தூரில் நாற்பது வருடங்கள் (1932-1972) வசித்த 'பாலவனா' இல்லம் அவரது நினவாலயமாகத் தொடர்கிறது. அக்கால கட்டத்தில் நெல்லிக்கட்டே அரசாங்கப் பள்ளிக் கட்டிடத்தில் நடனமும் யக்ஷ கானமும் பயிற்றுவித்து அரங்கேற்றினார். ஓர் பண்பாட்டு, கலாசார மையமாகத் திகழ்ந்த அப்பள்ளியில் பல நாடகங்களும் அரங்கேற்றப்பட்டன. அரங்கேற்றத்திற்காக ஐரோப்பிய பாணியில் அடுக்கு இருக்கை அரங்கை (amphitheater) அமைத்தார். சிவராம் காரந்த் ஏற்படுத்திய 'புத்தூர் தசரா' எனப்படும் நவராத்திரிக் கொண்டாட்டம் இப்பள்ளிக் கட்டிடத்தில் துவங்கி (1934-1944) பத்தாண்டுகள் நடந்தது. பின்பு கோயில் வளாகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. டிசம்பர் 2020-ல் இக்கட்டிடம் பாதுகாப்பு காரணங்களுக்காக தகர்க்கப்பட்டது மிகுந்த கண்டனத்திற்கு உள்ளானது [5].
நாடகத்துறை
சிவராம் காரந்த் பல நாடகங்களை எழுதி இயக்கியுள்ளார். 1930-ல் அவர் எழுதி இயக்கிய 'முக்த த்வாரா' (திறந்த கதவு) இசைநாடகம் பரிணாம வளர்ச்சியை மையமாகக் கொண்டதும், கன்னட மொழியின் முதல் நவீன இசை நாடகமும்(musical) ஆகும். 'மங்களாரத்தி','கர்பகுடி' போன்ற சமூக விழிப்புணர்வைத் தூண்டும் நாடகங்கள் புகழ்பெற்றவை.
சூழியல் போராளி
சிவராம் காரந்த் தீவிரமான சூழலியல் போராளி. மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை வளம் அழியாமல் காக்கப்பட வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டு பணியாற்றினார். காடுகள் மற்றும் மலைத்தோட்டங்களை காக்கும் போராட்டங்களை முதலிலும் பின்னர் மாசுபடுத்தும் தொழிற்சாலைகளுக்கு எதிரான போராட்டங்களையும் முன்னெடுத்தார். ராணி பென்னூர் எனும் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் செயல்கள் நடந்த பொழுது அவர்களை ஒருங்கிணைத்து போராட்டங்கள் செய்தார்.
உத்தர கர்நாடகத்தில் பெட்தி நதியின் மீது எழ இருந்த நீர்மின் திட்டத்தை எதிர்த்து பெரிய இயக்கமொன்றுக்கு தலைமை தாங்கினார். அணு சக்திக்கு எதிராக தீவிரமாக வாழ்நாள் முழுக்க இயங்கியவர். செர்நோபில் நிகழ்வுக்கு பிறகு கர்நாடகத்தில் அணு உலை எழாமல் இருக்கவும் செய்தார். இந்திய சுற்றுச்சூழலை பற்றிய முதல் மக்கள் அறிக்கையை உருவாக்கினார். அடிக்கடி பயணம் செய்துபழங்குடியின மக்கள்,கிராம மக்களின் பண்பாடுகள் ஆகியவற்றை அவர் புரிந்து கொண்டார்.
இலக்கிய இடம்
சிவராம காரந்த் ஒரு செவ்விலக்கியப் படைப்பாளிக்குரிய தனிப்பட்ட ஆளுமை கொண்டவர் . அவதூதரைப்போல நாடெங்கும் பயணம் செய்தவர். 'மண்ணும் மனிதரும்' மற்றும் 'ஊமைப்பெண்னின் கனவுகள்' இரண்டும் செவ்வியல்தன்மை கொண்ட யதார்த்தவாதப் படைப்புகள் (classics). செவ்விலக்கியத்திற்குரிய சமநிலை, முழுமை, வடிவப்பிரக்ஞை கொண்டவை. படைப்பாளியின் குரல் தனித்து ஒலிக்காது, விருப்பு வெறுப்பும் இன்றி, கூறுபொருளுடன் விவேகம் மூலமும் தத்துவார்த்த தெளிவின் மூலமும் ஏற்பட்ட மனவிலக்கம் இப்படைப்புகளுக்கு உச்சகட்ட சமநிலையை அளிக்கிறது. உணர்ச்சிகளும், உறவுகளின் நுட்பங்களும், குணச்சித்திரங்களும் உணர்ச்சி நெருக்கடிகளோ, நாடகீயத் தன்மையோ அறவே இன்றி மிகுந்த எளிமையுடன் கூறப்படுகின்றன.
தான் வாழும் காலம், அதன் வரலாற்று-கலாச்சாரப் பின்புலம் ஆகியவை குறித்து சிவராம் காரந்த் கொண்டிருந்த மிக விரிவான அறிதலும், ஓட்டுமொத்தப் பார்வையும் இப்படைப்புகளில் எதிர்கால வளர்ச்சிக்கான கனவுகளை விதைக்கின்றன. எல்லைகளைத் தாண்டி மானிட குலம் முழுவதற்குமான உண்மைகளைப் பேசுகின்றன; பண்பாட்டிற்கான அடித்தளமாகின்றன. `மண்ணும் மனிதரும்’, `ஊமைப் பெண்ணின் கனவுகள்’ இரண்டும் பல்வேறு நுட்பமான ஊடு வாசிப்புகளுக்கு இடமுள்ள படைப்புகள். நாவலை உச்சகட்ட கவித்துவத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய `சோமனின் துடி’, அவரது இருபெரும் நாவல்களுக்கு முற்றிலும் மாறுபட்ட புதிய அழகியல் கொண்ட படைப்பு. கன்னட தலித் படைப்புகளுக்கு முன்னோடி. சோமனுடைய உடுக்கை ஒலி கையறு நிலையில் மனிதகுலம் எழுப்பும் ஓசையாக மாறி, இறுதியில் உலகப்பரப்பில் வஞ்சிக்கப்பட்ட மானுடத்தின் துயரத்தைச் சுமந்த ஓசையாக ஒலிக்கிறது.
சிவராம் காரந்த் கர்நாடகத்தில் மூன்று தலைமுறைகளைப் பாதித்த எழுத்தாளர். அவரது செவ்வியல் படைப்புகளிலிருந்து கன்னட மொழியின் வலிமையான நவீனத்துவ படைப்புகள் முளைத்து வந்தன. யூ. ஆர். அனந்தமூர்த்தி காரந்தின் படைப்புகளின் மீது விமரிசனங்களுடன் தொடங்கி தன் எழுத்தைக் கண்டடைந்தார்.
சிவராம் காரந்தை 'நவீன இந்தியாவின் ரவீந்திரநாத் தாகூர்' எனக் குறிப்பிடும் வரலாற்றாய்வாளர் ராமசந்திர குஹா "அவர் சுதந்திர இந்தியாவின் தலைசிறந்த எழுத்தாளர் மற்றும் களப்போராளி" எனப் பாராட்டுகிறார்.
விருதுகள், பரிசுகள்
- ஞானபீடப் பரிசு (1978)
- சாகித்ய அகாதெமி ஆய்வுநிதி (Sahithya Academy fellowship) (1985)
- சங்கீத நாடக அகாதெமி ஆய்வுநிதி (Sangeet Natak Akademi Fellowship (1973)
- பத்ம பூஷண் விருது (1968) 1975-ல் அவசர நிலை பிரகடனத்தை எதிர்த்து விருதை திருப்பி அளித்தார்)
- சாகித்ய அகாதெமி விருது– (1959)
- கர்நாடக அரசின் சாகித்ய அகாதெமி விருது
- கர்நாடக அரசின் ராஜ்யோத்ஸவ விருது (1986)
- சங்கீத நாடக அகாதெமி விருது
- பம்பா விருது
- ஸ்வீடிஷ் அகாதெமி விருது (Swedish Academy award)[
- துள்சி சம்மான் (1990)
- தாதாபாய் நௌரோஜி விருது(1990)
- கௌரவ முனைவர் பட்டம் ( மைசூர் , மீரட், கர்நாடக பல்கலைக்கழகங்கள்)
இறப்பு
சிவராம காரந்த் டிசம்பர் 9, 1997 அன்று தனது 95-ஆவது வயதில் பெங்களூருவில் காலமானார். கர்நாடக அரசு அவருக்கு அஞ்சலிசெலுத்தும் விதமாக இரு நாட்கள் துக்கம் அனுசரித்தது.
படைப்புகள்
தமிழில் வெளிவந்த நாவல்கள்
- ஊமைப்பெண்ணின் கனவுகள் - சித்தலிங்கையா, நேஷனல் புக் டிரஸ்ட்
- மண்ணும் மனிதரும் -சித்தலிங்கையா, நேஷனல் புக் டிரஸ்ட்
- சோமன துடி சித்தலிங்கையா, நேஷனல் புக் டிரஸ்ட்
- அழிந்தபிறகு -சித்தலிங்கையா, நேஷனல் புக் டிரஸ்ட
நினைவு இல்லம்
சிவராம் காரந்த் புத்தூரில் வசித்த 'பாலவனா' கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளையால் ( Indian National Trust for Art and Cultural Heritage (INTACH) ) செப்பனிடப்பட்டு அவர் வசித்த போது இருந்த தோற்றத்தில் பராமரிக்கப்படுகிறது.[6]
உசாத்துணை
- The versatility of Shivarama Karant--Deccan Herald , December 2019
- சிவராம் காரந்தின் மண்ணும் மனிதரும்
- https://ignca.gov.in/seminar-on-karanth/
- சிவராம் காரந்தின் உலகம்-எஸ்.ராமகிருஷ்ணன்
- The Kannada Tagore-Dr.Shivaram Karanth
அடிக்குறிப்புகள்
- ↑ Growing Up Karanth: A powerful, beguiling biography of Shivram Karanth - The Tribune
- ↑ சோமனின் உடுக்கை-எஸ்.ராமகிருஷ்ணன்
- ↑ அழிந்த பிறகு-நூல் அறிமுகம் bookday.com
- ↑ சிவராம் காரந்த் யக்ஷ கானம் பயிற்சியளிக்கும் காணொளி)
- ↑ Cultural treasure': 156-yr-old Karnataka school where Shivaram Karanth taught demolished
- ↑ பாலவனம்-புகைப்படங்கள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Jan-2023, 09:51:38 IST