under review

சிவயோகிநாதர் கோயில்

From Tamil Wiki
சிவயோகிநாதர் கோயில்
சிவயோகிநாதர் கோயில்

சிவயோகிநாதர் கோயில் திருவிசநல்லூரில் அமைந்த தேவாரப் பாடல் பெற்ற தலம். இக்கோயில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானம், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இடம்

சிவயோகிநாதர் கோயில் கும்பகோணத்திலிருந்து பூம்புகார் செல்லும் வழித்தடத்தில் எட்டு கிலோமீட்டர் தொலைவில் திருவிசநல்லூரில் உள்ளது.

வரலாறு

பண்டைய காலத்தில் இந்தப் பகுதியில் வில்வ மரங்கள் அடர்ந்த காடாக இருந்ததால் இங்குள்ள இறைவன் வில்வாரண்யேஸ்வரர் என அழைக்கப்பட்டார். பன்னிரெண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த திருவுந்தியாரை இயற்றிய உய்யவந்ததேவ நாயனார் பிறந்த இடம்.

கல்வெட்டு

சோழர்கள் (பதினான்கு மன்னர்கள்: பராந்தகன்-I முதல் குலோத்துங்கன்-III வரை), பாண்டியர்கள் (மன்னர் வரகுண பாண்டியன்) மற்றும் விஜயநகர பேரரசு (மன்னர் கிருஷ்ணதேவராயர்) காலத்தைச் சேர்ந்த தொண்ணூற்றி நான்கு கல்வெட்டுகள் இந்தக் கோயிலில் உள்ளன.

தொன்மம்

  • சிவயோகிநாதர் கோயில் நான்கு யுகங்களிலும் இருந்தது. சிவபெருமான் கிருத யுகத்தில் புராதனேசுவரர் என்றும், திரேதா யுகத்தில் வில்வாரண்யேஸ்வரர் என்றும், துவாபர யுகத்தில் யோகானந்தீஸ்வரர் என்றும், கலியுகத்தில் சிவயோகிநாதர் என்றும் அழைக்கப்பட்டார்.
  • மகாவிஷ்ணுவும் லட்சுமியும் தங்கள் திருமணத்திற்காக இங்கு சிவபெருமானின் அருள் பெற்றதாக நம்பிக்கை உள்ளது.
  • கழுகுகளின் அரசனான ஜடாயு இங்கு சிவபெருமானை வழிபட்டதாக நம்பிக்கை உள்ளது.
  • அகஸ்தியர் ஒவ்வொரு மகா சிவராத்திரியிலும் இங்கு சிவனை வழிபடுவதாக நம்பிக்கை உள்ளது.
  • பிரம்மா ஒரு காலத்தில் பூமியில் பிறந்தபோது ஆறு யோகிகளுடன் சேர்ந்து இங்கு கடுமையான தவம் செய்தார். ஒரு சிவராத்திரி நாளில் சிவன் அவர்கள் முன் தோன்றி அவர்களை ஏழு வழிகாட்டி விளக்குகளாக மாற்றி ஆசீர்வதித்தார். அவர்களை தன்னுடன் இணைத்துக் கொண்டார். இந்த இணைவை சித்தரிக்கும் வகையில் சிவலிங்கத்தின் பின்புறம் ஏழு முடிகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இங்குள்ள சிவபெருமான் சிவயோகி நாதர் என்று அழைக்கப்பட்டார்.
  • தன் கடமைகளைப் புறக்கணித்து வாழ்ந்து வந்த ஒரு பிராமணன் தன் தவறை உணர்ந்து இக்கோயிலுக்கு வந்து இறைவனை வழிபட்டார். சிவபெருமான் அவரது பாவங்களை போக்கி அவரை ஆசீர்வதித்ததாக நம்பிக்கை உள்ளது.
  • கேரளாவில் கணபதி என்று இளவரசன் பல்வேறு பெண்களுடன் தகாத உறவும், பல குற்றச் செயல்களும் செய்து வந்தார். அவர் இத்தலத்திற்கு வந்து இக்கோயிலின் தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டு பாவத்திலிருந்து நீங்கியதாக நம்பிக்கை உள்ளது.
  • சிவ பக்தர் ஒருவர் இக்கோயிலுக்கு வந்து வழிபாடு செய்ய வந்தபோது அவரின் ஆயுள் காலம் முடிந்து போகவே யமன் தன் கடமையைச் செய்ய வந்தார். பக்தனைக் காப்பாற்ற நந்தி யமனை நிறுத்தி தண்டித்தார். யமன் தன் தவறை உணர்ந்து சிவபெருமானிடம் மன்னிப்புக் கேட்டான். சிவபெருமான் அவரை மன்னித்து விடுவித்ததாக நம்பப்படுகிறது. இந்த கோவிலில் உள்ள நந்தி பலி பீடத்திற்கும் கொடி கம்பத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. மேலும், நந்தியின் தலை ஒரு பக்கம் திரும்பியுள்ளது.
கங்கை கிணறு

முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு இத்தலத்தில் ஸ்ரீதரவெங்கடேச ஐயாவாள் என்ற சிவபக்தர் வாழ்ந்தார். தனது மூதாதையர்களுக்கு வருடாந்திர சடங்கு செய்யும் போது விழா நிறைவடைவதற்கு முன் பசித்த பிச்சைக்காரர் ஒருவருக்கு உணவு வழங்கினார். பிராமணர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு அவரைப் புறக்கணித்து காசி சென்று புனித கங்கையில் நீராடி பாவத்தைக் கரைக்கும்படி கூறினர். ஸ்ரீதரவெங்கடேச ஐயாவாள் தனது வீட்டில் உள்ள கிணற்றில் கங்கையை அனுப்ப சிவனிடம் வேண்டினார். கிணற்றில் இருந்து கங்கை நீர் ஊருக்குள் வரத் தொடங்கியதால் கிராம மக்கள் அவரது காலில் விழுந்து வெள்ளத்தைத் தடுக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர். ஸ்ரீதரவெங்கடேச ஐயாவாள் இயல்பு நிலை திரும்ப சிவனிடம் வேண்டினார். கார்த்திகை மாதம் அமாவாசை நாளில் இந்தக் கிணற்றில் உள்ள தண்ணீரில் குளிப்பதை பக்தர்கள் விஷேஷமாக கருதுகின்றனர்.

கோவில் பற்றி

  • மூலவர்: சிவயோக நாதர், யோகானந்தேஸ்வரர், வில்வாரண்யேஸ்வரர், புராணேஸ்வரர்
  • அம்பாள்: சௌந்திரநாயகி, சாந்தநாயகி
  • தீர்த்தம்: ஜடாயு தீர்த்தம்
  • ஸ்தல விருட்சம்: வில்வம் மரம்
  • பதிகம்: திருஞானசம்பந்தர்
  • இரு நூற்று எழுபத்தியாறாவது தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் இதுவும் ஒன்று
  • நாற்பத்தி மூன்றாவது சிவஸ்தலம்.
  • இக்கோயிலில் உள்ள சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக உள்ளார்
  • ஸ்ரீதர வெங்கடேச ஐயவாள் பிறந்த இடம்
சிவயோகிநாதர் கோயில்

கோவில் அமைப்பு

சிவயோகிநாதர் கோயில் கிழக்கு நோக்கியது. இரண்டு நடைபாதைகள் உள்ளன. இதன் பிரதான கோபுரம் ஐந்து அடுக்குகள் கொண்டது. சிவன், பார்வதி தேவி சன்னதிகள் தவிர, விநாயகர், முருகன், கஜலட்சுமி, மகாலிங்கேஸ்வரர், நிருதி விநாயகர், நாக கன்னி, சப்த மடங்கள், லட்சுமி நாராயணர், சூரியன், சந்திரன், நவக்கிரகம் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. நடைபாதையில் லட்சுமி நாராயணர் சன்னதி உள்ளது. நாராயணரின் மடியில் லட்சுமி தேவி அமர்ந்திருக்கும் சிலை உள்ளது. நடைபாதையில் பஞ்ச லிங்கங்கள்(பூமி லிங்கம், ஜல லிங்கம், அக்னி லிங்கம், வாயு லிங்கம், ஆகாச லிங்கம்) உள்ளன. உய்யவந்த நாயனார் நால்வர் மற்றும் சேக்கிழார் சிலைகள் மாடவீதியில் வரிசையாக உள்ளன. சதுர்கால பைரவர், கைலாச நாதர், பால சனி, சண்டிகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி ஆகியோர் தனி சன்னதியில் உள்ளனர். கோஷ்டத்தில், நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை மற்றும் சண்டிகேஸ்வரர் சிலைகள் உள்ளன. இந்த கோயிலில் பலி பீடத்திற்கும் கொடி கம்பத்திற்கும் இடையில் நந்தி உள்ளது. பொதுவாக எல்லா கோவில்களிலும் பலி பீடத்திற்கும் நந்திக்கும் நடுவே கொடிமரம் வைக்கப்படும். இக்கோயிலில் எட்டு தீர்த்தங்களும், எட்டு மரங்களும் உள்ளன.

சிவயோகிநாதர் கோயில் காலபைரவர்
கால பைரவர்கள்

இங்கு 4 பைரவர் சிலைகள் வரிசையாக வைக்கப்பட்டு சதுர்கால பைரவர் என அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் நான்கு கால பைரவர்கள் உள்ளனர். அவை ஒவ்வொன்றும் ஒரு மனிதனின் ஆயுட்காலத்தின் ஒரு கட்டத்தைக் குறிக்கின்றன. அவை நான்கு யுகங்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றன.

  • ஞான கால பைரவர்: மனித வாழ்க்கையின் பிரம்மச்சரிய நிலை அவரது அறிவின் தேடலால் ஆதிக்கம் செலுத்துகிறது. ஞான பைரவர் தம் பக்தர்களுக்கு நல்ல கல்வி மற்றும் நல்ல வேலை வாய்ப்புகளை வழங்குகிறார்.
  • ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்: கிரஹஸ்தா கட்டத்தில், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் தனது பக்தர்களுக்கு தொழில் மற்றும் பொருள் லாபத்தில் சிறந்த வளர்ச்சியை வழங்குகிறார்.
  • உன்மத்த பைரவர்: வானபிரஸ்த கட்டத்தில், அவரது பக்தர்கள் நல்ல ஆரோக்கியம், நிதி நிலைத்தன்மை மற்றும் நல்ல அதிர்ஷ்டத்துடன் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.
  • யோக கால பைரவர்: வாழ்க்கையின் சன்யாச கட்டத்தில், ஒரு மனிதன் முழுவதுமாக கடவுளுக்கு அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும்.
சிவயோகிநாதர் கோயில் சிற்பங்கள்

சிற்பங்கள்

கருவறையின் சுவரில் பிரம்மாவும் விஷ்ணுவும் சிவபெருமானை வழிபடுவதைக் காட்டும் சிற்பம் உள்ளது.

சிறப்புகள்

  • சூரியன் ஒவ்வொரு ஆண்டும் சித்திரையில் மூன்று நாட்களுக்கு (1,2, 3-ம் தேதிகளில்) லிங்கத்தின் மீது தனது கதிர்களை செலுத்துவதன் மூலம் இந்த கோயிலின் சிவபெருமானை வழிபடுவதாக நம்பப்படுகிறது. இந்நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
  • இந்தக் கோயிலின் சுற்றுச்சுவரில் பார்வதி தேவியின் சன்னதிக்கு எதிரே ஒரு சூரியக் கடிகாரம் உள்ளது. இது காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலான நேரத்தைத் துல்லியமாகக் காட்டுகிறது. இந்த கடிகாரம் எண்ணூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. சோழர் காலக் கட்டிடக்கலைக்குச் சான்று.

வழிபாடு

  • பைரவர் சன்னதியில் ராகு காலத்தின் (மாலை 4.30-6) எட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் இஞ்சி எண்ணெய், கருப்பு மிளகு கொண்ட தீபங்களை ஏற்றி வைத்து வழிபடுவதன் மூலம் இழந்த சொத்து, செல்வத்தை திரும்ப பெறலாம் என்ற நம்பிக்கை உள்ளது.
  • லட்சுமி நாராயணரை ஷ்ரவண நட்சத்திரம், ஏகாதசி, அனைத்து சனிக்கிழமைகளிலும் வழிபடுவது மிகவும் மங்களகரமானது என்பது நம்பிக்கை.
  • யோக கால பைரவர், உத்தர கைலாச நாதர் ஆகியோரை பிரார்த்தனை செய்வதன் மூலம் பக்தர்கள் முக்தி அடையலாம் என்பது நம்பிக்கை.
  • அஷ்டமி நாட்களில் சதுர் கால பைரவர்களை வழிபடுவதன் மூலம் செல்வச் செழிப்பும், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகளும், நல்ல ஆரோக்கியமும், தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
  • பிரதோஷ நாட்களில் இங்குள்ள இறைவனை வழிபடுபவர்கள் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை.
  • ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இது பரிகார ஸ்தலம்

திறந்திருக்கும் நேரம்

  • காலை 7.30-12.30
  • மாலை 4.30-8

விழாக்கள்

  • ஆவணியில் விநாயகர் சதுர்த்தி
  • புரட்டாசியில் நவராத்திரி
  • ஐப்பசியில் ஸ்கந்த ஷஷ்டி, அன்னாபிஷேகம்
  • கார்த்திகையில் திரு கார்த்திகை, சோமாவரம்
  • தையில் மகர சங்கராந்தி
  • மாசியில் சிவராத்திரி
  • பிரதோஷம் தொடர்ந்து அனுசரிக்கப்படுகிறது

உசாத்துணை


✅Finalised Page