சிவபெருமான் திரு இரட்டைமணிமாலை
சிவபெருமான் திரு இரட்டைமணிமாலை பதினொன்றாம் திருமுறையில் 21-வதாக இடம்பெறும் திருமுறை. கபிலதேவ நாயனாரால் இயற்றப்பட்டது.
ஆசிரியர்
சிவபெருமான் திருவந்தாதியை இயற்றிய கபிலதேவ நாயனார் பொ.யு. 8-ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் என்று கருதப்பட்டாலும் இவர் இயற்றிய யாப்பு வகைகள் பிற்காலத்தவையாதலால் பொ.யு. 9-ம் நூற்றாண்டினை அடுத்து வாழ்ந்தவர் ஆக இருக்கலாம் என. க வெள்ளைவாரணனார் கருதுகிறார். இளம்பூரணர் தொல்காப்பியப் பொருள் அதிகாரச் செய்யுளியலில், கபிலநாயனார் இயற்றிய இரண்டு செய்யுட்களை மேற்கோள் காட்டியிருத்தலின் இக்கபிலர் இளம்பூரணர்க்கு முற்பட்டவர் எனக் கொள்ளலாம். இவர் பற்றிய வேறு செய்திகள் அறியக் கிடைக்கவில்லை.
நூல் அமைப்பு
சிவபெருமான் திருஇரட்டைமணிமாலை இரட்டை மணிமாலை என்னும் சிற்றிலக்கியத்தின் இலக்கணத்திற்கேற்ப நேரிசை வெண்பாவும் கட்டளைக் கலித்துறையும் ஆகிய இரு பாவகைகளில் மாறி மாறி அமைந்த 37 பாடல்களில் அந்தாதியாக அமைந்தது. இரு பாவகைகளும் ஒன்றன் பின் ஒன்றாக கோர்க்கப்பட்டு மணிமாலை போல் அமைகின்றன.
'இரட்டை மணிமாலை' என்பதற்குப் பதிலாக நூலின் பெயர் 'இணைமணி மாலை' என்று இருத்தல்வேண்டும் என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர். கிடைத்துள்ள பாடல்கள் - 37. 37 ஆவது பாடல் இப்பிரபந்தத்தின்இறுதிப்பாடல், அந்தாதியின் இலக்கணத்துக்கேற்ப முதற் பாடல் தொடங்கிய அதே சொல்லால் மண்டலித்து முடிய வேண்டும். அவ்வாறு முடியவில்லை.வெண்பாவும், கட்டளைக் கலித்துறையும் மாறி மாறி அந்தாதியாக வந்து, 20 பாடல்களில் முடிவது இரட்டைமணி மாலை. அவை அவ்வாறு வந்து, 100 பாடல்களில் முடிவது இணைமணி மாலை. எனவே இந்நூல் இணைமணிமாலை நூல் என்றும் எஞ்சிய பாடல்கள் கிடைக்கவில்லை என்றும் கருதப்படுகிறது. பதிப்புக்களில் 'இரட்டை மணிமாலை' என்றே பெயர் காணப்படுகிறது.
"கபிலதேவநாயனர் அம்மணிமாலை இரட்டை வடமாக அமையும் வண்ணம் நாற்பது செய்யுட்களாற் பாடியிருக்கலாம் எனவும் எண்ண இடமுண்டு. இந்தக் கருத்தின்படி 38, 39, 4 -ம் செய்யுள்கள் கிடைக்கவில்லை எனக் கூறுதல் பொருந்தும்" என வெள்ளைவாரணனார் குறிப்பிடுகிறார்.
பாடல் நடை
வெண்பா
அந்தி மதிமுகிழான்; அந்தியஞ்செந்நிறத்தான்;
அந்தியே போலும் அவிர்சடையான் - அந்தியின்
தூங்கிருள்சேர் யாமமே போலும் சுடுநீற்றான்
வீங்கிருள்சேர் நீல மிடறு.
கட்டளைக் கலித்துறை
மிடற்றாழ் கடல்நஞ்சம் வைக்கின்றஞான்று,மெல் லோதிநல்லாள்
மடற்றா மரைக்கைகள் காத்தில வே!மழுவாளதனால்
அடற்றா தையைஅன்று தாளெறிந் தாற்கருள்செய்தகொள்கைக்
கடற்றாழ் வயற்செந்நெல் ஏறும்வெண்காட்டெங் கரும்பினையே.
உசாத்துணை
பன்னிடு திருமுறை வரலாறு-க. வெள்ளைவாரணனார், தமிழிணைய மின்னூலகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-Dec-2024, 19:20:55 IST