சிவபுரம் இராஜராஜ ஈஸ்வரமுடைய மகாதேவர் திருக்கோயில்
இக்கோவில் காஞ்சிபுரம் மாவட்டம் சிவபுரம் எனும் ஊரில் அமைந்துள்ளது. முதலாம் இராஜராஜன் காலத்தைச் சேர்ந்த கற்றளியாக அறியப்படுகிறது. கட்டிடக்கலை, சிற்பங்களுக்கு மட்டுமல்லாது கல்வெட்டுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த கோவிலாகக் கருதப்படுகிறது.
அறிமுகம்
இக்கோவில் காஞ்சிபுரம் மாவட்டம் சிவபுரம் எனும் ஊரில் அமைந்துள்ளது. முதலாம் இராஜராஜன் காலத்தைச் சேர்ந்த கற்றளியாக அறியப்படுகிறது. இறைவன் இராஜராஜ ஈஸ்வரமுடைய மகாதேவர். 'தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை'யின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அமைவிடம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் தக்கோலத்திலிருந்து 9 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திருவள்ளூரிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் பேருந்துகளில் சிவபுரம் வந்தடையலாம்.
பெயர்க்காரணம்
முதலாம் இராஜேந்திரனின் 12-ம் ஆட்சியாண்டு வரை இவ்வூர் 'உரோடகம்' என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டுள்ளது. இம்மன்னனின் 13-ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு இவ்வூரினை இக்கோயிலுக்குத் தேவதானமாக அளித்து 'சிவபுரம்' என்று பெயர் சூட்டப்பட்டதைக் குறிப்பிடுகிறது. அது தொடர்ந்து, இவனின் 21-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு 'புரிசை நாட்டு சிவபுரத்து ராஜராஜ ஈஸ்வரமுடையார்' என்று குறிப்பிடுவதிலிருந்து இவ்வூருக்கு 'சிவபுரம்' என்ற பெயர் நிலைபெற்றுள்ளது எனலாம். எனினும் கல்வெட்டுகளில் பெரும்பாலும் உரோடகம் என்ற பெயரிலேயே இவ்வூர் வழங்கி வருகிறது.
அக்காலத்தில் இவ்வூர் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில் மணயிற் கோட்டத்தில் புரிசை நாட்டில் அமைந்திருந்தது.
தெய்வங்கள்
மூலவர் - இராஜராஜ ஈஸ்வரமுடைய மகாதேவர். தாயார் - காமாட்சி அம்மன்.
கோவில் பற்றி
இக்கோவிலின் ஆரம்பகால கல்வெட்டு முதலாம் இராஜராஜனுடையது. மேலும், இதன் கட்டிட அமைதி மற்றும் இறைவனின் பெயரைக் கொண்டு இது முதலாம் இராஜராஜன் காலத்தைச் சேர்ந்த கற்றளி என அறியப்படுகிறது. தலபுராணம், இலக்கிய குறிப்புகள் சார்ந்த தகவல்கள் இல்லை. கட்டிடக்கலை, சிற்பங்களுக்கு மட்டுமல்லாது கல்வெட்டுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த கோவிலாகக் கருதப்படுகிறது.
மிகவும் சிதைந்த நிலையில் இருந்த இக்கோவிலைத் தமிழ்நாடு தொல்லியல் துறையின் ஒன்பதாவது நிதிக்குழு புனரமைத்தது.
கோவில் கட்டிடக்கலை அமைப்பு
முழுவதும் கருங்கற்களால் எழுப்பப்பட்ட கற்றளி. கிழக்கு முகமாக அமைந்துள்ளது. விமானம், கருவறை, அந்தராளம், அர்த்தமண்டபம் மற்றும் மகாமண்டப அமைப்புகளுடன் உள்ளது. மகாமண்டபத்திற்கு அருகே இடப மண்டபமும் பலிபீடமும் அமைந்துள்ளன. விமானத்தின் அருகே தெற்குப் பகுதியில் விநாயகர் சன்னதி சிறு அறை வடிவில் அமைந்துள்ளது.
பிரகாரத்தின் வடக்குப் பகுதியில் சிறு மண்டப அமைப்புடன் சண்டேசர் சன்னதி உள்ளது. கையில் மழு ஏந்தியபடி சண்டேசர் சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். ஜடாபாரம் தரித்துள்ளார். கண்டிகை, அரும்புச்சரம், பூணூல், தோள்வளை, கைவளை, உதரபந்தம் ஆகியன அணிந்துள்ளார்.
விமானம் மற்றும் அர்த்த மண்டபம் முதலாம் இராஜராஜனின் ஆட்சிக்காலத்திலும் பிற கட்டுமானங்கள் முதலாம் இராஜேந்திரனின் ஆட்சிக்காலத்திலும் அமைக்கப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.
தாயாருக்குத் தனிச் சன்னதி இல்லை.
கருவறையும் மண்டபங்களும்
கருவறையில் மூலவர் லிங்க வடிவில் காட்சி தருகிறார். அர்த்தமண்டபப் பகுதியில் தெற்கு முகமாக தாயார் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
அர்த்தமண்டப முகப்பில் இரு புறங்களிலும் கோஷ்டத்தில் துவாரபாலகர்கள் உள்ளனர்.
தெற்கில் அமைந்துள்ள துவாரபாலகர் ஊர்த்துவஜானுவில் நிற்கிறார். கரண்ட மகுடம் தரித்து விரிசடை கொண்டுள்ளார். கரங்களில் விஸ்மயம், சூசி மற்றும் பல்லவ முத்திரை பிடித்துள்ளார். கையில் நாகம் ஏந்தியுள்ளார். பத்ரகுண்டலங்கள், கண்டிகை, சரப்பளி, அரும்புச்சரம், வாகுமாலை, தோள்மாலை, தோள்வளை, கைவளை, பூணூல், உதரபந்தம், தாரகைச்சும்மை ஆகியன அணிந்துள்ளார். இடைக்கட்டுடன் மரவுரி ஆடை அணிந்துள்ளார். வடக்கில் அமைந்துள்ள துவாரபாலகர் வைஷ்ணவ ஸ்தானகத்தில் நிற்கிறார். கரண்ட மகுடம் தரித்து விரிசடை கொண்டுள்ளார். கரங்களில் விஸ்மயம், சூசி மற்றும் பல்லவ முத்திரை பிடித்துள்ளார். கையில் நாகம் ஏந்தியுள்ளார். பத்ரகுண்டலங்கள், கண்டிகை, சரப்பளி, அரும்புச்சரம், வாகுமாலை, தோள்வளை, கைவளை, பூணூல், மணியாரம், உதரபந்தம், தாரகைச்சும்மை ஆகியன அணிந்துள்ளார். இடைக்கட்டுடன் மரவுரி ஆடை அணிந்துள்ளார்.
மகாமண்டபம் நான்கு முழுத் தூண்களும் நான்கு அரைத்தூண்களும் கொண்டுள்ளது. தூண்கள் வட்ட வடிவில் அமைந்துள்ளன. இங்கு தெற்கு முகமாக வாயில் அமைக்கப்பட்டுள்ளது.
மகாமண்டபத்து வடக்கு பகுதியில் உள்ள பூதகணங்களின் வரிசையில், நடுவே பஞ்சதந்திர கதைக் காட்சி உள்ளது. இரு அன்னப்பறவைகள் ஒரு குச்சியின் இரு முனைகளையும் அலகால் பிடித்துக் கொண்டு பறக்க, நடுவே ஒரு ஆமை அந்தக் குச்சியை வாயால் கவ்வி அவற்றோடு பறக்கும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
விமானம்
விமானம் அதிஷ்டானம், பாதவர்க்கம், பிரஸ்தாரம், கிரீவம், சிகரம், ஸ்தூபி ஆகிய பகுதிகளுடன் ஏகதள விமானமாக அமைந்துள்ளது. இதைத் தொடர்ந்த அந்தராளம், அர்த்த மண்டபம் மற்றும் மகாமண்டபப்பகுதிகளின் புறக்கட்டுமானம் அதிஷ்டானம் முதல் பிரஸ்தாரம் வரை அமைந்துள்ளது. அதிஷ்டானப் பகுதி உபானம், ஜகதி, திரிபட்டைக் குமுதம், கண்டம், பட்டிகை, கண்டம், வேதிகை அமைப்புடன் உள்ளது. பாதபந்த அதிஷ்டானமாக வகைப்படுத்தப்படுகிறது.
பாதவர்க்கப் பகுதியில் பிரம்மகாந்தத் தூண்கள் மற்றும் பத்ர கோஷ்டங்கள் உள்ளன. தூண்கள் மாலாஸ்தானம், கலசம், ஆமலகம், இதழ், பலகை, வீர கண்டம், போதிகை அமைப்புகளுடன் உள்ளன. கோஷ்டங்கள் இரு அரைத்தூண்களும் மகர தோரணமும் கொண்டுள்ளன. பத்ர கோஷ்டங்களில் அழகிய தெய்வச் சிற்பங்கள் உள்ளன.
பிரஸ்தாரப் பகுதியில் நாசிகைகள், கோடிப்பாளை கருக்குகள் கொண்ட கபோதம் உள்ளது. வலபி, வாஜன பகுதியில் இசைத்தும் நடனமிட்டும் பூதகணங்கள் உள்ளன. மேலே வியாளவரி உள்ளது.
கிரீவப் பகுதியில் நான்கு திக்குகளிலும் இடபம் உள்ளது. இதன் கோஷ்டங்களில் சுகாசன மூர்த்தி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா ஆகிய சிற்பங்கள் உள்ளன. வலபி வாஜன பகுதியில் வியாள வரி உள்ளது.
சிகரம் வேசர பாணியில் அமைந்துள்ளது. நான்கு திசைகளிலும் மகாநாசிகை அமைந்துள்ளது. மேலே கல்லால் அமைக்கப்பட்ட ஸ்தூபி உள்ளது.
பாதவர்க்க கோஷ்ட சிற்பங்கள்
கோஷ்டங்களில் விநாயகர், ஆலமர் செல்வன், லிங்கோத்பவர், நான்முகன், கொற்றவை ஆகிய சிற்பங்கள் உள்ளன.
விநாயகர்
தெற்கு முகமாக லலிதாசனத்தில் அமர்ந்துள்ளார். கரண்ட மகுடம் தரித்துள்ளார். கரங்களில் மழு, பாசம், உடைந்த தந்தம் ஏந்தியுள்ளார். தும்பிக்கை இடது கரத்தில் உள்ள மோதகத்தை எடுக்க விழைகிறது. காதுகளில் மலர் மொட்டுகள் உள்ளன. கண்டிகை, அரும்புச்சரம், பூணூல், உதரபந்தம், கைவளை ஆகியன அணிந்துள்ளார். இருபக்கம் சாமரமும் மேலே குடையும் உள்ளது. பின்னணியில் பிரபை காட்டப்பட்டுள்ளது. பத்மபீடத்தில் மூஷிகம் உள்ளது.
ஆலமர் செல்வன்
தெற்கு முகமாக வீராசனத்தில் கல்லாலமரத்தடியில் அமர்ந்துள்ளார். வலது கால் முயலகனை அழுத்தியபடி உள்ளது. ஜடாபாரம் தரித்துள்ளார். கரங்களில் அக்கமாலை, சுடர், சுவடி ஏந்தியுள்ளார். வியாக்கியான முத்திரை பிடித்துள்ளார். மகரக்குழை, பத்ரகுண்டலம், கண்டிகை, அரும்புச்சரம், சவடி, முத்தாரம், பூணூல், வாகுமாலை, தோள்வளை, கைவளை, உதரபந்தம் ஆகியன அணிந்துள்ளார். கீழே வன மிருகங்கள் காட்டப்பட்டுள்ளன. கல்லாலமரத்தின் கிளைகள் விஸ்தாரமாகக் காட்டப்பட்டுள்ளன. அவற்றில் நாகமும் துணிப்பையும் தொங்குகின்றன. மத்தியில் இரு கூகைகள் காட்டப்பட்டுள்ளன.
லிங்கோத்பவர்
மேற்கு முகமாக ஜோதி வடிவில் காட்சிதருகிறார். அடியும் முடியும் மறைந்து அறியமுடியாமையாய் உள்ளன. ஜடாமகுடம் தரித்துள்ளார். மேற்கரங்களில் மான், மழு ஏந்தியுள்ளார். கீழ்கரங்களில் அபயம் மற்றும் ஊரு ஹஸ்தம் பிடித்துள்ளார். பத்ரகுண்டலம், மகரக்குழை, கண்டிகை, சரப்பளி, அரும்புச்சரம், முத்தாரம், வாகுமாலை, தோள்மாலை, தோள்வளை, கைவளை, பூணூல், உதரபந்தம், தாரகைச்சும்மை ஆகியன அணிந்துள்ளார். மரவுரி ஆடை உடுத்தியுள்ளார். மேலே அன்னப்பறவையின் மீது அமர்ந்தபடி பிரம்மா முடி காணச் செல்கிறார். கீழே வராக ரூபத்தில் விஷ்ணு அடி காணச் செல்கிறார்.
நான்முகன்
வடக்கு முகமாக சமபாத ஸ்தானகத்தில் நிற்கிறார். ஜடாமகுடம் தரித்துள்ளார். மேற்கரங்களில் அக்கமாலை, குண்டிகை ஏந்தியுள்ளார். கீழ்கரங்களில் அபயம் மற்றும் ஊரு ஹஸ்தம் பிடித்துள்ளார். குண்டலங்கள், கண்டிகை, சரப்பளி, அரும்புச்சரம், வாகுமாலை, தோள்வளை, கைவளை, பூணூல், உதரபந்தம், தாரகைச்சும்மை ஆகியன அணிந்துள்ளார். பட்டாடை உடுத்தியுள்ளார்.
கொற்றவை
வடக்கு முகமாக வைஷ்ணவ ஸ்தானகத்தில் நிற்கிறார். கரண்ட மகுடம் தரித்துள்ளார். மேற்கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியுள்ளார். கீழ்கரங்களில் அபயம் மற்றும் ஊரு ஹஸ்தம் பிடித்துள்ளார். பத்ரகுண்டலங்கள், கண்டிகை, சரப்பளி, அரும்புச்சரம், சவடி, வாகுமாலை, தோள்மாலை, தோள்வளை, கைவளை, சன்னவீரம், மார்புக்கச்சை, தாரகைச்சும்மை, குறங்குசெறி, சிலம்பு ஆகியன அணிந்துள்ளார். மரவுரி சிற்றாடை உடுத்தியுள்ளார். பின்னணியில் திருவாசி அமைப்பு உள்ளது.
கல்வெட்டுகள்
இக்கோவிலில் மொத்தம் 22 கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
| மன்னன் | கல்வெட்டுகள் |
|---|---|
| முதலாம் இராஜராஜன் | 1 |
| முதலாம் இராஜேந்திரன் | 17 |
| முதலாம் இராஜாதிராஜன் | 1 |
| முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் | 2 |
| கைக்கோளப் படை (பொ.யு 18) | 1 |
நிலக்கொடை
முதலாம் இராஜராஜனின் 24-ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, உரோடகத்து ஊரார்கள் இறைவனுக்கு முன்னர் இறையிலி தேவதானமாகக் கொடையளித்த நிலத்தை நீக்கி மற்றொரு நிலத்தை இறையிலி தேவதானமாக விற்றுக் கொடுத்த செய்தியைத் தெரிவிக்கிறது. இந்தச் சாசனத்தை ஊரார் சொல்ல எழுதியவர், வைகானஸன் கேசவ சங்கர நாராயணன் ஆவார்.
வாய்க்கால் கொடை
முதலாம் இராஜேந்திரனின் 7-ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, ஸ்ரீ மதுராந்தக சேரியிலுள்ள ஏரிக்குப் பாலாற்றிலிருந்து நீர் பாய்கின்ற வாய்க்காலை, இறைவனுக்கு இறையிலி தேவதானமாகக் கொடையளித்து ஊரார்கள் கல்லில் வெட்டுவித்த செய்தியைச் சொல்கிறது.
விளக்குக் கொடைகள்
நந்தா விளக்கு
முதலாம் இராஜேந்திரனின் 8-ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, இக்கோவிலில் இரு நந்தா விளக்குகள் எரிக்க மன்னனே 180 ஆடுகள் கொடையளித்த செய்தியைச் சொல்கிறது.
முதலாம் இராஜேந்திரனின் 12-ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, அமணிவல்லவன் இராஜராஜனான இராஜேந்திரசோழ இருங்கோளர் தேவியார் தேவன் பொன்னாலியார் என்பவள், இக்கோவிலில் நந்தா விளக்கு எரிக்க 90 ஆடுகள் தானமாக வழங்கியதைச் சொல்கிறது.
சந்தி விளக்கு
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் 15-ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, கூவம் என்ற தாடக சமுத்திரநல்லூரைச் சேர்ந்த வாசுதேவன் காரானை விழுப்பரையன் என்பவரின் மகள் ஆறைச்சியார் என்பவள் இறைவனுக்குச் சந்தி விளக்கு எரிப்பதற்கு ஒன்பது பணம் கொடையளித்துள்ள செய்தியைச் சொல்கிறது.
பொன் கொடை
முதலாம் இராஜேந்திரனின் 21-ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, இறைவனுக்கு அமுது படைப்பதற்காகவும் வேதம் ஓதும் பிராமணர்கள் ஐவருக்கு உணவளிப்பதற்காகவும், நீலன் வெண்காடன் என்பவன் இருபத்தைந்து கழஞ்சு பொன் வழங்கியதைச் சொல்கிறது.
ஆபரணக் கொடை
முதலாம் இராஜேந்திரனின் 9-ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, அவனே இறைவனுக்கு பொன் ஆபரணங்கள் செய்தளித்த தகவலைச் சொல்கிறது. இதில் அணிகலன்களின் பெயரும், எடையும் கூறப்பட்டதுடன் அவற்றில் பதிக்கப்பட்ட மாணிக்கம், வைரம் போன்றவையும் குறிப்பிடப்பட்டுள்ளன. இறைவனுக்கும் அவரது தேவியருக்கும் ஆபரணங்கள் மன்னனின் பெயரிலேயே செய்தளிக்கப்பட்டிருக்கின்றன. அவை, ஸ்ரீ இராஜேந்திர சோழன் இட்ட பொற்பூ, ஸ்ரீ இராஜேந்திர சோழன் பொன்னின் தளிகை, ஸ்ரீ இராஜேந்திர சோழன் மண்டை, ஸ்ரீ இராஜேந்திர சோழன் பட்டம், ஸ்ரீ இராஜேந்திர சோழன் வெண்சாமரை.
பிற ஆபரணங்கள்: திருமாலை, தோடு, வாகுவலையம், திருக்கைய்க்காறை, திருக்காற்காறை, பாதசாயல், பட்டிகை.
தெய்வங்கள்
முதலாம் இராஜேந்திரனின் 8 & 13-ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, இங்கு திரிபுராந்தகர் மற்றும் நம்பிராட்டியார் திருமேனிகள் இருந்ததாகக் குறிப்பிடுகின்றன.
திருவிழாக்கள்
முதலாம் இராஜேந்திரனின் 21-ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில், ஐப்பசி மாதம் நடைபெற்ற திருவேட்டைத் திருவிழா பற்றிய குறிப்புகள் உள்ளன.
முதலாம் இராஜாதிராஜனின் 27-ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, ஞாயிறுதோறும் 'ஆதித்தவாரப் பெரும்பலி' எனும் சிறப்பு வழிபாடு நடைபெற்ற செய்தியைச் சொல்கிறது.
இறைப்பணி புரிபவர்கள்
ஆத்திதவாரப் பெரும்பலி நிகழ்விற்காக திருவாராதனை செய்வார், திருவுண்ணாளிகை உடையார், மாணிகள், பதியார், பஞ்சாசாரியார், வீணை வாசிப்பான், உடுக்கை வாசிப்பான், பாடவியன் உள்ளிட்ட உவச்சர், கவரி பிணாக்கர், திருப்பள்ளித் தொங்கலிடுவார், கணக்கன், பண்டாரி, திருமெய்க்காப்பார், திருப்பள்ளித் தாமம் பரித்துத் தொடுப்பான், விளக்குப் பிடிப்பார், கொடி பிடிப்பார் ஆகிய இறைபணியாளர்கள் நியமிக்கப்பட்ட விவரம் அக்கல்வெட்டு மூலம் அறியக் கிடைக்கிறது.
அரசு பதவி
முதலாம் இராஜேந்திரனின் 13-ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில், இந்நகரக் கரணத்தான் பிராமணன் வலியடக்கி தோளனான ஆயிரபட்டன் என்பவர் இந்நகரத்தின் கணக்கு எழுதும் காணியை (உரிமையை) விலைக்கு வாங்கி எழுதுவதற்கு இக்கோவிலில் திருவிளக்கெரிக்க 180 ஆடுகள் கொடையளித்த செய்தியைக் கூறுகிறது. அவர் பெயரைக் குறிப்பிடும்போது நகரக்கணக்கு எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால் கணக்குக் காணியை விலைக்கு வாங்கி பதவியில் அமர்ந்த பின்னர் செய்யப்பட்ட கொடை என்பதும் தெரியவருகிறது.
வட்டியும் வருவாயும்
முதலாம் இராஜேந்திரனின் 11-ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில், நீர்வேளூர் சபையார் இக்கோவில் பண்டாரத்திலிருந்து 20 கழஞ்சு பொன் பெற்றுக்கொண்டு, கழஞ்சு ஒன்றிற்கு வட்டியாக 'ராஜகேசரி' என்றும் அளவையால் ஒரு கலம் இரு தூணி நெல் ஆக வருடம் ஒன்றிற்கு 33 கலம், தூணி நெல்லும் பண்டாரத்தில் கொண்டுவந்து கொடுக்கச் சம்மதித்துள்ளனர்.
சமையல் பொருட்கள்
முதலாம் இராஜேந்திரனின் 21-ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில், இக்கோவில் சிவபிராமணர்களுக்கு நெல், நெய், புழுக்குக்கறி, மிளகுப்பொடி கலந்த கறி, மரக்கறி, மிளகு, உப்பு, தயிர், பாக்கு, வெற்றிலை, விறகு ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டதைக் குறிப்பிடுகிறது.
அளவை முறைகள்
முதலாம் இராஜாதிராஜனின் 27-ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் உரி, நாழி, குறுணி, பதக்கு, தூணி, கலம் போன்ற முகத்தல் அளவைகளும், 'ராஜகேஸரி' என்ற அளவைமுறையும் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை நெல், நெய் போன்றவற்றை அளப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
முதலாம் இராஜேந்திரனின் 21-ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் காசு, கழஞ்சு, மஞ்சாடி போன்ற நிறுத்தல் அளவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை பொன் அளப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.
முதலாம் இராஜேந்திரனின் 26-ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, கன்றூர் நாட்டு சோழவிச்சாதிர சதுர்வேதி மங்கலத்துச் சபையார் இக்கோவிலுக்கு நிலம் ஒன்றினை இறையிலி தேவதானமாக பத்து 'இராஜராஜன்' காசுகள் பெற்றுக்கொண்டு நிலவிலையாவணம் செய்து கொடுத்ததைக் குறிப்பிடுகிறது.
உசாத்துணை
- சிவபுரம் - ப. சகிலாபானு, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு
- Middle Chola Temples - S. R. Balasubrahmanyam
- காஞ்சிபுரம் மாவட்ட தொல்லியல் கையேடு, பக்கம்: 184 - 185
- தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள்: தொகுதி IV (காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்), தொடர் எண்: 501 - 522
- சிவபுரம் இராஜராஜீஸ்வரமுடைய மகாதேவர் கோவில்-சரவணமணியன்
- சிவபுரம் இராஜராஜீசுவரமுடைய மகாதேவர் கோயில்-கி.ஶ்ரீதரன், வரலாறு.காம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Sep-2026, 19:46:39 IST
