under review

சிவதோத்திர ஆத்திசூடி

From Tamil Wiki
ஆத்திசூடி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ஆத்திசூடி (பெயர் பட்டியல்)

சிவதோத்திர ஆத்திசூடி, ஔவையாரின் ஆத்திசூடியை முன்னோடியாகக் கொண்டு இயற்றப்பட்ட நூல். இந்நூல் எப்போது, யாரால் இயற்றப்பட்டது என அறிய இயலவில்லை. நூலின் தொடக்கத்தில் 'ஔவையார் இயற்றிய சிவ தோத்திர ஆத்திசூடி' என்ற குறிப்பு காணப்படுகிறது.

நூல் குறிப்பு

சிவதோத்திர ஆத்திசூடியின் காலம், ஆசிரியர், பதிப்பாளர் விவரங்கள் கிடைக்கவில்லை. நூலின் இறுதிக் குறிப்பு மூலம் ஔவையார் இயற்றிய நூல்களுள் ஒன்றாக அறியப்படுகிறது. தமிழ் இணையக் கல்விக்கழக நூலகத்தில் இந்நூல் சேகரிக்கப்பட்டுள்ளது.

நூல் அமைப்பு

நூலின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்தாக ஔவையாரது விநாயகர் அகவலின் இறுதி வரிகளான

"தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயகன் விரைகழல் சரணே"

- என்ற ஔவையாரது விநாயகர் அகவலின் இறுதி வரிகளும், தொடர்ந்து, ஆத்திசூடிப் பாடலின் கடவுள் வாழ்த்தின்

"ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே"

- என்ற வரிகளும், தொடர்ந்து,

"ஆறே சூடி நீறே பூசி
ஏறே ஏறும் ஈசனைக் கூறாய்
கூறாய் நாவே
குறையில்லை நமக்கே"

என்ற பாடலும் இடம்பெறுகின்றன.

உள்ளடக்கம்

சிவதோத்திர ஆத்திசூடி நூல் சிவத் துதியாக 'அரனடி பணி, ஆரணி கடவுள், இளம்பிறை சூடி என அகர வரிசையில் தொடங்கி, கண்டங் கறுத்தோன், கால காலன், கிஞ்சுக வாயன், கீதப் பிரியன் என ககர வரிசையில் தொடர்ந்து, 'வெள்ளை விடையன், வேதநாயகன், வையகம் புரந்தோன்' என வகர வரிசையில் நிறைவு பெறுகிறது.

பாடல்

சைவத் தலைவன்
சொற்படு வேதியன்
சோதியாய் நின்றோன்
தந்தையிற் சிறந்தோன்
தாயிலு மினியன்
திங்கள் சூடி
தீவினை தீர்ப்போன்
துன்பங் களைவோன்
தூய மேனியன்
தெய்வ நாயகன்
தேவாதி தேவன்
தையல் பாகன்
மான்மழு வேந்தி
மீன்வலை வீசி
முக்கண் இறைவன்

மதிப்பீடு

சிவதோத்திர ஆத்திசூடி இளையோர்களுக்கு அறிவுரை கூறும் பக்தி சார்ந்த நூலாக அறியப்படுகிறது.

உசாத்துணை

‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-Jul-2024, 17:58:03 IST