under review

சிவகுருநாதப்பிள்ளை

From Tamil Wiki
சிவகுருநாதப்பிள்ளை

சிவகுருநாதப்பிள்ளை(சிவா பிள்ளை) (பிறப்பு: மே 9, 1942) கணித்தமிழ் அறிஞர், பேராசிரியர். கணிப்பொறித் தொழில் நுட்பம் மூலம் புலம்பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிக்கும் முறையை எளிமைப்படுத்தினார்.

பிறப்பு, கல்வி

சிவகுருநாதப்பிள்ளை இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் சிவ.கணபதி பிள்ளை, நாகம்மா இணையருக்கு மே 9, 1942-ல் பிறந்தார். இந்துக்கல்லூரியில் பத்தொன்பது வயது வரை கல்வி பயின்றார். ஆசிரியர் பயிற்சியை இலங்கை கோப்பாய்க் கிறித்தவக்கல்லூரியில் பயின்றார். பொறியியல் படிப்பைக் கொக்குவில் தொழில்நுட்பக்கல்லூரியில் பகுதி நேரமாகப் பயின்றார். இலங்கையில் தமிழ் மாணவர்கள் படிப்பதில் இருந்த இடையூறு காரணமாக லண்டனுக்கு 1967-ல் படிக்கச் சென்றார். சிவப்பிள்ளை தமிழ், ஆங்கிலம், சிங்களம், சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகள் அறிந்தவர்.

தனிவாழ்க்கை

சிவகுருநாதப்பிள்ளை 1975-ல் ஞானபூபதியைத் திருமணம் செய்து கொண்டார். மூன்று மகள்கள். லண்டனில் தொழில்நுட்ப உதவியாளராகப் பகுதிநேரப் பணியில் ஈடுபட்டார். பகுதிநேரமாக கணிப்பொறி, தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளை முடித்தார்.

பல்தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றில் கணிப்பொறி ஆய்வாளராகப் (1977-1980) பணிபுரிந்தார்.

1980-ல் லண்டன் பல்கலைக்கழகத்தின் கோல்ட்ஸ்மித் கல்லூரியில் (Goldsmiths, University of London) பேராசிரியராகப் பணியேற்றார். லண்டன் பல்கலைக்கழகத்தில் கணிப்பொறிகள் அறிமுகமானபோது ஆசிரியர்களுக்கு கணிப்பொறிப் பயிற்சி அளித்தார். கோல்ட்ஸ்மித்தின் கல்வியியல் துறையின் இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றார்.

தமிழ் கல்விப்பணி

சிவகுருநாதப்பிள்ளை பல நாடுகளுக்குச் சென்று தமிழ்க்கல்வி பயிற்றுவிப்பது தொடர்பாக பல கட்டுரைகளைக் கருத்தரங்குகளுக்காக எழுதி வழங்கினார். அயலகச்சூழலில் வாழும் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பித்தார். கணிணி மூலமாகத் தமிழ்க் கல்வி கற்பிக்கும் முறையை உருவாக்கினார்.

1980-ல் லண்டன் பல்கலைக்கழகத்தின் கோல்ட்ஸ்மித் கல்லூரியில் கணிப்பொறி அறிமுகமானபோது கணிப்பொறி பயிற்றுவிக்கும் பணியை ஏற்று 1985-ல் ஆசிரியர்களுக்குக் கணிப்பொறியைப் பயிற்றுவிக்கும் பணியில் ஈடுபட்டார். 1995-ல் லண்டனில் தொடக்கப்பள்ளிகளில் புலம்பெயர்ந்தவர்களின் குழந்தைகளுக்கு தாய்மொழியைக் கற்பிக்கும் திட்டத்தின்கீழ் கணிணி மூலம் தமிழ்மொழியப் பயிற்றுவிக்கும் முயற்சியைத் தொடங்கினார். உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) – International Forum for Information Technology in Tamil (INFITT) என்ற அமைப்பை நிறுவியவர்களுள் இவர் முக்கியமானவர்.

கோல்ட்ஸ்மித் கல்லூரியின் மேன்மைக் கல்வித்(Edexcel iGCSE) தேர்வு வாரிய முதன்மைத்தேர்வாளராகவும்(தமிழ்), உலகளாவிய தமிழ்ப்பள்ளியின் தலைவராகவும் பணியாற்றினார்.

தமிழ் மாணவர்கள் எளிதாகத் தமிழ் மொழியைக் கற்கப் பல ஆய்வுகளைச் செய்து குறுவட்டுகளையும் நூல்களையும் சிவகுருநாதப் பிள்ளை உருவாக்கினார். காணொளி வழியாகத் தமிழ் கற்பிப்பது என்ற அடிப்படையில் இவர் பல ஆய்வுளைச் செய்தார். மின் வெண்பலகை வழி கற்பிக்கும் (INDIRECTIVE WHITE BOARD) முறையைக் கண்டு பிடித்தார். தமிழ் கற்ற மாணவர்களுக்கு கல்விச் சலுகைகள், ஊக்கத்தொகை போன்றவை கிடைக்க வழிவகை செய்தார்.

விருதுகள்

  • சிவகுருநாதப்பிள்ளையின் தமிழ்க் கல்விப் பணியைப் பாராட்டி லண்டனில் இவருக்கு EAL விருது வழங்கப்பட்டது.

உசாத்துணை


✅Finalised Page