under review

சிலாங்கூர் ரிவர் தோட்டத் தமிழ்ப்பள்ளி

From Tamil Wiki
SJKT SELANGOR RIVER .jpg

சிலாங்கூர் ரிவர் தோட்டத் தமிழ்ப்பள்ளி மலேசியாவின் சிலாங்கூரில் அமைந்துள்ள தமிழ்ப்பள்ளி. இப்பள்ளி கோல சிலாங்கூர் மாவட்டத்தைச் சார்ந்த பெஸ்தாரி ஜெயா எனும் பகுதியில் அமைந்துள்ளது.ப

வரலாறு

ஆரம்பக்காலக்கட்டத்தில் ரப்பர் தோட்டமாக இருந்த சிலாங்கூர் ரிவர் தோட்டத்தில் டிவிஷன்களுக்கேற்ப எல்லாப் பகுதிகளிலும் குடிசை போன்று தமிழ்ப்பள்ளிகள் இயங்கி வந்தன. 1914-ம் ஆண்டு தொடங்கி ஆங்கில ஆட்சியாளர்களும் இத்தோட்டத்தில் வசித்த மாணவர்களும் இப்பள்ளியைப் பாதுகாத்து வந்தனர்.

பின்னர் தோட்டத் தொழிலாளர்கள் வேறு இடங்களுக்கு மாற்றலாகிச் செல்லத் தொடங்கியவுடன் டிவிஷன்களுக்கேற்ப இயங்கிய குடிசை போன்ற தமிழ்ப்பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. இதனால், பள்ளிகள் இணைக்கப்பட்டு இரண்டு டிவிஷன்களில் மட்டும் பள்ளிகள் இயங்கி வந்தன.

ஒரு பள்ளி சாலை ஓரத்திலும், மற்றொரு பள்ளி தோட்டத்தின் உட்புறத்திலும் இயங்கின. சாலை ஓரத்தில் இயங்கிய பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்தது. இறுதியில், 1930-ம் ஆண்டு அனைத்து மாணவர்களும் சாலை ஓரத்தில் இயங்கிய பள்ளியில் சேர்க்கப்பட்டனர். இப்பள்ளிக்குச் சிலாங்கூர் ரிவர் தோட்டத் தமிழ்ப்பள்ளி என்ற பெயரும் சூட்டப்பட்டது.

1959-ம் ஆண்டில் பணியாற்றியவர்கள்

ஆசிரியர் திரு. நாராயணசாமி முதல் தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டார். 300-க்கும் அதிகமான மாணவர்கள் இங்குப் பயின்றனர். பின்னர் தோட்டத் தொழிலாளிகள் நகரங்களுக்கு மாற்றலாகிச் சென்றதால் மெல்ல மாணவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.

கட்டிடம்

1945-ம் ஆண்டு பள்ளிக்கு இரண்டு மாடிக் கட்டிடம் கட்டப்பட்டது. சிலாங்கூர் ரிவர் தோட்ட மக்களின் இடைவிடாத முயற்சியினால், இப்பள்ளியின் கட்டிடம் தொடர்ந்து சீர் செய்யப்பட்டு நூல் நிலையம், ஆசிரியர் அறை, பள்ளி அலுவலகம் ஆகிய 3 அறைகளும் கூடுதலாகக் கட்டப்பட்டன.

1945-ம் ஆண்டு அடைமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு பள்ளியின் பொருள்கள் சேதமடைந்தன. பொது மக்களின் முயற்சியால் இப்பள்ளியின் கட்டிடம் மீண்டும் சீர் செய்யப்பட்டது. கூடுதலாக அறிவியல் கூடமும், வேலி ஓரத்தில் அறிவியல் தோட்டமும் அமைக்கப்பட்டன.

2006-ம் ஆண்டு வகுப்பறைகளின் சுவர்களில் வண்ணப்படங்களும், மாநிலக் கொடிகளும் வரையப்பட்டன. அக்டோபர் 2007-ல், பள்ளிக் கட்டிடங்களுக்கு மீண்டும் வண்ணம் பூசப்பட்டது.

புதிய இணைக்கட்டிடம்

ஏப்ரல் 2009-ம் ஆண்டு மூன்று அறைகளுடன் புதிய இணைக்கட்டிடம் ஒன்று மலேசிய இந்திய காங்கிரசின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ச. சாமிவேலுவின் தலைமையில், கோல சிலாங்கூர் பொதுப் பராமரிப்பு இலாகாவால் கட்டப்பட்டது. பொதுப் பராமரிப்பு இலாகா ஏப்ரல் 2009-ல் இக்கட்டடத்தைப் சிலாங்கூர் ரிவர் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு வழங்கியது.

1959ஆம் ஆண்டின் குழுப்படம்

மே 16, 2009-ல் பொதுப் பராமரிப்பு இலாகாவால் வழங்கப்பட்ட கட்டிடம் தீவிபத்துக்குள்ளானது. தீவிபத்துக்குப் பிறகு பள்ளிக்கு உடனடியாக ஆறு வகுப்பறைகள், பொருள் கிடங்கு, உணவறை,வாழ்வியல் அறையோடு கணினி அறையையும் ஒருங்கே கொண்ட பள்ளிக் கட்டிடம் கட்டும் நடவடிக்கை டத்தோஸ்ரீ ச. சாமிவேலுவால் மேற்கொள்ளப்பட்டது. 2011-ம் ஆண்டு முதல் பள்ளியில் பாலர் பள்ளி கட்டப்பட்டு சிறப்பாக இயங்கி வருகின்றது.

இன்றைய நிலை

சிலாங்கூர் ரிவர் தோட்டத் தமிழ்ப்பள்ளி தற்போது பல்வேறு வசதிகளுடன் வளர்ச்சியடைந்து சிறப்பாக இயங்கி வருகின்றது.

உசாத்துணை

  • க. முருகன், சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் (2015).
  • மலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்க்கல்வியின் மேம்புகழ் (2016).


✅Finalised Page