under review

சிற்ப அளவு முறைகள்

From Tamil Wiki
மானாங்குலம் (8 நெல் அகலம்)

சிற்பப் படிமங்களை அளவிட மரபான அளவீட்டு முறைகளே பயன்படுத்தபடுகின்றன. மரபாக நிலம், கட்டிடங்கள், அறைகலன்கள், தேர்வாகனங்கள் ஆகியவற்றை அளக்க வெவ்வேறு நீட்டல் முறை அளவீடுகள் வழக்கத்தில் இருந்துள்ளன. சிற்பங்களுக்கென மரபான நீட்டல் முறையில் உருவாக்கப்பட்ட அளவீட்டு முறைகளே இன்றும் பயன்படுத்தப்படுகின்றன.

அளவீட்டு முறை

மரபாக இந்தியாவில் நிலம், வீடுகள், சாலைகள், கோவில்கள், தேர் வாகனங்கள், மரச்சாமான்கள், சிற்பங்கள் ஆகியவற்றை அளப்பதற்கு வெவ்வேறு நீட்டல் வகை அளவீட்டு முறைகள் வழக்கத்தில் இருந்துள்ளன. இப்போது பிற துறைகளில் நவீன அளவீட்டு முறைகளே பெரும்பாலும் பயன்படுத்தபடுகின்றன. சிற்பக்கலையை அறியவும் தொடர்ந்து பயிலவும் மரபான அளவீட்டு முறைகளை அறிந்திருத்தல் அவசியம். முறையாக மரபான அளவீட்டு முறைகளைக் கற்றபின்னரே அதை நவீன அளவீடுகளில் மாற்றிப் பயன்படுத்த முடியும்.

அளவீட்டு கருவிகள்

அணு

சிற்பக் கலையில் பயன்படுத்தப்படும் நீட்டல் அளவு முறையின் ஆதார அளவு பரமாணு. கண்களுக்கு புலப்படாத அளவு நுண்ணிய அணு பரமாணு எனப்படுகிறது. இந்த அரூபமான பரமாணு மாமுனிகளின் அறிவு கண்களுக்கு மட்டுமே புலப்படும் என சிற்ப நூல்கள் கூறுகின்றன. பரமாணுவிலிருந்து தொடங்கியே பிற அளவீட்டு முறைகள் கணக்கிடப்படுகின்றன.

அணு விளக்கம்

பரமாணுவின் அளவை விளக்க இரண்டு முறைகள் சொல்லப்படுகின்றன.

  • வீட்டுக் கூரையின் சிறுதுளைகள் வழியே வரும் ஒளியில் ஊடுருவும் சூரிய ஒளியில் தெரியும் நுண்ணிய துகள்[1].
  • நவீன அளவீட்டு முறையில் குறிப்பிடப்படும் ஒரு அங்குலத்தின் 1,90,650 கூறுகளில் ஒன்று ( 1 / 1,90,650 inch).
அணுவிலிருந்து வளர்ந்த அளவீடுகள்
  • தேர்த்துகள் - எட்டு பரமாணு சேர்ந்தது
  • ரோமம் - மயிரின் நுனி அகலம் என குறிப்பிடப்படும் ரோமம் எட்டு தேர்துகள் சேர்ந்தது
  • ஈர் - எட்டு ரோமம் சேர்ந்தது
  • பேன் - எட்டு ஈர் சேர்ந்தது
  • நெல் (யவை[2]) - எட்டு பேன் சேர்ந்தது
  • விரல்[3] (அங்குலம்) - எட்டு நெல் சேர்ந்தது
மானாங்குலம்[4]
மானாங்குலம் (4 நெல் நீளம்)

எட்டு நெல் கொண்ட விரல் அளவு அங்குலம் என அறியப்படுகிறது. அளப்பதற்குரிய பொதுவான அளவாதலால் இது மானாங்குலம் என அறியப்படுகிறது. மானம் என்றால் அளவை என்று பொருள்.

அளவீட்டு முறை

எட்டு நெல்மணிகள் செங்குத்தாக நெருக்கி வைத்து பக்கவாட்டில் மொத்த நீளம் அளக்கப்படும். அளவிட ஏற்ற நெல்லாக செந்நெல் கூறப்படுகிறது. செந்நெல் அதன் அகலத்தைப் போல இரு மடங்கு நீளமுடையது. எனவே நீளவாட்டில் நான்கு நெல்லின் நீளமும் அங்குலம் எனக் கொள்ளப்படும்.

வகைகள்
  • உத்தமாங்குலம் - பக்கவாட்டில் அளக்கையில் எட்டு நெல், நீளவாட்டில் அளக்கையில் நான்கு நெல் கொண்ட விரல் அளவீடு
  • மத்திமாங்குலம் - பக்கவாட்டில் அளக்கையில் ஏழு நெல், நீளவாட்டில் அளக்கையில் மூன்றரை நெல் கொண்ட விரல் அளவீடு
  • அதமாங்குலம் - பக்கவாட்டில் அளக்கையில் ஆறு நெல், நீளவாட்டில் அளக்கையில் மூன்று நெல் கொண்ட விரல் அளவீடு
மானாங்குலத்திலிருந்து வளர்ந்த அளவீடுகள்
  • தாளம்[5] - ஆறு மானாங்குலம் சேர்ந்தது; 6 விரல் அளவு
  • விதஸ்தி[6] - இரண்டு தாளம் சேர்ந்தது (கை முழம் அளவு); அரை தச்சு முழம் என்றும் அழைக்கப்படும்; 12 விரல்
  • கிஷ்கு[7] - இரண்டு விதஸ்தி சேர்ந்தது (தச்சு முழம் அளவு); சிற்ப முழம் என்றும் அழைக்கப்படும்; 24 விரல்
முழக்கோல்

ஒரு கிஷ்கு அல்லது 24 விரல் சேர்ந்தது ஒரு தச்சு முழம் என்பது அடிப்படை அளவீடு. ஆனால் பயன்பாடு கருதி விரல் எண்ணிக்கையில் சில மாறுதல்களுடன் முழம் அளக்கப்படும். தச்சு முழம் அளக்க முழக்கோல் பயன்படுத்தப்ப்டுகிறது. முழக்கோல் தயாரிக்க சந்தனம், தேவதாரு, கருங்காலி, தேக்கு, முருக்கு, மா, பனை, வேங்கை, செண்பகம் ஆகிய மரங்களும் தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு போன்ற உலோகங்களும் பயன்படுத்தப்படுகின்றன. தச்சுகோல்கள் செய்ய தேர்ந்தெடுக்கும் மரம் வளைந்தோ, வெடித்தோ, மிருதுவாகவோ இருக்கக்கூடாது.

முழக்கோல் - கால்பங்கு
வகைகள்
முழக்கோல் வகைகள்
வகை அளவு
கிஷ்கு 24 விரல் முழம்
பிராஜாபத்தியம் 25 விரல் முழம்
தனுர் முஷ்டி 26 விரல் முழம்
தனுர் கிரஹம் 27 விரல் முழம்
பிராச்யம் 28 விரல் முழம்
வைதேகம் 29 விரல் முழம்
வைபுல்யம் 30 விரல் முழம்
பிரகீர்ணம் 31 விரல் முழம்
உட்பிரிவுகள்

24 விரல் கொண்ட கிஷ்கு முழத்தில் மூன்று உட்பிரிவுகள் உள்ளன.

  • உத்தம கிஷ்கு முழம் - 24 விரல் அளவு
  • மத்திம கிஷ்கு முழம் - 23.5 விரல் அளவு
  • அதம கிஷ்கு முழம் - 23.25 விரல் அளவு
பயன்பாடு

தஞ்சை பெருவுடையார் கோவில் மற்றும் திருவண்ணாமலை கோவில் அமைக்க கிஷ்கு முழம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால் கிஷ்கு முழம் தஞ்சை முழம்[8] என்றும் அண்ணாமலை முழம் என்றும் அழைக்கப்படுகிறது. சிதம்பரம் நடராஜர் கோவில் அமைக்க பயன்படுத்தப்பட்ட பிராஜாபத்ய முழம் சிதம்பர முழம்[9] என்று அறியப்படுகிறது. தஞ்சை முழமும் சிதம்பர முழமும் தமிழக கோவில்களில் அதிகமும் பயன்படுத்தப்பட்டுள்ள முழக்கோல்கள்.

கிஷ்கு முழத்தின் உட்பிரிவான அதம கிஷ்கு முழம் மதுரை, பழனி கோவில்கள் கட்ட பயன்படுத்தப்பட்டுள்ளதால் மதுரை முழம்[10] என்று அறியப்படுகிறது. சிற்பிகள் அவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு ஏற்ப அந்தந்த பகுதிகளின் முழக்கோல்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

வீடு, மாளிகை, அரண்மனை, கோவில் ஆகியன கிஷ்கு, பிராஜபத்திய முழங்களால் செய்யப்பட வேண்டும். வண்டிகள், படுக்கைகள் கிஷ்கு முழத்தால் அளவிடப்படும். மனையிடங்களை அளவிட தனுர்முஷ்டி முழம் பயன்படுத்தபடுகிறது. கிராமம், நகரம் என பெரிய நிலபரப்புகளை தனுர்கிரக முழக்கோலால் அளக்க வேண்டும்.

அளவு குறித்தல்

செதுக்கி வடிவமைக்கப்பட்ட கிஷ்கு முழக்கோல் துல்லியமாக 24 விரல் நீளம் கொண்டது. விரல்கள் பிரிக்கப்பட்டப்பின் அரை முழம், கால் முழம், அரைக்கால் முழம், ஒரு விரல், அரை விரல், கால் விரல், அரைக் கால் விரல் என அளவிட்டு முழக்கோலில் குறிக்க வேண்டும்.

சிதம்பர முழம் 25 விரல் நீளமுள்ளதெனினும் 24 பாகங்களாக பிரிக்கப்பட வேண்டும். இதனால் ஒரு பாகம் ஒரு விரல் மற்றும் 1/24 விரல் அளவு கொண்டதாகும். கணக்கிடப்பட்ட 24 பாகங்களை 24 விரல்களாக கணக்கில் கொண்டு அரை முழம், கால் முழம், அரைகால் முழம். ஒரு விரல், அரைவிரல், கால் விரல், அரைகால் விரல் என்ற அளவுகளை முழக்கோலில் குறிக்க வேண்டும். இதுபோல் மதுரை முழம் உள்ளிட்ட பிற முழகோல்களையும் 24 பிரிவுகளாக பிரித்து அளவுகள் குறிக்கப்படும்.

வடிவம்

முழக்கோல் வடிவம் தொன்ம குறியீடுகளால் அறியப்படுகின்றன.

முழக்கோல் மற்றும் தண்டகோல் ஆகிய இரண்டிற்கும் அதிதேவதை விஷ்ணு எனவும் ரஜ்ஜூ(கயிறு)விற்கு அதிதேவதை வாசுகி என்றும் பொதுவாக எல்லா அளவீடுகளுக்கும் அதிதேவதை நான்முகன் என்றும் கூறப்படுகிறது[11].

கோலின் அடிப்பகுதி பிரம்ம பாகம் என்றும் இடைபகுதி விஷ்ணு பாகம் என்றும் தலைப்பகுதி சிவ பாகம் என்னும் குறியீடுகளும் கூறப்படுகிறது[12]. மேலும் கோலின் அடிப்பகுதி சிவரூபம், நடுப்பகுதி லட்சுமி ரூபம், தலைப்பகுதி விஸ்வகர்மரூபம் என்றும் கூறப்படுகிறது[13]. பெருந்தச்சன் என்னும் ஸ்தபதி இந்த தேவதைகளை வணங்கிய பின்னரே அளக்க தொடங்க வேண்டும்.

கயிறு[14]

நான்கு கிஷ்கு முழங்களின் நீளம் தனுர் தண்டம் என்றும் எட்டு தண்டங்களின் நீளம் ரஜ்ஜூ என்றும் கொள்ளப்படும். ரஜ்ஜூ அளவீடு கயிறு என்று அறியப்படுகிறது. கயிறு சாலைகள் அளக்க பயன்படுத்தப்படும்.

கயிறு தயாரிக்க தேங்காய் நார், தர்ப்பை, ஆலமரவுரி, பருத்தி நூல், பட்டு நூல், பனை நார் ஆகியவை பயன்படுத்தப்படும். முடிச்சுகள் இன்றி முப்பிரியாக திரிக்கப்பட்டு கயிறு தயாரிக்கப்படும்.

வாய்ப்பாடு
ஆளவீட்டு வாய்ப்பாடு
விரல் வாய்ப்பாடு
கண்காணா நுண்துகள் பரமாணு
8 பரமாணுக்கள் தேர்த்துகள்
8 தேர்த்துகள் மயிர் நுனி(ரோமம்)
8 ரோமம் ஈர்
8 ஈர் பேன்
8 பேன் நெல்(யவை)
8 நெல் விரல்(மானாங்குலம்)
முழக்கோல் வாய்ப்பாடு
6 மானாங்குலம்(விரல்) தாளம்
2 தாளம் விதஸ்தி
2 விதஸ்தி (24 விரல்) ஹஸ்தம் (அ) தச்சு முழம் (அ) கிஷ்கு - முழக்கோலின் அடிப்படை அளவு
கயிறு வாய்ப்பாடு
4 கிஷ்கு முழம் தண்டம் (தனுர்தண்டம்)
8 தண்டம் கயிறு (ரஜ்ஜூ)

படிம அள்வீடுகள்

தாளம்

படிமத்தின் முகநீளம் ஒரு தாளம் என கணக்கிடப்படும். தாள அளவு கைப் பெருவிரல் நுனி முதல் நடுவிரல் நுனி வரை உள்ள சாண் அளவிற்கும் உள்ளங்கை அடிமுதல் நடுவிரல் நுனி வரை உள்ள அளவிற்கும் சமம். தாள அளவை 12 சம கூறுகளாக பிரித்து ஒரு பகுதி அளவை ஒரு விரல் என்றும் விரல் அளவின் எட்டில் ஒரு பங்கு யவை என்றும் கொள்ளப்படும்.

(பார்க்க - தாளமானம்)

ரத்னி

படிமங்களை அளக்க நான்கு வகை அங்குலங்கள் பயன்படுத்தப் படுகின்றன.

  1. மானாங்குலம்
  2. மாத்ராங்குலம்
  3. தேகாங்குலம்
  4. யவாங்குலம்
மானாங்குளம்

பொது அளவீட்டில் மேலே குறிப்பிட்ட எட்டு நெல் அகல விரல் அளவே இங்கும் மானாங்குலம்.

மாத்ராங்குலம்

வீடு, கோவில், படிமங்கள் செய்வதற்கு பொருளுதவி செய்வதுடுன் சிற்பி அமைத்து செய்விப்பவர் கர்த்தா என்று அழைக்கபடுவார். கர்த்தாவுடைய வலது கை நடுவிரலின் நடுக்கணுவின் நீளம் அல்லது அகலம் அல்லது சுற்றளவு மாத்ராங்குலம் எனப்படுகிறது. மாத்ராங்குலம் படிமங்களையும் மற்ற சிறு பொருள்களையும் அளவிட பயன்படுத்தப்டும்.

தேகாங்குலம்

தேகாங்குலம் என்பது படிமத்தின் உயரம் சார்ந்து கண்டக்கிடப்படும் அங்குல முறை. படிமங்கள் தாள(முக உயரம்) அளவின்படி செய்யப்படும். படிமங்களின் தாள அளவை அலகாக கொண்டு படிமத்தின் மொத்த உயரம் கணக்கிடப்படும். இவ்வாறு கணக்கிடப்பட்ட படிமத்தின் உயரம் தாள உயரம் எனப்படும். ஒரு தாள அளவை 12 சமகூறுகளாக பிரிக்கும்போது கிடைக்கும் விரல் அளவு தேகாங்குலம் எனப்படுகிறது. படிமத்தின் தேகத்திலிருந்து பெறப்பட்ட அங்குல அலகு என்பதால் இது தேகாங்குலம் என்றும் படிமம் மூர்தியின் வடிவம் ஆதலால் பேராங்குலம்[15] என்றும் அழைக்கபடுகிறது.

யவாங்குலம்

மானாங்குலத்தின் எட்டில் ஒரு பங்காகிய யவை என்னும் ஆளவை அங்குல அளவாக கொண்டு அளக்கப்படுவது. பொதுவாக யவையங்குலம் சிறு படிமங்களை அளக்க பயன்படுத்தபடுகிறது. இதே முறையில் தேகாங்குலத்தை எட்டு பங்குகளாக பிரித்தும் யவாங்குலம் பயன்படுத்தப்படுகிறது.

விரல் வாய்ப்பாட்டிலிருந்து பெறப்பட்ட மானாங்குலத்தின் எட்டில் ஒரு பங்கு யவையும் தேகாங்குலத்தின் எட்டில் ஒரு பங்காகிய யவையும் ஒன்றல்ல. தேகாங்குலத்திலிருந்து பெறப்பட்ட யவையங்குலம் படிம உயரத்தை பொறுத்து மாறும். ஆனால் எட்டு நெல் ஒரு விரல் என்னும் கணக்கிலிருந்து பெறப்பட்ட மானாங்குலத்தை அடிப்படையாக கொண்டு பெறப்பட்ட யவையங்குலம் நிலையான பொது அளவு.

யாகசாலை அளவீடு
அரத்னி

கோவில்களையும் வழிபடு படிமங்களையும் ஸ்தபதி செய்து முடித்தபின் அவற்றை புனிதப்படுத்தி பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்த ஆகம முறைப்படி வேள்வி செய்யப்பட வேண்டும். வேள்வி நிகழ்த்த யாக மண்டபம்(வேள்விக்கூடம்) அமைக்கும் பொறுப்பு ஸ்தபதிக்குரியது. வேதிகை என்ற மேடை அமைத்து சுற்றிலும் அக்னி வளர்க்க குண்டங்கள் அமைக்கப்படும்.

யாக மண்டபத்தில் நடைபெறவிருக்கும் வேள்வியை தலைமை ஏற்று நடத்துபவர் சர்வ சாதகாசாரியர் என அழைக்க்கப்படுவார். இவரது கைமுழத்தின் அளவை கொண்டு தயாரிக்க்ப்பட்ட அளவுகோலால் அளந்து யாக மண்டபம், வேதிகைகள், குண்டங்கள் அமைக்கப்படும்.

யாகசாலையை அளவிட பயன்படுத்தப்படும் அளவுகோல் இரண்டு வகைப்படும்.

  • ரத்னி - விரல்கள் மடக்கப்பட்டு முஷ்டியாக்கிய பின் முழங்கை முட்டி முதல் கை முஷ்டி வரையிலான நீளம்.
  • அரத்னி - விரல்கள் நீட்டிய கையின் முழங்கையின் முட்டியிலிருந்து சிறுவிரல் நுனி வரையிலான நீளம்.

அளவுகோல்கள் 24 பாகங்களாக பிரிக்கப்பட்டு விரல் எனவும் விரல் 8 பாகங்களாக பிரிக்கப்பட்டு யவை அனவும் கொள்ளப்படுகிறது.

உசாத்துணை

  • சிற்பச் செந்நூல், வை. கணபதி ஸ்தபதி, சென்னை: தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் , 2001.

இணைப்புகள்

அடிக்குறிப்புகள்

  1. இல் நுழை கதிரின் நுன் அணு - திருவாசகம் (திருவண்டப்பகுதி - பாடல் 1)
  2. யவை - வாற் கோதுமை அல்லது பார்லி என்ற கருத்து உள்ளது, தமிழ்நாட்டில் யவை நெல்லையே குறிக்கும்
  3. நூல் நெறி மரபில் அரங்கம் அளக்கும் கோல் அளவு இருப்பத்து நால் விரலாக - அரங்கேற்று காதை, சிலப்பதிகாரம்
  4. நவீன அளவீட்டில் 1 அங்குலம் மற்றும் 3/8 அங்குலம் சேர்ந்தது(1.375 inch)
  5. நவீன அளவில் எட்டேகால் அங்குலம்(8.25 inch)
  6. நவீன அளவீட்டில் ஒரு அடி நான்கரை அங்குலம்(1 foot 4.25 inch)
  7. நவீன அளவீட்டில் 2 அடி 9 அங்குலம்(2 feet 9 inch)
  8. தஞ்சை முழம்(நவீன அளவீடு) - 2 அடி 9 அங்குலம்(2 feet 9 inch)
  9. சிதம்பர முழம்(நவீன அளவீடு) - 2 அடி 10.37 அங்குலம்(2 feet 10.37 inch)
  10. மதுரை முழம்(நவீன அளவீடு) - 2 அடி 7.97 அங்குலம் (2 feet 7.97 inch)
  11. நூல்: மானசாரம்
  12. நூல்: விஸ்வகர்மீயம்
  13. நூல்: காமிகாகமம்
  14. கயிறு நவீன அளவீட்டில் 88 அடிகள்(88 feet)
  15. பேரம் - மூர்த்தி


✅Finalised Page