சின்ன சீறா
சின்ன சீறா (சீறாப்புராணம் - ஹிஜ்றத்துக் காண்டம்) (பதினேழாம் நூற்றாண்டு) சீறாப் புராணத்தின் தொடர்ச்சியாக இயற்றப்பட்ட நூல். சீறாப்புராணமும், சின்ன சீறாவும் இஸ்லாமிய இரட்டைக் காப்பியங்களாக அறியப்படுகின்றன. சின்ன சீறாவை இயற்றியவர் பனீ அகுமது மரைக்காயர்.
வெளியீடு
சீறாப்புராணம் - ஹிஜ்றத்துக் காண்டம் என்று அழைக்கப்படும் சின்ன சீறா நூல், பொ.யு. 1733-ல் இயற்றப்பட்டது. இதன் முதல் பதிப்பு பொ.யு. 1855-ல் வெளியானது. இரண்டாம் பதிப்பு, 1856-ல், இலங்கை முத்தமிழ் விளக்க அச்சுக்கூடம் மூலம், உதுமான் லெப்பை குமாரர் பகீர்முகியித்தீன் என்பவரால் பதிப்பிக்கப்பட்டு வெளியானது. எம். ஸையிது முஹம்மது ஹஸன் அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்ட புதிய பதிப்பு, 1990-ல் வெளிவந்தது. டாக்டர் மு. அப்துல் கறீம், ஹனீபா அப்துல் கறீம் ஆகியோர் எழுதிய உரையுடன் கூடிய புதிய பதிப்பு, சென்னை, ஏவி. எம். ஜாபர்தீன் நூர்ஜஹான் அறக்கட்டளையினரால் 2000-த்தில் வெளியிடப்பட்டது.
ஆசிரியர் குறிப்பு
சின்ன சீறாவை இயற்றியவர் பனீ அகுமது மரைக்காயர். காயல்பட்டினத்தைச் சேர்ந்த சுலைமான் என்பவரின் புதல்வர் ஜமாலுத்தீன். அவரது மகனே பனீ அகுமது மரைக்காயர். இவர் 'பனீ இசுறாயீல்' என்ற பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் 'அகுமது மரைக்காயர்' என்ற பெயருடன் 'பனீ' என்பது முன்னொட்டாக இடம் பெற்றது. இவர் இயற்றிய ஒரே நூலாக 'சின்ன சீறா' அறியப்படுகிறது. இந்நூல் உருவாகப் பொருளுதவி செய்தவர் வகுதையைச் சேர்ந்த லப்பை நயினார்.
நூல் அமைப்பு
சின்ன சீறா, சீறாப் புராணத்தின் தொடர்ச்சியாக அமைந்த நூல். இந்நூலில் 39 படலங்களும் 1823 பாடல்களும் இடம்பெற்றன. பாடல்கள் அனைத்தும் விருத்தப்பாவினால் அமைந்துள்ளன.
உள்ளடக்கம்
சின்ன சீறா நூல், உமறுப் புலவர் சீறாப் புராணத்தை எந்த நிகழ்வுடன் நிறைவு செய்தாரோ அதிலிருந்து மீதமுள்ள வரலற்றை விளக்கும் வகையில் எழுதப்பட்டது. உமறுப் புலவர் தமது சீறாப் புராணத்தில் எழுதி முடிக்காத பகுதியைப் பனீ அகுமது மரைக்காயர் சின்ன சீறாவாக எழுதி நிறைவு செய்தார்.
நபிகள் நாயகம் ஒன்பது பிற நாட்டு மன்னர்களோடு கொண்ட கடிதத் தொடர்பு பற்றியும், அவர்களை இஸ்லாத்தில் சேர அழைத்ததைப் பற்றியும் சின்ன சீறாவில் செய்திகள் இடம் பெற்றன. கைபர், ஹுனைன், தபூக் முதலான போர்களையும், மக்காவின் வெற்றியையும், மக்கா வெற்றிக்குப் பிறகு அரபு நாடுகள் அனைத்தும் இஸ்லாத்தில் இணைந்ததையும் பனீ அகுமது மரைக்காயர் குறிப்பிட்டுள்ளார். நபிகள் நாயகம் இறையடி சேர்வதுடன் சின்ன சீறா நூல் நிறைவடைகிறது.
பாடல்
தபூக்குப் படலம்:
நறை மலர்க் கரங்கள் ஏந்தி நபிதுஆச் செய்துவாரித்
தறையினில் இவர்க்கிப் பேறு தரித்ததென் னென்ன உம்பர்க்
கிறையுடன் வினவக் குல்கு வல்லாகு எனும் சூறத்தை
முறை முறை நிதமும் ஓதி முடித்திடும் பேறீ தென்றார்
கச்சிற்குப் போந்த படலம்:
ஆற்றல்சால் புறுக்கான் அதில்வரும் சூறத்து
ஆயத்தின் ஆனசொற் கெல்லாம்
ஈற்றினில் வந்த ஆயத்தில் உங்கள்
தீனை நாம் இற்றையில் நிறைய
ஊற்றமாய் நிரப்பு வித்தனம் எனவும்
உவணைவாழ் வளித்தனம் எனவும்
வேட்டைச்சாரி போந்த படலம்:
உரைத்தபடி வருடையறுத் தூணையட்டார் மோதகமும்
சுட்டார் ஈருள்
நிரைத்துநெடும் கோலிடையில் கோலிவெய்ய அழற்கொழுந்தில்
நிறைத்துக் காய்த்தி
சுட்டுவைத்த ஈருள் தன்னை வாயார வயிறாரத்
துய்த்து மிஞ்சி
மட்டுவைத்த பாத்திரத்தில் பெய்தகறி வளர்வதுகண்டு
அன்பு பூத்தார்
உபாத்துப் படலம்:
தாயினிற் பரிவாய் மகுசறில் காக்கும்
சையது முகம்மது நபிக்கும்
ஏயஆல் அசுகா பிகளவர் தமக்கும்
இக்கதைக் குதவி செய் தவர்க்கும்
தூயசெந் தமிழால் கோவை செய் தவர்க்கும்
சொற்கவி செய்தவர் தமக்கும்
நேயமுற் றெழுதிப்படித்தவர் தமக்கும்
நீதிநீ கிருபை செய் ஆமீன்
மதிப்பீடு
சின்ன சீறா, சீறாப்புராணத்தின் தொடர்ச்சியாக அமைந்த நூலாகவும், உமறுப் புலவர் பாடாது விட்ட பகுதிகளைப் பாடி நிறைவு செய்யப்பட்ட நூலாகவும் அறியப்படுகிறது. நபிகள் நாயகத்தின் கடைசி ஆறு ஆண்டுகளில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் கூறும் நூலாகவும், இஸ்லாமியத் தமிழ்க் காப்பிய நூல்களுள் குறிப்பிடத்தகுந்த ஒரு நூலாகவும் 'சின்ன சீறா' நூல் மதிப்பிடப்படுகிறது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Feb-2025, 10:02:37 IST