under review

சின்னச்சாம்பு

From Tamil Wiki
சின்னச்சாம்பு
சின்னச்சாம்பு (1942) வ.ராமசாமி ஐயங்கார் (வ.ரா) எழுதிய நாவல். வ.ரா.எழுதிய சமூகசீர்திருத்தப் பிரச்சாரம் குறைவான, யதார்த்தவாதக் கூறு மேலோங்கிய நாவல் இது என கருதப்படுகிறது.

எழுத்து, பிரசுரம்

இந்நாவல் 1940-ல் வ.ராவால் எழுதப்பட்டது. அல்லயன்ஸ் பதிப்பகம் இதை வெளியிட்டது.

கதைச்சுருக்கம்

ஐந்து சகோதரர்களுடனும் நான்கு சகோதரர்களுடன் பிறந்த சாம்புவுக்கு பள்ளியிலும் இன்னொரு மூத்த சாம்பு இருந்தமையால் சின்னச்சாம்பு என்று பெயர் பெறுகிறான். சின்னச்சாம்பு சிறந்த மாணவனாதலால் அவனுக்கு ஒரு பாதிரியாரின் ஆதரவும் அவர்மகள் ரோஸ்ஸின் அன்பும் கிடைக்கிறது. பாதிரியார் அவனை மேலே படிக்கவைக்க விரும்புகிறார். சாம்புவின் தந்தைக்கு அவன் படிப்பதில் விருப்பமில்லை, அவன் மதம் மாறுவான் என சந்தேகப்படுகிறார். சாம்பு அதற்கு ஒப்புக்கொள்ளாமலிருப்பதனால் அவர் வீட்டை விட்டு வெளியேறுகிறார். சாம்பு தன் அம்மாவுடன் சென்னைக்கு வந்து படிப்பை தொடர்கிறான்.சாம்பு எதிர்வீட்டுப் பெண் சீதாவை காதலித்து மணந்துகொள்கிறான். சாம்பு பாடம்சொல்லிக்கொடுக்கும் முதலியார் வீட்டுப்பெண் பாகீரதிக்கும் சாம்பு மேல் காதல். இதைக்கண்டு சீதா சீற்றமடைகிறாள். சீதாவின் சகோதரன் சூரி விதவையான நாகம்மாளை சீர்திருத்த மணம் புரிந்துகொள்கிறான். நோயுற்று சீதா மறைகிறாள். ரோஸ் சாம்புவிடம் நட்புடன் இருக்கிறாள். வீட்டைவெளியேறிய சாம்புவின் தந்தை ஒரு சாமியாராக திரும்பி வருகிறார். சாம்பு ஒரு சான்றோனாக இருப்பதைக் கண்டு நிறைவடைகிறார். சாம்பு மறுமணம் செய்துகொள்ளவில்லை. பாகீரதி ,ரோஸ் இருவரிடமும் நல்ல நட்புடன் நீடிக்கிறான்

இலக்கிய இடம்

இந்நாவல் காதல்கதைகளும் ஆசாரவாதக் கதைகளும் வந்துகொண்டிருந்த சூழலில் தமிழில் காதல் இல்லாத ஆண்பெண் நட்பை முன்வைத்தமைக்காக விமர்சகர்களால் பாராட்டப்படுகிறது

உசாத்துணை


✅Finalised Page