under review

சித்ரா ரமேஷ்

From Tamil Wiki
ரமேஷ் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ரமேஷ் (பெயர் பட்டியல்)
சித்ரா ரமேஷ்

சித்ரா ரமேஷ் (பிறப்பு: செப்டெம்பர் 3, 1962) சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். கதைகள், சிங்கப்பூர் வாழ்க்கைபற்றிய கட்டுரைகள் எழுதுகிறார். சிங்கப்பூர் இலக்கிய நிகழ்வுகளை ஒருங்கிணைக்கிறார். ஆசிரியையாக பணியாற்றுகிறார்

பிறப்பு, கல்வி

சித்ரா ரமேஷ் செப்டெம்பர் 3, 1962-ல் நெய்வேலியில் சுந்தரராமன், சரோஜினி இணையருக்குப் பிறந்தார். நெய்வேலி பெண்கள் உயர் நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் புகுமுக வகுப்பை பயின்றார். திருச்சி சீதாலட்சுமி கல்லூரியில்இளங்கலைப் பட்டமும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை (கல்வியியல்) பட்டமும் பெற்றார்.

தனிவாழ்க்கை

சித்ரா ரமேஷ் கே.ஜே.ரமேஷ் ஐ 1984-ல் மணந்தார். கௌதம், சுருதி என இரு குழந்தைகள். ஆசிரியையாகப் பணிபுரிகிறார்.

இலக்கியவாழ்க்கை

சிங்கப்பூருக்கு மணமுடித்து சென்று குடியேறிய சித்ரா ரமேஷ் சிங்கப்பூர் தமிழ் முரசில் 1994-ல் தன் முதல்கதையை எழுதினார். அசோகமித்தரன், ஆதவன், தி ஜானகிராமன், ரா.கி. ரங்கராஜன் ஆகியோரை தன் ஆதர்ச எழுத்தாளர்களாகக் கருதுகிறார். சிங்கப்பூர் வாழ்க்கையை சிறுகதைகளாகவும் சிங்கப்பூரின் வரலாற்றை நூலாகவும் எழுதியிருக்கிறார். திண்ணை இணையதளத்தில் ஆட்டோகிராஃப் என்னும் 20 வார தொடரை எழுதினார். நகைச்சுவையுடன் எழுதப்பட்ட அக்கட்டுரைத் தொடர் அவருக்கு இலக்கிய முகத்தை உருவாக்கி அளித்தது.

இலக்கிய இடம்

சித்ரா ரமேஷின் எழுத்துக்கள் பொதுவாசிப்புக்கான எளிய மொழியில்,நேரடியான கூறுமுறையில் அமைந்தவை. ஆனால் சிங்கப்பூரைக் களமாகக் கொண்டு இன்றைய வாழ்க்கையில் நிகழும் முன்பிலாத வாழ்க்கைச்சிக்கல்களை வெளிப்படுத்தும் பிதாமகன் போன்ற கதைகளும் பறவைப்பூங்கா போன்ற படிமத்தன்மை கொண்ட கதைகளும் அவருடைய இலக்கிய இடத்தை உருவாக்குகின்றன.

விருதுகள்

  • தமிழ் முரசு: தீபாவளிச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு.
  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் சிறுகதைப் போட்டியில் பரிசுகள்
  • சிங்கப்பூர் தேசியக் கலைகள் மன்றம் நடத்தும் தங்கமுனைச் சிறுகதைப்போட்டியில் பரிசு
  • சிங்கப்பூர் புத்தக மேம்பாட்டு மன்றம் நடத்தும் சிங்கப்பூர் இலக்கிய விருதுப் போட்டியில் புதினங்களுக்கான சிங்கப்பூர் இலக்கியப் பரிசு
  • மு. ஜீவானந்தம் நினைவுப் பரிசு
  • பொதிகைச்தமிழ்ச்சங்கத்தின் கவிதை நூலுக்கான பரிசு
  • திருப்பூர் இலக்கியச்சங்க விருது
  • சேலம் தமிழ்ச்சங்கத்தின் கவிதை நூலுக்கான பரிசு
  • சிங்கப்பூர் தேசிய கலைகள் மன்ற ஆதரவில் நடைபெறும் சிங்கப்பூர் கவிதைத் திருவிழாவில் கவிதைப் போட்டியில் பரிசுகள்
  • குமுதம் கொன்றை சங்க இலக்கியச் சிறுகதைப்போட்டியில் பரிசு
  • கல்கி சிறுகதைப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டச் சிறுகதை
  • அமுதசுரபி: நகைச்சுவைக் கட்டுரைப் போட்டியில் பரிசு

நூல்கள்

  • நகரத்தின் கதை
  • ஆட்டோகிரஃப்
  • நிழல் நாடகம்
  • பறவைப்பூங்கா
  • ஒரு துளி சந்தோஷம்
  • தலைவர்களும் புரட்சியாளர்களும்
  • ஒரு கோப்பை நிலா
  • வெண்மையின் நிறங்கள்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:33:47 IST