under review

சாரதாதேவி சிறிஸ்கந்தராசா

From Tamil Wiki

சாரதாதேவி சிறிஸ்கந்தராசா (பிறப்பு: ஜூலை 14, 1950) ஈழத்துப் பெண் கலைஞர். நடன ஆசிரியர். நாட்டியம் சார்ந்த அமைப்புகளை ஏற்படுத்தி மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் ஆசிரியர். நடனம் சார்ந்த நூல்கள் எழுதினார். நடன நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

சாரதாதேவி சிறிஸ்கந்தராசா இலங்கை யாழ்ப்பாணம் மாதகலில் விநாயகராஜா, நேசம்மா இணையருக்கு ஜூலை 14, 1950-ல் பிறந்தார். ஆரம்பக்கல்வியை மாதகல் விக்னேஸ்வரா மகாவி்த்தியாலயத்திலும் பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரியிலும் கற்றார். ஏரம்பு சுப்பையா பிள்ளை, செல்வி குமாரசுவாமி திரிபுரசுந்தரி ஆகியோரிடம் முறையாக நடனம் பயின்றார். பரதசூடாமணி அடையார் கே.லக்ஷ்மணனிடம் பரதநாட்டியம், நட்டுவாங்கத்தில் டிப்ளோமா பட்டம் பெற்றார்.

கலை வாழ்க்கை

சாரதாதேவி சிறிஸ்கந்தராசாவின் நடன அரங்கேற்றம் 1972-ல் அடையார் கே.லக்ஷ்மணின் நட்டுவாங்கத்துடன் நடைபெற்றது. 1975-ல் நடன ஆசிரியராகப் பணி நியமனம் பெற்றார். கோப்பாய் அரசினர் ஆசிரியர் கலாசாலையில் பயிற்சியை முடித்தார். 'சகுந்தலை' என்ற நாட்டிய நாடகத்தை தயாரித்துள்ளதுடன் அதற்கு நட்டுவாங்கமும் செய்தார். 'அன்னம் விடு தூது' நாட்டிய நாடகத்திற்கு நெறியாளராக இருந்தார். ரூபவாஹினி தொலைக்காட்சிக்கு பாடசாலைகள் மூலமாகப் பல நடன நிகழ்ச்சிகைளை வழங்கினார்.

அமைப்புப் பணிகள்

சாரதாதேவி 1980-ம் ஆண்டு திருகோணேஸ்வரர் நாட்டியக் கலாமன்றத்தினை நிறுவினார். வட இலங்கை சங்கீத சபை ஆரம்பிப்பதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து ஆசிரியர்களை வரவழைத்து மாணவிகளுக்குப் பரீட்சைகள் நடத்தினார்.

எழுத்து

சாரதாதேவி நாட்டிய மாணவர்களுக்காக நடனம்-1, நடனம்-2 ஆகிய நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

விருதுகள்

  • 2012-ல் அரச விருது விழாவில் பரதநாட்டியத்திற்காக கலாபூஷண விருது.
  • 2004-ல் திருகோணமலை சுப்பர் சங்கீத இசைக்கழகம் 30 வருட கலைப்பணியை பாராட்டி கௌரவித்து பாராட்டும் சான்றிதழும் வழங்கியது.
  • மட்டக்களப்பு விபுலானந்தா இசை நடனக் கல்லூரியில் கலைஞர்கள் கௌரவிப்பு விழாவில் அண்ணாமலைப் பல்கலைகழக மாணவர்களால் கௌரவிக்கப்பட்டார்.
  • கலைப்பண்பாட்டுக் கழகம் நடத்திய இசை, நடன, நாடக விழாவில் 'நாட்டிய வித்தகி' விருது.
  • சக்தி தொலைக்காட்சியின் ”நாட்டிய வித்தகி” என்ற வாழ்நாள் விருதும் பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார் 2009.
  • 2013-ல் நாட்டியத்துறையில் 34 ஆண்டு சேவையை பாராட்டி நகர முதல்வர் விருதும் சான்றிதழும் கௌரவிப்பும் செய்யப்பட்டார்.
  • 2015-ம் ஆண்டு அரச நடன விழாவில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இலங்கையில் நாட்டிய நாடகக் கலையை மிளிரச் செய்வதற்கு சேவையாற்றியமைக்காக 'நடனத் திலகம்' விருதும் 'நாட்டிய வாரிதி' விருதும் வழங்கப்பட்டது.

நூல் பட்டியல்

  • நடனம்-1
  • நடனம்-2

உசாத்துணை


✅Finalised Page