under review

சாங்கோபாங்கம்

From Tamil Wiki
சாங்கோபாங்கம்

சாங்கோபாங்கம்: முழுதுடல் பணிதல். முழுமையாக அர்ப்பணித்தல். உடல்முழுக்க என்னும் பொருள் கொண்ட சொல்.

வேர்ச்சொல்

இது சம்ஸ்கிருதச் சொல். ஸ அங்கம்+ உப அங்கம் என பிரியும். உடல், அனைத்து உறுப்புகளுடனும் என்று நேர்ச்சொல்பொருள்.

இந்துமதம்

தரையில் அனைத்து உடலுறுப்புகளும் படும்படி விழுந்து பணிவது சாங்கோபாங்க நமஸ்காரம் (முழுதுடல் வணக்கம்) எனப்படுகிறது. ஆலயத்தில் அவ்வாறு விழுந்து வணங்குவதுண்டு. தந்தை, ஆசிரியர் ஆகியோரையும் அவ்வாறு வணங்கலாம். இது சாஷ்டாங்க நமஸ்காரம் (எட்டுறுப்பும் பணிதல்) என்றும் சொல்லப்படுகிறது.

கிழக்கு மேற்கு நோக்கிய கருவறைகளின் முன் வடக்கே தலை வைத்தும், தெற்கு வடக்கு நோக்கிய ஆலயங்களின் முன் கிழக்கே தலை வைத்தும் விழுந்து வணங்கவேண்டும். கால் நீட்டும் பின்புறத்தில் எந்தத் தெய்வச் சன்னதியும் இருக்கக் கூடாது. ஆலயத்தில் கொடிமரத்தின் அருகே தெய்வ சன்னிதி இருக்காதென்பதனால் அங்கு மட்டுமே விழுந்து வணங்க வேண்டும். தெற்கு நோக்கி வணங்கக்கூடாது. பெண்கள் சாங்கோபாங்கமாக எங்குமே வணங்கக்கூடாது. முழந்தாளிட்டு, கைகளை ஊன்றி, நெற்றி தரையில் பட வணங்கவேண்டும்.

சிற்பவியல்

இந்தியச் சிற்பவியலில் சிற்பத்தின் உடலுறுப்புகளைக் குறிக்க இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாகச் செப்புத்திருமேனிகளில் இச்சொல் கையாளப்படுகிறது. சிற்பத்தின் உடற்பகுதிகள் நான்கு. அங்கம், பிரத்தியங்கம், சாங்கம், உபாங்கம். இவை நான்கும் இணைந்தால் சாங்கோபாங்கம். சாங்கோபாங்க தரிசனம் இறைவழிபாட்டில் முக்கியமானதாகும். (பார்க்க சிவத் திருமேனி)

கிறிஸ்தவ மதம்

சாங்கோபாங்கம் செய்வது என்பது கத்தோலிக்க மதத்தில் தன் முழு உடலையும் இறைப்பணிக்கு அர்ப்பணிப்பதை குறிக்கிறது. ஒருவர் தன் வாழ்க்கையை அர்ப்பணிப்பது, இல்லறம் முதலிய எதிலும் ஈடுபடாமலிருப்பது.

பைபிள் பழைய ஏற்பாட்டில் உடலை முதன்மையாகக் கொள்ளுதல், உடலின்பங்கலில் திளைத்தல் சாங்கோபாங்கம் என்று சொல்லப்பட்டுள்ளது. ’இதோ கொ்வமும் ஆகாரத் திரட்சியும் நிர்விசாரமான சாங்கோபாங்கமுமாகிய இவைகளே உன் சகோதரியான சோதோமின் அக்கிரமம்’. ( எசேக்கியேல். 16:49 )

பார்க்க சாங்கோபாங்கர்

உசாத்துணை

தமிழ் அகராதி


✅Finalised Page