under review

சற்குணேஸ்வரர் கோயில்

From Tamil Wiki
சற்குணேஸ்வரர் கோயில்

சற்குணேஸ்வரர் கோயில் கருவேலியில் அமைந்துள்ள தேவாரப் பாடல்பெற்ற தளம். இக்கோயில் சற்குணேஸ்வர சுவாமி கோவில் நிர்வாக குழு, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ளது.

இடம்

காவிரியின் கிளை நதியான அரிசிலாறு ஆற்றின் வடகரையில் திருவாரூர் மாவட்டம் குடவாசலில் பழமையான சற்குணேஸ்வரர் கோயில் உள்ளது. கோயில் அமைந்த கிராமத்தின் பெயர் கருவிலி, கோவில் கொட்டித்தாய் என அழைக்கப்பட்டது. இப்போது இந்த இடம் கருவேலி என்று அழைக்கப்படுகிறது. கும்பகோணத்தில் இருந்து இருபத்தியிரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கருவேலியில் சற்குணேஸ்வரர் கோயில் உள்ளது. கூந்தலூரிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலும், பூந்தோட்டத்திலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவிலும் நாச்சியார் கோவிலிலிருந்து பதினொரு கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

வரலாறு

சற்குணேஸ்வரர் கோயிலின் வரலாற்றுப் பெயர்கள் கருவிலி கொட்டித்தாய், சற்குணேஸ்வரபுரம். இக்கோயில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.

கல்வெட்டு

சற்குணேஸ்வரர் கோயிலில் சோழ மன்னன் இரண்டாம் ராஜாதிராஜன், ராஜேந்திர சோழன் காலத்தைச் சேர்ந்த சில கல்வெட்டுகள் உள்ளன. கல்வெட்டுகளில் இக்கோயில் “உய்யக்கொண்டான் வளநாட்டு வெண்ணாட்டு குலோத்துங்க சோழன் நல்லுராகிய கருவிலி கொட்டித்தாய்” என குறிப்பிடப்பட்டது.

சற்குணேஸ்வரர் கோயில் யமதீர்த்தம்

தொன்மம்

  • ஸ்தல புராணத்தின்படி தக்ஷனின் யாகத்திற்குப் பிறகு, பார்வதி தேவி இந்தத் தலத்தில் சிவனுடன் மீண்டும் இணைவதற்காக தவம் செய்தாள். சிவபெருமானின் கவனத்தை ஈர்க்க அவள் அழகிய வடிவத்தில் காட்சியளித்ததாக நம்பப்படுகிறது. எனவே அவள் இங்கே 'ஸ்ரீ சர்வாங்க சுந்தரி' என அழைக்கப்பட்டாள்.
  • சிவபெருமான் தனது தனித்துவமான பிரபஞ்ச நடனத்தை இங்கு
  • கொடுகொட்டி' செய்ததாகவும் நம்பப்படுகிறது. அதனால் இத்தலம் கொட்டித்தாய் எனப் பெயர்பெற்றது.
  • மரணத்தின் கடவுளான யமன் தனது பாவங்களில் இருந்து விடுபடுவதற்காக இத்தலத்திற்குச் சென்று குளம் உருவாக்கி இறைவனை வழிபட்டதாகவும் ஸ்தல புராணம் உள்ளது.
  • புராணத்தின்படி, சற்குணன் என்ற அரசன் இங்குள்ள இறைவனை வழிபட்டான். எனவே, இறைவன் 'ஸ்ரீ சற்குண நாதேஸ்வரர்' என அழைக்கப்பட்டார். தீவிர சிவபக்தராக இருந்த மன்னன், இங்கு முக்தி அடைந்தார். அவர் மரணம் மற்றும் மறுபிறப்பு சுழற்சியில் இருந்து விடுவிக்கப்பட்டார். எனவே இந்த இடம் 'கருவிலி' எனப் பெயர்பெற்றது.
  • இந்திரன், யமன், தேவர்கள், ருத்ர கணங்கள் இங்குள்ள இறைவனை வழிபட்டதாக நம்பப்படுகிறது. திருநாவுக்கரசர் தம் திருப்பாடலில் இத்தலத்தை 'கருவிலி கொட்டித்தாய்' என குறிப்பிட்டார்.
சற்குணேஸ்வரர் கோயிலில் மூலவர்

கோவில் பற்றி

  • மூலவர்: சற்குண நாதேஸ்வரர்
  • அம்பாள்: சர்வாங்க சுந்தரி
  • தீர்த்தம்: யம தீர்த்தம்
  • ஸ்தல விருட்சம்: வில்வம் மரம்
  • பதிகம்: திருநாவுக்கரசர் வழங்கிய பாடல்
  • காவிரி ஆற்றின் தென்கரையில் உள்ள 276 தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று
  • அறுபத்திமூன்றாவது சிவஸ்தலம்
  • கடைசியாக கும்பாபிஷேகம் ஜூன் 30, 2017 அன்று நடைபெற்றது
சற்குணேஸ்வரர் கோயில் வளாகம்

கோவில் அமைப்பு

கிழக்கு நோக்கிய சற்குணேஸ்வரர் கோயிலின் நுழைவாயிலில் வளைவு, அதன் பிரதான கோபுரம் மூன்று அடுக்குகளைக் கொண்டது. ஒற்றை நடைபாதை உள்ளது. கொடிமரம் இல்லை. சற்குணேஸ்வரர் கோயிலில் உள்ள சிவன், பார்வதி தேவியின் சன்னதிகளைத் தவிர, விநாயகர், சுப்பிரமணியர், அவரது துணைவியருடன் சண்டிகேஸ்வரர் ஆகியோரின் சன்னதிகள், சிலைகள் நடைபாதையில் உள்ளன. இங்கு நவக்கிரகம் இல்லை. மண்டபத்தில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் சிலைகள் உள்ளன. பார்வதி தேவியின் சன்னதிக்கு அருகில் சிம்மவாஹினி மற்றும் சஞ்சீவி ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன. கோஷ்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, அர்த்தநாரீஸ்வரர், பைரவர் மற்றும் துர்க்கை ஆகியோரின் சிலைகளைக் காணலாம்.

இக்கோயிலில் சிவன் மற்றும் பார்வதி தேவி சன்னதிகள் கிழக்கு திசை நோக்கி உள்ளன. சிவன் சன்னதியின் வலது பக்கத்தில் பார்வதி தேவியின் சன்னதி உள்ளது. இது அவர்களின் திருமண தோரணையின் அடையாளமாக கருதப்படுகிறது. நடைபாதையில் உள்ள சுவரில் ஒரு யானை சிவபெருமானை வழிபடுவதை சித்தரிக்கும் சிற்பம் உள்ளது.

சற்குணேஸ்வரர் கோயில் சிற்பங்கள்

சிற்பங்கள்

சற்குணேஸ்வரர் கோயிலில் உள்ள அனைத்து சிலைகளும் மிகவும் பழமையானவை. குறிப்பாக பார்வதி தேவி, தட்சிணாமூர்த்தி, பிரம்மா, சுப்பிரமணியர், அவரது துணைவியார், பைரவர் ஆகியோரின் சிலைகள் உள்ளன. இங்குள்ள தட்சிணாமூர்த்தி தனது ஒரு கையில் பாம்பை ஏந்தியிருப்பது தனிச்சிறப்பானது.

சிறப்புகள்

  • சிவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளார்.
  • சற்குணேஸ்வரரை வழிபடுவதன் மூலம் பக்தர்களுக்கு முக்தி கிடைப்பதோடு, மீண்டும் மீண்டும் வரும் பிறப்பு மற்றும் மறுபிறப்பு சுழற்சியில் இருந்து விடுபட உதவும் என்ற நம்பிக்கை உள்ளது.
  • திருமண வரம் வேண்டுவோர் இங்குள்ள இறைவனை வேண்டிக் கொள்ளலாம் என்பதும் நம்பிக்கை.
  • இங்குள்ள இறைவனை வழிபடுவதன் மூலம் பக்தர்கள் நல்ல கர்மவினைகளை ஈர்ப்பதாக நம்பப்படுவதால், இறைவன் 'ஸ்ரீ சற்குண நாதர்' என அழைக்கப்பட்டார்.
  • 'அஷ்ட திக் பாலகர்கள்' வழிபட்டதாக நம்பப்படும் மேலும் எட்டு சிவன் கோவில்களில் ஒன்று. இந்திரன் - நாகம்பாடி, அக்னி - வன்னியூர், யம - கருவிலி, நிருதி - வயலூர், வருணன் – சிவனாகரம், வாயு – அகளங்கன், குபேரா – எஸ்.புதூர், ஈசானன் – நல்லாவூர் ஆகியவை அஷ்ட திக் பாலகர்கள் வழிபட்ட எட்டு கோயில்கள்.

திறந்திருக்கும் நேரம்

  • காலை 7-12
  • மாலை 4.30-8

விழாக்கள்

  • ஆடியில் ஆடி பூரம்
  • ஆவணியில் விநாயகர் சதுர்த்தி
  • புரட்டாசியில் நவராத்திரி
  • ஐப்பசியில் ஸ்கந்த ஷஷ்டி, அன்னாபிஷேகம்
  • கார்த்திகையில் திரு கார்த்திகை (நவ-டிசம்)
  • தையில் மகர சங்கராந்தி
  • மாசியில் சிவராத்திரி
  • பிரதோஷம் தொடர்ந்து அனுசரிக்கப்படுகிறது

உசாத்துணை


✅Finalised Page