under review

சபாரத்தின முதலியார்

From Tamil Wiki
சபாரத்தின முதலியார்

சபாரத்தின முதலியார் ( ஏப்ரல் 1858-15 நவம்பர் 1922 ) கொக்குவில் சபாரத்தின முதலியார். ஈழத்து தமிழ்ப் புலவர். சைவப்புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் செய்யுள்கள் பாடினார். சமய நூல்கள், கண்டனங்கள் பாடினார்.

பிறப்பு, கல்வி

சபாரத்தின முதலியாரின் முன்னோர் யாழ்ப்பாணம் சைவ வேளாள மரபினர். அவருடைய முன்னோரில் குலசேகர முதலியார் சைவ அறிஞராகப் புகழ்பெற்றிருந்தார்.

சபாரத்தின முதலியார் இலங்கை யாழ்ப்பாணம், கொக்குவில் என்னும் ஊரில், முல்லைத்தீவுக்கச்சேரியில் எழுதுவினைஞராக பணியாற்றிக் கொண்டிருந்த சபாபதிப்பிள்ளைக்கும் பெரியமுருகேசு என்னும் செல்வந்தரின் மகளாகிய ஆச்சிமுத்துவிற்கும் 1858-ல் பிறந்தார். இவருக்கு அன்னபூரணி என்னும் தமக்கையும், குழந்தைவேற்பிள்ளை என்னும் தம்பியும் சின்னத்தங்கச்சி அம்மாள் என்னும் தங்கையும் இருந்தார்கள். ஏடு தொடக்கியபின் கொக்குவில் சுயம்புநாதபிள்ளை என்பவரிடம் தமிழ் பயின்றார். ஆங்கிலக் கல்வி பெற்றுக்கொள்வதற்காக "கொக்" (Cock)பாடசாலை எனப்பட்ட மத்திய கல்லூரியில் பயின்றார்.

வண்ணார்பண்ணையிலுள்ள சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஆறுமுக நாவலரிடத்திலும் கற்றார். த. கைலாசபிள்ளை இவருடைய கல்விச்சாலைத் தோழர்

தனி வாழ்க்கை

அரசுப்பணி

சபாரத்தின முதலியார் 1878-ல் யாழ்ப்பாணக் கச்சேரியில் எழுதுவினைஞராகப் பணியாற்றத் தொடங்கி முல்லைத்தீவு, கொழும்பு, கண்டி, காலி முதலிய இடங்களிலும் பணியாற்றினார். 1905-ல் யாழ்ப்பாணக் கச்சேரியில் தமிழ் முதலியாராக நியமிக்கப்பட்டார். 1917-ம் ஆண்டிலே சமாதான நீதவானக நியமிக்கப்பட்டார். 1921-ல் அரசாங்க சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

குடும்பம்

1889-ல் முதலியார் பொன்னம்பல பிள்ளை என்பவரின் மகள் கனகம்மாளை மணந்தார். அவர்களுக்கு நவரத்தினம் என்னும் மகனும் பாஞானம் என்னும் மகளும் பிறந்தார்கள். கனகம்மாள் நோய்வாய்ப்பட்டு மறையவே கனகம்மாளின் தங்கையான சொர்ணம்மாளை மறுமணம் புரிந்துகொண்டார். சொர்ணம்மாளுக்கு ஒரு மகள் பிறந்தாள், அற்புதாம்பிகை என்னும் அப்பெண் தன் 17 வயதில் காச நோயுற்று மறைந்தார். மகளுக்கு நீர்க்கடன் கழிப்பதற்காக 1922-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதலியார் மனைவியுடன் காசிக்குச் சென்றார். திரும்பி வந்தபின் சொர்ணம்மால் நோயுற்று மறைந்தார். அது முதலியாரை உளச்சோர்வுறச் செய்தது. அவரும் அவ்வாண்டே மறைந்தார்

இலக்கிய வாழ்க்கை

சபாரத்தின முதலியார் பத்தொன்பது வயதில் 'உதயபானு' பத்திரிகையில் சாள்ஸ் பிராட்லா கின் என்ற தத்துவவாதியின் நிரீச்சுரவாதத்தை(எல்லாம் இயற்கை, மேலே சக்தி ஏதுமில்லை. நாம் காண்பவை உண்மையானவை) மறுத்து பல கண்டனங்களை எழுதினார். அவை 1896-ல் தொகுக்கப்பட்டு ஈச்சர நிச்சயம் என்ற பேரில் நூல்வடிவம் கொண்டன. சபாரத்தின முதலியாரின் புகழ்பெற்ற முதல்நூல் இதுவே.

அரசாங்கப் பணியிலிருந்த காலத்தில் "இந்து சாதனம்" என்னும் பத்திரிகையில் இவர் எழுதிய கட்டுரைகள் வெளிவந்தன. சபாரத்தின முதலியார் தமிழ் நூல்கள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். விரிவுரைகள் பல ஆற்றினார்.

இவர் கண்டனங்கள், சமய நூல்கள், தனிப்பாடல்கள் பலவற்றை எழுதினார். முன்னை நாதசுவாமி வடிவழகம்மை ஆசிரிய விருத்தம், கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி தோத்திரம், மும்மணிக் கோவை, வெண்பா, அந்தாதி, கந்தர் கலிப்பா, சரவணபவமாலை, நல்லை நான்மணி மாலை, கொக்குவில் சித்திவிநாயகர் இரட்டை மணிமாலை முதலிய பல செய்யுள்களையும் இயற்றினார்.

பட்டம்

  • 1905-ல் இவருக்கு முதலியார் பட்டம் அரசினரால் அளிக்கப்பட்டது.
  • 1919-ல் இராசவாசல் முதலியார் பட்டத்தினைப் பெற்றார்.

மறைவு

மகள் மற்றும் மனைவியின் மறைவால் உளம்சோர்ந்திருந்த முதலியார் 15 நவம்பர் 1922-ல் மறைந்தார்

வாழ்க்கை வரலாறு

சபாரத்தின முதலியாரின் வாழ்க்கை வரலாற்றை சே.வே. ஜம்புலிங்கம் எழுதியுள்ளார் (சபாரத்தின முதலியார் சரித்திரம். இணைய நூலகம்)

நூல் பட்டியல்

  • சீவான்ம பேதம்
  • ஈச்சுர நிச்சயம்
  • பிரபஞ்ச விசாரம்
  • நல்லை நான்மணி மாலை
  • கொக்குவில் சித்திவிநாயகர் இரட்டை மணிமாலை
  • திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் சரித்திரம்
ஆங்கில நூல்கள்
  • Essentials of Hinduism
  • Life of Thiru Gnana Sambanthar

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Mar-2023, 06:29:02 IST