under review

சங்குப்புலவர்

From Tamil Wiki
சங்குப்புலவர் கோயில் எட்டிசேரி

சங்குப்புலவர் (மலை சாயப் பாடிய புலவர்) (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். தென்காசி தேவதானத்திலுள்ள பெற்ற நாயகி அம்மன் கோயிலுக்கு மண்டபம் கட்டத் தடையாக இருந்த மலை இவர் பாடிய பாடலால் சாய்ந்ததால் இப்பெயர் பெற்றார். தனிப்பாடல்கள் பல பாடினார் என்ற குறிப்பு காணப்படுகிறது.

வாழ்க்கைக் குறிப்பு

சங்குப்புலவர் தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரில் உள்ள எட்டிசேரியில் பிறந்தார். இவரின் மகன் ச. திருமலைவேற் கவிராயர். ஒரே பேரன் தி. சங்குப்புலவர். இருவருமே தமிழ்ப்புலவர்கள், அறிஞர்கள்.

இலக்கிய வாழ்க்கை

எட்டிசேரி
மலைசாயப் பாடியவர்

பொ.யு. 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் சேற்றூரை ஆண்ட மன்னன் 'பெற்ற நாயகியார் நச்சடை லிங்கர்' ஆலயத்தின் முன் மண்டபம் கட்ட எண்ணினார். அதற்குத் தடையாக இருந்த ஒரு மலையைச் சாய்க்க எண்ணி சங்குப்புலவரிடம் கூறினார். அவர் பாடல் பாடி அதை ஓர் இலையில் எழுதி அம்மன் முன் வைத்துவிட்டு அங்கேயே தூங்கினார். அன்றிரவு பெய்த மழையில் தட்டைப்பாறை நழுவி மண்டபம் எழுப்ப வழி அமைந்தது. அவர் பரிசு எதுவும் பெற்றுக் கொள்ள மறுத்ததால் மன்னர் அவரின் பல்லக்கில் அவரை அமரச் செய்து இல்லத்திற்கு அனுப்பினார். இந்தச் செய்தி கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

பாடல் நடை

சங்குப்புலவர் பாடிய பெற்றநாயகி அம்மன் பாடல்

நிலைசாயொ ணாத தவசே புரிந்து நிறையமுத
கலைசார் தவம்பெற்ற தென்சேறை நாதனைக் கண்டவளே
உலைசார் உளிவைத்துக் கற்பணி உனதருளால்
மலைசாய வேண்டும் தவம்பெற்ற நாயகி மாதங்கியே

நினைவு

மலை சாயப்பாடிய சங்குப்புலவருக்கு தென்காசி மாவட்டம் கரிவலம்வந்த நல்லூரிலுள்ள எட்டிசேரி கிராமத்தில் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. இது 'பாட்டையா கோயில்' என்று அழைக்கப்படுகிறது. அந்த ஊரில் நிகழும் மங்கல நிகழ்ச்சிகளுக்கு முன் அவரை வணங்கியே தொடங்குகின்றனர்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Jun-2024, 20:54:12 IST