under review

சங்கரநாராயணன்

From Tamil Wiki
எஸ். சங்கரநாராயணன்

எஸ். சங்கரநாராயணன் (1925-2014) கல்வெட்டாய்வாளர். இந்திய தொல்லியல் துறையின் கல்வெட்டு அறிஞராக பணியாற்றியவர். இந்திய எழுத்துகள் அனைத்தும் பிராமியிலிருந்தே பிறந்திருக்க வேண்டும் என்ற கூற்றை முன் வைத்தார். வேதகால பெண்கள், சங்கரர் பற்றிய காலக்கணிப்பு இவரின் முக்கியமான பங்களிப்பு.

வாழ்க்கைக் குறிப்பு

எஸ். சங்கரநாராயணன் 1925-ல் பிறந்தார். வேதபாடசாலையில் பாரம்பரியக் கற்றலுக்குப் பிறகு சிதம்பரத்தில் உள்ள பொன்னம்பலப் பிள்ளை சமஸ்கிருதப் பள்ளியில் பயின்றார். ஆசிரியரின் உந்துதலால் ஆங்கிலம் கற்றார். மெட்ரிகுலேஷன் மற்றும் இன்டர் தேர்வுகளுக்குப் பிறகு அவர் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் படிப்பதற்காக விண்ணப்பித்தார். அவருக்கு வரலாறு ஒதுக்கப்பட்டது. ஆங்கில இலக்கியம் படிக்க வேண்டும் எனத் துணைவேந்தர் சி.பி.ராமசுவாமி ஐயரிடம் சொன்னபோது அவர் சமஸ்கிருதப் பின்னணியைக் கொண்டு வரலாற்றைப் படித்தால் நல்ல ஆராய்ச்சியாளராக முடியும் என்று கூறியதால் வரலாறு படித்தார். சங்கரநாராயணன் மைசூரில் பணியமர்த்தப்பட்டபோது, தார்வாட்டில் உள்ள கர்நாடக பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

பணி

சங்கரநாராயணன் இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்தில் (Archeological Survey of India) பணியில் சேர்ந்தார். இந்திய தொல்லியல் துறையின் கல்வெட்டு அறிஞராக இருபத்தியொரு ஆண்டுகள் பணியாற்றினார். திருப்பதி ஓரியண்டல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராகப் பத்து ஆண்டுகள் பணியாற்றினார்.

கல்வெட்டாய்வு/கோட்பாடுகள்

சங்கரநாராயணனின் சமஸ்கிருதப் பின்னணியும், வரலாற்றறிவும் வரலாற்றைப் புதிய கோணங்களில் பார்க்க அவருக்கு உதவின. சில சந்தர்ப்பங்களில் அவரது கோட்பாடுகள் அனுமானம் மட்டுமே என்று அவர் கூறுகிறார்.

இந்திய எழுத்துகள்

சங்கரநாராயணன் இந்திய எழுத்துகள் அனைத்தும் பிராமியிலிருந்தே பிறந்திருக்க வேண்டும் என்ற கூற்றை முன் வைத்தார். வேதங்களும் வேதாங்க நூல்களும் வாய்மொழியாகக் கற்றாலும், எழுத்து வடிவமும் இருந்திருக்க வேண்டும் என்று கருதினார். பாணினியின் 'அஷ்டாத்யாயி', யாஸ்கரின் 'நிருக்தா' போன்ற படைப்புகள் அவை தோன்றிய காலத்திற்கு முன்பே எழுதும் மரபு இல்லாமல் சாத்தியமில்லை என்கிறார். ஐதரேய ஆரண்யகத்தின் ஒரு பகுதியில் ”மாணவர்கள் வேதங்களை மையில் எழுதுவதன் மூலமோ, களிமண் மாத்திரைகள், இலைகளில் கீறுதல், கற்களில் பொறித்தல் போன்றவை மூலமோ வேதங்களைக் கற்கக் கூடாது” என்று கூறுவதை சுட்டிக் காட்டுகிறார். எழுத்துரு இல்லை என்றால் எழுதுவதற்கு ஏன் தடை விதிக்க வேண்டும்? என்ற கேள்வியை எழுப்புகிறார்.

அமரசிம்மர் தனது சொற்களஞ்சியத்தில் பாணினியின் மொழியை 'பாரதி பாஷா' (முழு இந்தியளாவிய இருப்பைக் கொண்ட ஒரு மொழி) என்று குறிப்பிடுகிறார். இது பிராமியை ஒத்த மொழி என்றும் குறிப்பிடுகிறார் - ”பிராமி து பாரதி பாஷா” (Brahmi tu Bharati Bhasha). பிராமி ஒரு காலத்தில் சமஸ்கிருதத்தின் பெயராக இருந்திருக்க வேண்டும் என்கிறார்.

சங்கரநாராயணன் தென்னிந்தியாவின் தொடக்ககால சமஸ்கிருதக் கல்வெட்டுக்களை அடையாளம் காட்டினார். ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள குண்டுபள்ளியில் உள்ள ஒரு தூணிலிருந்த கல்வெட்டு. சலங்கயான மன்னர் இரண்டாம் நந்திவர்மனின் காலத்தைச் சேர்ந்தது (பொ.யு. 4-ம் நூற்றாண்டின் கடைசிப் பகுதி) என்றும் சமஸ்கிருதத்திற்கு மாற்றாக பிராகிருதத்தைப் பயன்படுத்திய கல்வெட்டு என்றும் அடையாளம் காட்டி அதற்குப் பின்பு சமஸ்கிருதத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளின் காலம் எனக் குறிப்பிட்டார்.

சங்கரர்

சங்கரரின் மிகப் பெரிய சாதனை மீமாம்சைக்கு அப்பாற்பட்டு வேதாந்தத்தை தனி சாஸ்திரமாக நிறுவியதுதான் என்பது சங்கரநாராயணனின் கருத்து. சங்கரரின் படைப்புகளை கவனமாக ஆய்வு செய்தால், அவர் பொ.யு. 500-க்கு முன்பே வாழ்ந்திருக்க வேண்டும் என்று நம்புகிறார். சஙகரநாராயணன் குஜராத்தின் சஞ்சேலியில் இருந்து பொ.யு 506-ல் இருந்த செப்புத் தகடு கல்வெட்டை மேற்கோள் காட்டுகிறார். பூத மன்னன் 'பகவத்பாதாயனா' என்ற நிறுவனத்திற்கு இரண்டு கிராமங்களை வழங்கியதாக கல்வெட்டு கூறுகிறது. அக்ரஹாரமாக வழங்கப்பட்ட கிராமங்கள்'பரிவ்ராஜகபோஜ்யா' என மறுபரிசீலனை செய்யப்பட்டு மறுவடிவமைப்பு செய்யப்பட்டு அழைக்கப்படும் என கல்வெட்டு கூறுகிறது. பரமஹம்சரின் குருபரம்பரையில் இருந்த ஒரு பிராமணருக்கு வழங்கப்பட்ட நிலம். இங்கு குறிப்பிடப்படும் பிராமண துறவி ஆதி சங்கரராக இருந்திருக்க வேண்டும் என்கிறார் சங்கரநாராயணன்.

வேதகாலப் பெண்கள்

சங்கரநாராயணன் விதவை ராணி நாகம்னிகாவின் கல்வெட்டு சார்ந்து பிற அறிஞர்களிடமிருந்து வேறுபட்டார். பொ.மு முதல் நூற்றாண்டு கல்வெட்டு அவர் வேத யாகங்களைச் செய்தார் என குறிப்பிடுகிறது. ஒரு பெண் யாகங்களைச் செய்ய அனுமதிக்கப்படுவதை நினைத்துப் பார்க்க முடியாததால் கல்வெட்டில் ஏதோ விடுபட்டிருக்க வேண்டும் என்று அறிஞர்கள் கருதினர். ஆனால் சில மீமாம்ச பள்ளிகள் பெண்களை யாகம் செய்ய அனுமதித்ததாக சங்கரநாராயணன் கூறுகிறார். 'ஸ்வர்க காமோ யஜேதா' - சொர்க்கத்தை விரும்புபவர் யாகங்களைச் செய்ய வேண்டும் என வேதம் கூறுகிறது. 'ஸ்வர்க காமா' என்பது ஆண்பால் எனவே ஆண்கள் மட்டுமே யாகங்களைச் செய்ய முடியும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் பதராயனின் பள்ளி இது சரியான விளக்கம் அல்ல என்று வாதிட்டது. ஏனென்றால் 'சரணாகதோ ரக்ஷிதவ்யா' - அடைக்கலம் புகுந்தவர் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வேதத்தில் உள்ளது. நாகம்நிகா பாதராயண பள்ளியைப் பின்பற்றியிருக்கலாம் என சங்கரநாராயணன் கருதினார்.

மீமாம்ச பாஷ்யத்தின் ஆசிரியரான சரபஸ்வாமின் தங்கள் மனைவிகள் மீதான அன்பில் அவர்களை யாகம் செய்ய அனுமதிக்கும் ஆண்களைப் பற்றி கடுமையான கருத்துக்களைக் கூறினார். பெண்கள் யாகங்களைச் செய்யவில்லை என்றால் அவர் ஏன் இப்படிச் சொல்ல வேண்டும்? சரபஸ்வாமினும் நாகம்நிகாவும் காலத்தைப் பொறுத்து வெகு தொலைவில் இல்லை. நாகம்னிகா கல்வெட்டின் படி அவர் அஸ்வமேதம், ராஜசூயம் உட்பட 15 வேத யாகங்களைச் செய்தார்.

குருக்ஷேத்திரப் போர்

குருக்ஷேத்திரப் போர் நடந்த காலத்தைப் பற்றிப் பேசும் சங்கரநாராயணன், சாத்தியமான எல்லா ஆதாரங்களையும் ஒருங்கிணைத்தால், நடந்தது ஒரு போர் இல்லை, இரண்டு போர்கள் என்று முடிவு செய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறுகிறார். குருக்ஷேத்திரப் போர் முற்றிலும் கற்பனையாக இருந்திருக்கலாம் என்ற கருத்தை அவர் நிராகரிக்கிறார். தற்போது இருப்பது மிகவும் அலங்கரிக்கப்பட்ட கணக்கு என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார், கதையின் கரு உண்மையாக இருக்க வேண்டும். ஆனால் இரண்டு போர்கள் நடந்திருந்தால், எல்லாக் கணக்குகளும் ஏன் ஒரு போரை மட்டும் பேசுகின்றன? " என்னும் கேள்விக்கு "இரண்டு உலகப் போர்களைப் பற்றிய சரியான கணக்கு உங்களிடம் இல்லையென்றால், போர்களின் நினைவுகளை கதைகளின் மூலம் உயிர்ப்புடன் வைத்திருந்தால், நீங்கள் குழப்பமடைந்து இரண்டு போர்களையும் ஒன்றாக நினைக்க மாட்டீர்களா? குருக்ஷேத்திரப் போர் விஷயத்திலும் அதுதான் நடந்திருக்க வேண்டும்” என்றார். இப்போர்கள் பொ.மு. 25 மற்றும் 10--ம் நூற்றாண்டுகளில் நடந்தன என்று வாதிடுகிறார்.

தமிழும் சம்ஸ்கிருதமும்

சங்கரநாராயணன் சமஸ்கிருதம், தமிழ் இரண்டையும் மதிக்க வேண்டும் என்னும் கருத்து கொண்டிருந்தார். வைணவ உரையாசிரியர் பெரியவாச்சான் பிள்ளை தனது மணிப்பிரவாள விளக்கவுரையின் மூலம் இரு மொழிகளுக்கும் பெரும் சேவை செய்ததாகக் குறிப்பிடுகிறார்.

அகலிகை

ராமாயணத்தில் உள்ள அகலிகைக் கதைக்கு சங்கரநாராயணன் புதிய விளக்கம் அளிக்கிறார். வேதகாலக் கடவுளான இந்திரனை வில்லனாகச் சித்தரித்து, பிற்கால இலக்கியங்கள் அவருக்கு பெரும் அநீதி இழைத்ததாகக் கருதுகிறார்.. "ஹல்யா என்றால் சாகுபடி நிலம் என்று பொருள். மழை பொய்த்துவிட்டால், நிலம் அஹல்யா- சாகுபடி செய்யப்படாதது. இந்திரன் மழையின் கடவுள். மழை பொழிந்தால் நிலம் மகிழ்வதில்லையா? எனவே, இந்திரனில் அஹல்யாவின் மகிழ்ச்சியைப் பார்க்க வேண்டும், ஏனென்றால் மழை பெய்யும்போது, அவள் மீண்டும் சாகுபடிக்கு தகுதியானவளாகிறாள். ஆனால் ராமனின் பங்கு என்ன? -அவர் நிலத்தில் விவசாயத்தை மீட்டெடுத்தார்." என்று விளக்குகிறார்.

எழுத்து

சங்கரநாராயணன் 'ஸ்ரீ சங்கரரும் அவரது பாஷ்யமும் வரலாற்றுக் கண்ணோட்டத்தில்' என்ற புத்தகத்தை உருவாக்கினார். சங்கரநாராயணன் போஜராஜசரித்ரா, அபிநவகுப்தரின் கீதார்த்த சங்கிரஹம், தர்க்கசங்கிரஹம் மற்றும் தீபிகாப்பிரகாசம் பற்றிய இரண்டு வர்ணனைகளின் விமர்சனப் பதிப்புகளை பதிப்பித்துள்ளார்.

விருது

  • அடையாறு நூலகத்தின் முன்னாள் கெளரவ இயக்குனராக இருந்தார்.
  • சமஸ்கிருதத்திற்கு குடியரசுத் தலைவர் விருது பெற்றவர் (1994)
  • பரமாச்சாரியார் சங்கரநாராயணனுக்கு 'வேதசாஸ்திர ரத்னாகரா' என்ற பட்டத்தை வழங்கினார்.

மறைவு

எஸ். சங்கரநாராயணன் 2014-ல் காலமானார்.

நூல்கள் பட்டியல்

  • Brahmasutra Catuhsutri Sankara Bhasyam: Sri Sankaracarya's Commentary on the Catuhsutri of Brahmasutra (Set of 2 Volumes) (Kanshi Ram)
  • The Vishnu Kundis and Their Times- An Epigraphical Study
பதிப்பித்தவை
  • போஜராஜசரித்ரா
  • அபிநவகுப்தரின் கீதார்த்த சங்கிரஹா
  • தர்க்கசங்கிரஹம் விமர்சனம்
  • தீபிகாப்பிரகாசம் விமர்சனம்

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page