under review

சக்தி பீடங்கள்

From Tamil Wiki

சக்தி பீடம் என்பதற்குச் சக்தியின் அமைவிடம் என்பது பொருள். தட்சனின் மகளான தாட்சாயணியின் உடல் பாகங்கள் விழுந்த இடங்களில் எழுப்பப்பட்ட ஆலயங்களே சக்தி பீடங்கள் என அழைக்கப்படுகின்றன.

சக்தி பீடங்களின் வகைகள்

சக்தி பீடங்கள் பொதுவாக நான்கு வகைப்படும். அவை

  • நவசக்தி பீடங்கள்
  • அட்சர சக்தி பீடங்கள்
  • மகா சக்தி பீடங்கள்
  • ஆதி சக்தி பீடங்கள்

தேவிக்கு 108 சக்தி பீடங்கள் உள்ளதாகவும், அவற்றில் 64 பீடங்கள் குறிப்பிடத்தகுந்தவை என்றும் தேவி பாகவதம் கூறுகிறது. தந்திர சூடாமணி 51 சக்தி பீடங்கள் பற்றிக் கூறுகிறது. சக்தி பீடங்களின் எண்ணிக்கை குறித்து சமய, ஆன்மிகத் தத்துவ நூல்களில் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. பல்வேறு சக்தி பீடங்கள் உள்ளதாகச் சமய நூல்கள் தெரிவிக்கின்றன.


சக்தி பீடங்கள் தோன்றிய வரலாறு (தொன்மம்)

முதல் வரலாறு

சிவபெருமானை அழைக்காமல், மதிக்காமல், சிவனின் மாமனாரான தட்சன் வேள்வி இயற்றினார். வேள்விக்குச் சென்ற தாட்சாயணி, அங்கு தானும் தனது நாயகனும் அவமதிக்கப்பட்டதால் சினம் கொண்டார். மனம் பொறுக்காமல் அங்கு இருந்த யாக குண்டத்தில் விழுந்து உயிர் துறந்தார். சிவனின் ஆணையால் வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார்.

தாட்சாயணி உயிர் துறந்ததை அறிந்த சிவபெருமான், அடங்காச் சினமுற்றார். யாகம் நடந்த இடத்திற்கு வந்தார். தனது தேவியின் இறந்த உடலை எடுத்துச் சிரசின் மேலே வைத்துக்கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார். காக்கும் கடவுளான திருமால் தமது சக்கராயுதத்தை ஏவி, தாட்சாயணியின் உடலைத் துண்டுகளாக்கி பூமியில் தெறித்து விழச் செய்தார். பாரத நாட்டின் பல்வேறு பாகங்களில் அவ்வுடற்பாகங்கள் விழுந்தன, அவையே 51 சக்தி பீடங்கள்.

51 சக்தி பீடங்களில், 18 சக்தி பீடங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அவை அஷ்டாதச சக்தி பீடங்கள் என அழைக்கப்படுகின்றன.

இரண்டாவது வரலாறு

சக்தி பீடங்கள் பற்றி மற்றொரு வரலாறும் கூறப்படுகிறது.

தட்சன் மகளாய் அவதரித்த அன்னை பராசக்தி, சதிதேவி என்று அழைக்கப்பட்டாள். சிவபெருமானுக்கு திருமணம் செய்துகொடுக்கப்பட்டாள். தந்தை தட்சன், தான் செய்த யாகத்தில் சிவனை அவமதித்ததால், சினம் கொண்ட சசிதேவி வேள்வித் தீயில் பாய்ந்து உயிர் துறந்தாள்.

சிவபெருமான், அக்கினிக்குள் சித்கலாரூபமாக இருந்த சதிதேவியின் திருமேனியைத் தன் தோள்களில் தூக்கிக் கொண்டு உலகெலாம் அலைந்தார். விஷ்ணுவின் வேண்டுகோளுக்கிணங்க, சித்கலாரூபமான அன்னையின் கலைகளை அகிலமெங்கும் தனித் தனிப் பீடமாக இருக்கச் செய்தார். அவ்வாறு அமைந்த நூற்றெட்டுப் பீடங்களில் தானும் அமர்ந்து அருள் செய்தார். அவையே 108 சக்தி பீடங்கள்.

மூன்றாவது வரலாறு

’சிவபெருமான் தேவியின் சிற்கலாரூபத்தைத் தாங்கி நிற்கையில், உலக வாழ்க்கையின் பொருட்டு, அவ்வுடலை வேண்டி திருமாலே சக்தி பீடங்களாக ஸ்தாபித்தார்’ என அபிதான சிந்தாமணி கூறுகிறது.

உசாத்துணை


✅Finalised Page