under review

க.த. காந்திராஜன்

From Tamil Wiki
Gandhirajan.jpg

To read the article in English: K.T. Gandhirajan. ‎


க.த. காந்திராஜன் (பிறப்பு: ஜூன் 05, 1970) (கவுண்டம்பட்டி தங்கராஜ் காந்திராஜன்) ஆய்வாளர். தமிழகத்தில் பாறை ஓவியங்களையும், பாறை செதுக்கோவியங்களையும் கண்டறிந்து ஆய்வுகள் செய்தவர். கரிக்கையூர் பாறை ஓவியங்கள் இவரால் ஆய்வுலகில் முன்வைக்கப்பட்டவை.

பிறப்பு, கல்வி

Gandhirajan1.jpg

க.த. காந்திராஜன் ஜூன் 05, 1970 அன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்திலுள்ள கவுண்டம்பட்டி கிராமத்தில் தங்கராஜ், வீரம்மாள் இணையருக்குப் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் ஒரு அக்கா மீனா, ஒரு தங்கை லதா. இருவரும் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகின்றனர்.

Gandhirajan3.jpg

காந்திராஜன் செங்கல்பட்டு ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா பள்ளியில் முதல் இரண்டு வகுப்புகள் பயின்றார். பின் கோவை அவினாசிலிங்கம் பள்ளியில் மூன்றாம் வகுப்பு கற்றார். தேனீ நாடார் சரஸ்வதி பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை பயின்றார். உயர்நிலைக்கல்வியை உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி பள்ளியில் பயின்றார். உசிலம்பட்டியிலுள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் வேதியியலில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். சென்னை கவின்கலைக் கல்லூரியில் இண்டிகிரேடட் பிரிப்பரேடரி கோர்ஸாக இரண்டு ஆண்டுகள் ஓவியம் கற்றார் (Integrated preparatory course). மதுரை காமராஜ் கல்லூரியில் முதுகலை பட்டம் கலை, வரலாறு மற்றும் ஓவியத்துறையில் முதுகலை பட்டம் பெற்றார்.

சென்னைப் பல்கலைகழகத்தில் மூன்று ஆண்டுகள் தமிழக நாயக்கர் கால ஓவியங்கள் குறித்து முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டார். அங்கே காந்திராஜனின் வழிகாட்டியுடன் ஏற்பட்ட மனகசப்பால் முனைவர் பட்ட ஆய்வை முடிக்கவில்லை.

தனி வாழ்க்கை

காந்திராஜன் பொ.யு. 1998-ம் ஆண்டு சுமதியை திருமணம் செய்துக் கொண்டார். சுமதி ஆசிரியராகப் பணியாற்றுகிறார். காந்திராஜன் சுமதி தம்பதியருக்கு ஒரு மகன் ஹேமந்த்.

ஆய்வு பணி

Gandhirajan5.jpg

காந்திராஜன் 2001 முதல் 2007 வரை சென்னை ஓவியக்கல்லூரியில் பகுதி நேர விரிவுரையாளராக கலை மற்றும் வரலாற்று துறையில் பணியாற்றினார். சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் நாயக்கர் கால சுவர் ஓவியங்கள் பற்றிய ஆய்வு பிரிவில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். இந்திரா காந்தி நேஷ்னல் செண்டர் ஃபார் ஆர்ட்ஸ் அமைப்பின் கீழ் இந்தியா முழுவதும் உள்ள பாறை ஓவியங்கள் பற்றிய ஆவணப்பணிகளில் களப்பணியாளராகப் பணியாற்றினார் (2010-2012).

Gandhirajan6.jpg

2012 -2015 காலங்களில் வெளிநாட்டிலிருந்து வரும் மனிதவியல் துறை பேராசிரியர்கள், மாணவர்களுக்கு இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்பவராகப் பணியாற்றினார். 2015 முதல் சென்னை தமிழ் இணைய கல்வி கழகத்தின் ஆய்வு வளமையராகப் பணியாற்றி வருகிறார்.

பயிற்சி வகுப்பு

காந்திராஜன் மாணவர்களுக்காக கலை, பாரம்பரியம் சார்ந்த ஒன்பது பயிற்சி வகுப்புகளை நிகழ்த்தியுள்ளார். இந்தியா முழுவதும் பதினைந்திற்கும் மேற்பட்ட இடங்களில் உரை நிகழ்த்தியுள்ளார்.

கண்காட்சி

க.த. காந்திராஜன் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் 'Madurai through the Ages' (2011), தஞ்சாவூர் ஆயிரம் ஆண்டு விழாவில் 'Art of Cholas' (2010), சென்னை பல்கலைகழகத்தின் தமிழ் துறை சார்பாக "Pre historic rock painting" (2003, 2004) உட்பட பதினைந்திற்கும் மேற்பட்ட கண்காட்சிகளை ஒருங்கிணைத்து நடத்தினார்.

மதிப்பீடு

Gandhirajan4.jpg

க.த. காந்திராஜன் மதுரை, கரிக்கையூர் பகுதிகளைத் தன் முதன்மை ஆய்விடமாகக் கொண்டவர். தமிழகத்தில் ஐம்பத்தைந்திற்கும் மேற்பட்ட பாறை ஓவியங்கள், பாறை செதுக்கோவியங்கள், வீரன் கற்களை இவர் கண்டெடுத்துள்ளார். நீலகிரி மாவட்டப் பகுதியிலுள்ள கரிக்கையூர் பாறை ஓவியங்கள் காந்திராஜனால் விரிவான ஆய்வுக்குறிப்புகளுடன் முன்வைக்கப்பட்டு அறிவுலகில் கவனம்பெற்றன.

நூல்கள்

  • கீழடி - மதுரை, சங்ககால தமிழர் நாகரிகம், 2018
  • கரிக்கையூர் - நீலகிரியில் பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்புகள்
  • தொல்லியல் - தமிழர் வரலாற்றுத் தடங்கள், 2018 (கட்டுரையாளர்)
  • ஏறுதழுவுதல் ஜல்லிக்கட்டு, கருத்துப்பட்டறை, 2017 (கட்டுரையாளர்)

ஆவணப்படம்

  • கருத்துருவாக்கம் - ராஜேந்திர சோழனின் கடற்பயணம், தமிழ் வெர்ச்சுவல் அகாடமி 2022
  • ஆய்வு - சதியில் தேவரடியார்கள், முத்துக்கண்ணம்மாள் வாழ்வும், கலையும் - சண்முகநாதன் (இயக்கம்), இந்திய திரைப்பட கழகம் - 2019
  • இயக்குனர் - கண்ணகியின் பயணம் - 2015
  • துணை இயக்குனர் - கட்டப்பொம்மலாட்டம் - 2014
  • துணை இயக்குனர் - குரும்பர்களின் தேன்வழி - 2011
  • துணை இயக்குனர் - ஊரும் சீரும் - 2009
  • துணை இயக்குனர் - ஊர் (ஒளி கட்டுரை)

வெளி இணைப்புகள்


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 25-Jul-2024, 20:14:51 IST