under review

கோல்பில்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி

From Tamil Wiki
பள்ளியின் புதிய கட்டிடம்

தேசிய வகை கோல்பில்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி சிலாங்கூரில் அமைந்துள்ளது. இப்பள்ளி கோல சிலாங்கூர் மாவட்டத்தைச் சார்ந்தது.

வரலாறு

கோல்பில்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி 1928-ம் ஆண்டு தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளின் நலன் கருதி தோட்ட நிர்வாகத்தினரால் தோற்றுவிக்கப்பட்டது. தொடக்கத்தில் இப்பள்ளி ‘Coal Field Estate Tamil School' என்று அழைக்கப்பட்டது. பள்ளிக்கென கட்டிடம் இல்லாததால், தோட்டத்தில் அமைந்திருந்த மாதா கோயிலில் அடிப்படை வசதியின்றி இப்பள்ளி செயல்பட்டது. 1967-ம் ஆண்டு கோல்பில்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கென ஒரு புதிய கட்டிடம் கிடைத்தது. 1989-ம் ஆண்டில், இப்பள்ளியில் 103 மாணவர்கள் கல்வி கற்றனர். தோட்டத்தில் வசிக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளோடு, சுற்று வட்டாரத்துக் கம்பத்து மக்களின் குழந்தைகளும் கோல்பில்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் கல்வி கற்று வந்தனர்.

பள்ளிக் கட்டிடம்

1967-ம் ஆண்டில் கட்டப்பட்ட இப்பள்ளிக் கட்டடத்தில் பாதிப்புகள் ஏற்படத் தொடங்கின. கால மாற்றத்திற்கேற்ப சிறப்பான கட்டிட வசதிகளற்ற பள்ளியாக இப்பள்ளியின் கட்டிடம் அமைந்தது. அவ்வப்போது பள்ளி கட்டிடங்களில் ஏற்படும் பாதிப்புகளைச் சீர் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

முதல் கட்டிடம்

1964-ம் ஆண்டு இப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றிய திரு. சக்திவேல், பள்ளியின் வாரியத் தலைவர், தோட்ட மேலாளர், Mr. D. G. Schubert போன்றவர்களின் துணையோடு, கல்வி இலாகாவின் மானியத் தொகையுடன் பள்ளியில் மூன்று வகுப்பறைகளைக் கொண்ட ஓர் இணைக்கட்டிடம் கட்டப்பட்டது. அரை ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட இப்பள்ளியின் நிலம் கோல்ட் ஃபீல்ஸ் தோட்ட நிர்வாகத்திற்குச் சொந்தமானது. இருப்பினும் பள்ளியின் தேவைக்கேற்ப அவ்வப்போது இணைக்கட்டிடங்கள் எழுப்பப்பட்டன/

புதிய நிலத்தில் புதிய கட்டிடம்

2012-ம் ஆண்டு சிலாங்கூர் மாநில அரசு, இப்பள்ளிக்குப் புதிய கட்டிடத்தைப் புதிய இடத்தில் கட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டது.

2012-ல், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சேவியர் ஜெயகுமார் அவர்கள் இப்பள்ளிக்கு நவீன வசதிகளைக் கொண்ட கட்டிடத்தைக் கட்டும் திட்டத்தை உருவாக்கினார். இதற்கான கல்நாட்டு விழா 2012-ல் நடத்தப்பட்டது. பின்னர் 2019-ம் ஆண்டு முதல் தற்போது வரை இப்பள்ளி தோட்டப்புறத்திலிருந்து வெளியேறி புதிய இடத்தில் புதிய கட்டிடத்தில் இயங்கி வருங்கின்றது.

இன்றைய நிலை

கோல்பில்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி தற்போது சிறப்பாகப் புதிய கட்டிடத்தில் இயங்கி வருகின்றது. போதிய வசதிகளுடன் இப்பள்ளி மாணவர்கள் கல்வி பெற்று வருகின்றனர்.

உசாத்துணை

  • க. முருகன், சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் (2015).
  • மலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்க்கல்வியின் மேம்புகழ் (2016).


✅Finalised Page