under review

கோணங்கி ஆட்டம்

From Tamil Wiki

To read the article in English: Konangi Aatam. ‎

கோணங்கி ஆட்டம்

கோணங்கிதனமாக, கோமாளியின் ஒப்பனையுடன் ஆடும் ஆட்டம் கோணங்கி ஆட்டம் எனப்படும். இக்கலை குறித்த சரியான வரலாற்று தகவல் கிடைக்கவில்லை. சித்திரை, வைகாசி, புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் இந்நிகழ்ச்சி நடைபெறும். இந்நாட்களில் தீமையிலிருந்து ஊர் நன்மை பெறுவதற்காக நடத்தப்படும் "கம்ப சேர்வை" என்ற நேர்ச்சையின் ஒரு கூறாக கோணங்கி ஆட்டம் நிகழ்த்தப்படுகிறது.

நடைபெறும் முறை

கோணங்கி ஆட்டத்தை ஆண் ஒருவர் மட்டுமே நிகழ்த்துகிறார். இவர் முப்பது வயதிற்கு மேல் உடையவராக இருக்கவேண்டும் என்பது நியதி.

கோணங்கியாட்டத்தின் மையம் கண்ணன் கதை தொடர்பானது. கண்ணன் கோகுலத்து கோபியருடன் ஆடும் போது மூளைக் கோளாறு கொண்ட வயதானவனாக ஆடினான் என்பது வாய்மொழி மரபு. இந்த வாய்மொழிக் கதையை தழுவியே இந்த ஆட்டம் நிகழ்கிறது. இக்கதையோடு, திருமாலைக் குறித்தும் ஒருவர் பாடுவார். அதற்கேற்ப ஆட்டமும் நிகழும்.

பாடகரின் பாடல், இசைக் கருவிகளின் தாளம் ஆகியவற்றிற்கேற்ப கலைஞர் ஆடுவார். கை, கால்களை விரித்து ஆட்டியும், நாணம் உடையவராக உடலைக் கோணிக் கொண்டும் ஆடுவார். அப்போது இறைவன் அருள் வந்து அருள்வாக்கு கூறும் போது இவர் கோணங்கி பெருமாளாகக் கருதப்படுகிறார்.

இவரது அருள்வாக்கு பலிக்கும் என்ற நம்பிக்கை ஊர் மக்களுக்கு உள்ளது. அருள் வாக்கு முடிந்ததும் ஆட்டம் நின்றுவிடும். இக்கலை கோவில் சடங்கு சார்ந்த கலை. இதனை நிகழ்த்த கலைஞர் ஊதியம் பெற்றாலும் இது தொழில்முறைக் கலையாக கருதப்படவில்லை.

தனிப்பட்ட மனிதர் அன்றி ஊர்மக்கள் சேர்த்து ஊர்பணத்தில் கம்ப சேர்வையை நிகழ்த்துகின்றனர்.

கம்ப சேர்வை

கோணங்கி ஆட்டம் சித்திரை, வைகாசி, புரட்டாசி மாதங்களின் சனிக்கிழமைகளில் நிகழ்கிறது. இந்த நாட்களில் தீமையிலிருந்து ஊர் நன்மை பெறுவதற்கு நடத்தப்படும் "கம்ப சேர்வை" என்னும் நேர்ச்சையின் பகுதியாக இக்கலை நிகழ்கிறது.

திருப்பதிக்கோ, கலிய பெருமாள் கோவிலுக்கோ சென்று வந்த பணக்காரர்கள் ஏழுமலையான் என்ற தெய்வத்திற்கு படையல் போடும் நிகழ்ச்சி "கம்ப சேர்வை" எனப்படும். இந்நிகழ்ச்சியில் ஏழைகளுக்கு விருந்து அளிக்கப்படும். விருந்திற்கு முன் கோணங்கி ஆட்டம் நிகழும்.

நிகழ்த்துபவர்

இந்நிகழ்த்துக் கலையை தனி ஒரு ஆண் மட்டுமே கோமாளி வேஷம் கட்டி நிகழ்த்துகிறார்.

அலங்காரம்

கோணங்கி ஆட்டக்காரர் கோமாளியைப் போல் ஒப்பனை செய்து கொள்கிறார். தலையில் கோமாளித் தொப்பி, நெற்றி, கன்னங்களில் நாமம், நரைத்த மீசை, தாடி, கழுத்தில் துளசி மாலையுடன் இவர் தோன்றுவார்.

கையில் எரிகின்ற பந்தத்தையோ, கதை ஆயுதத்தையோ வைத்திருப்பார். முழுக்கால் சட்டையும், முழுக்கைச் சட்டையும் அணிந்திருப்பார்.

நிகழும் ஊர்கள்

நாகபட்டினம் மாவட்டம் மயிலாடுதுறைக்கு வடக்கே உள்ள பகுதிகளில் இக்கலை நிகழ்கிறது. அருவாப்பாடி என்ற ஊரில் இது மூன்று தலைமுறையாக நிகழ்கிறது.

நிகழும் சாதிகள்

  • இக்கலையைப் பெரும்பாலும் வன்னியர், நாயக்கர் சாதியினரே நிகழ்த்துகின்றனர்.

நடைபெறும் இடம்

  • இக்கலை ஊர் பொது இடங்களிலோ, கோவில் வளாகத்திலோ நடைபெறும்

இசைக்கருவிகள்

இக்கலைக்குரிய இசைக்கருவிகள் பம்பை, சேமங்கலம், ஆர்மோனியம். சில இடங்களில் தவில், தப்பு முதலிய இசைக்கருவிகளும் பயன்படுத்துகின்றனர். இது நிகழ்ச்சியை நடத்துபவரின் பொருளாதார நிலையைப் பொறுத்து அமையும்.

உசாத்துணை

  • தமிழக நாட்டார் நிகழ்த்துக் கலைகள் களஞ்சியம் - அ.கா.பெருமாள்

வெளி இணைப்பு


✅Finalised Page