under review

கோட்டை பிள்ளைமார்

From Tamil Wiki

கோட்டை பிள்ளைமார் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் வாழ்ந்த சாதியினர். கோட்டை பிள்ளைமார் திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பாண்டியனின் ஆட்சிக் காலத்தில் கோட்டை கட்டி அதனுள் வாழ்ந்தனர். இப்போது கோட்டை பிள்ளைமார் சாதியில் யாரும் உயிருடன் இல்லை.

தோற்றத் தொன்மம் (Origin Myth)

Kottai Pillamar 2.jpg

கோட்டை பிள்ளைமார், காஷ்மீரைப் பூர்வக்குடியாகக் கொண்டவர்கள் என நம்பப்படுகிறது. இவர்கள் ஏன் காஷ்மீரில் வாழ்ந்தனர் என்பது பற்றி அறியமுடியவில்லை. கோட்டை பிள்ளைமார் சாதியினர் வடதிசையிலிருந்து மதுரை வந்த போது வனவர்த்த பாண்டியன் கனவில் ஐந்து தலை பாம்பு தோன்றி, “உன்னுடைய தேசத்திற்குள் வருபவர்கள் பாரம்பரியம் கொண்டவர்கள். உனக்கு முடிசூட்டும் உரிமைக் கொண்டவர்கள். அவர்களை நல்ல முறையில் கவனித்துக் கொள்” என்றது. பாண்டியன் தன் கீழ் சிற்றரசனாக இருந்த ராமநாதபுரம் மன்னனுக்குச் செய்தி அனுப்பினான். பாண்டியனின் ஆணைப்படி கோட்டை பிள்ளைமார் சாதியினர் ராமநாதபுரத்தில் கோட்டை கட்டி வாழ்ந்தனர் என்ற தொன்ம கதை வழக்கில் உள்ளது.

வரலாறு

Kottai Pillamar 3.jpg

கோட்டை பிள்ளைமார் பாண்டிய நாட்டினுள் வந்த பிறகு மதுரைக்கு தென்கிழக்காக ராமநாதபுரம் பகுதியில் வாழ்ந்தனர். கோட்டை பிள்ளைமார் பாண்டிய அரசனின் அரசியல் ஆலோசகராக இருந்தனர். நீர் மேலாண்மையிலும், விவசாயத் தொழில்நுட்பத்திலும் பங்களிப்பாற்றினர். கோட்டை பிள்ளைமார் ராமநாதபுரம் பகுதியை விட்டு ஸ்ரீவைகுண்டம் வந்ததற்கு இரண்டு கதைகள் சொல்லப்படுகின்றன. இரண்டுமே பாண்டிய மன்னனுடன் ஏற்பட்ட பிணக்கால் நிகழ்ந்தவை

ஒன்று, கோட்டை பிள்ளைமார் பாண்டிய மன்னனுக்கு பெண் கொடுக்கும் உரிமை பெற்றிருந்தனர். ஒரு முறை பாண்டியனுக்குப் பெண் கொடுக்க மறுத்ததால் அரச குடும்பத்தோடு ஏற்பட்ட மனத்தாங்கலால் ஸ்ரீவைகுண்டம் பகுதிக்குக் குடிப்பெயர்ந்தனர் என நம்பப்படுகிறது.

Kottai Pillamar 4.jpg

இரண்டு, கோட்டை பிள்ளைமார் ராமநாதபுரம் பகுதியில் வாழ்ந்த போது மதுரையைப் பாண்டியன் தென்னவராயன் ஆண்டு வந்தான். தென்னவராயன் மனைவிக்கு ஒரு ஆண் குழந்தையும், வைப்பாட்டிக்கு ஒரு ஆண் குழந்தையும் இருந்தது. தென்னவராயன் தன் மூத்த மகனை விட்டு விட்டு வைப்பாட்டியின் மகனை அரசனாக அறிவித்தான். இதனால் கோபம் கொண்ட கோட்டை பிள்ளைமார் இனத்தவர்கள் அரசனுக்கு எதிராகக் குரல் எழுப்பினர். தென்னவராயன் தன் சொல்லுக்குக் கட்டுப்படும் படி கட்டளையிட்டதால் கோட்டை பிள்ளைமார் தங்கள் கோட்டைக்குள் ஒன்று கூடினர். கோட்டைக்குள் இருந்த எழுபது குடும்பங்களும் ஒன்று கூடி விறகு மூட்டினர். குடும்பத்திற்கு ஒருவராக எழுபது பேர் நெருப்பினுள் குதித்தனர். எஞ்சியிருந்தவர்களும் குதிக்கக் காத்திருந்த போது ஐந்து தலை நாகம் ஒன்று அவர்கள் முன் தோன்றி தெற்கு அவர்களுக்கான வாழ்வாதாரம் அமையும் எனச் சொல்லி மும்முறை நிலத்தில் அறைந்தது.

பழைய வடக்கு வாசல்

பாம்பின் சொல்படி தெற்கே தாமிரபரணி ஆற்றங்கரையை நோக்கி கோட்டை பிள்ளைமார் இனத்தவர்கள் சென்றனர். பாம்பு கொற்கையை ஆண்ட பராக்கிரம பாண்டியன் கனவில் தோன்றி அவர்கள் வரவை அறிவித்தது. அரசன் அவர்களை ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கோட்டை கட்டி வாழும் படி பணித்தான்.

கோட்டை பிள்ளைமார் இனத்தவர்கள் எங்கே கோட்டை கட்டுவது என யோசித்த போது ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவில் கோபுரத்தின் மேலிருந்த கருடன் வட்டமிட்டு கோட்டை அளவைக் காட்டியதாக ஒரு தொன்மக் கதை கூறுகிறது.

திருவிதாங்கூர் அரசனோடு பிணக்கு கொண்ட எட்டு விட்டு பிள்ளைமார் இவர்கள் என்ற கதையும் உள்ளது. ஆனால் இதற்கான எந்த வாய்மொழி/வழக்காறு சான்றுகளும் இல்லை.

ஸ்ரீவைகுண்டம் கோட்டை

ஸ்ரீவைகுண்டம் கோட்டை மலையாள ஆண்டு 921-ல் சித்திரை மாதத்தில் கட்டப்பட்டது. இது தற்காலிக கோட்டையாக இருந்ததாகவும், இதனை கட்டி நாற்பது ஆண்டுகளுக்கு பின் உறுதியான புதிய கோட்டை கட்டப்பட்டதாகவும் தகவல் உள்ளது.

கோட்டை அமைப்பு

ஸ்ரீவைகுண்டத்தில் அமைந்த கோட்டையின் உட்பகுதி 22 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது. கோட்டை சுவர் மூன்றரை மீட்டர் உயரமும், ஒன்றரை மீட்டர் அகலமும் கொண்டது. மண் சுவரில் பதனீர், சுண்ணாம்பு கலந்த பூச்சினால் ஆனது. மேற்கே ஒன்று, கிழக்கே இரண்டு, தெற்கே ஒன்று என நான்கு வாசல்கள் கொண்டது.

பயன்படுத்தும் முறை

கோட்டையின் மேற்கு வாசலை ஆண்களின் பொது அவசியத்திற்கு பயன்படுத்தினர். கோட்டையின் கிழக்கு வாயில் ஒன்று எப்போதும் அடைக்கப்பட்டிருக்கும். அவ்வாயில் கோட்டை பிள்ளைமார் சாதியின் பெண்கள் இறப்பு சடங்கின் போது திறக்கப்படும். பெண்களின் சடலத்தை சாக்கில் சுற்றி மூடி அந்த வாயில் வழியாகக் கொண்டு தகனம் செய்வர். இறப்பிற்கு முன் கோட்டை பிள்ளைமார் சாதி பெண்கள் கோட்டையை விட்டு வெளியே வரும் வழக்கமில்லை.

தெற்கு கோட்டை வாசல் வழியாக வாகனங்கள் செல்லும். மற்றொரு கிழக்கு வாசல் வழியாக ஆண்கள் வெளியே வந்து செல்வர். கோட்டையை சுற்றி எப்போது காவல் இருக்கும்.

கோட்டையின் உள்ளே ஒரு நெற்களஞ்சியமும் உண்டு.

வாழும் முறை

கோட்டையினுள் பிற சாதி ஆண்கள் செல்லும் வழக்கம் இல்லை. பெண்கள் வேலை நிமித்தமாக உள்ளே சென்று வருவர். இவர்கள் கொத்துப்பிள்ளைகள் என அழைக்கப்பட்டனர். இவர்கள் கோட்டைக்குள்ளும் வெளியிலும் வேலை செய்வர். கொத்துப் பிள்ளைகளும் வேளாளர் இனத்தை சேர்ந்தவர்களே. இவர்கள் கோட்டை பிள்ளைமார் வாழ்க்கை சடங்குகளில் பங்கு கொள்வர். இவர்கள் கோட்டைக்கு வெளியே மேற்குப் பகுதியில் வாழ்ந்தனர்.

ஸ்ரீவைகுண்டத்தில் வாழ்ந்த ஆசாரி குடும்பங்கள் சிலவும் கோட்டையுள் வேலை செய்தனர். இவர்கள் கோட்டை கதவு பராமரிப்பு, வீட்டு மராமத்துப்பணி, திருமணத்தில் கோட்டை கால் நாட்டுதல் போன்றவற்றைச் செய்தனர். இவர்களைப் போல் கோட்டை கட்டுமானப் பணிகளில் ஈடுபடுபவர்களும் இருந்தனர்.

கோட்டையில் வயல் தொழில் செய்தவர்களும், நாவிதர், வண்ணான் குலத்தின் ஆண், பெண்கள் கோட்டைக்குள் சென்று வரும் வழக்கம் இருந்தது. இவர்கள் எல்லோரும் மரபு வழியாக இவ்வுரிமையைக் கொண்டிருந்தனர். கோட்டைக்குள் இருந்த அழகர் கோவிலில் பூஜை செய்யும் அந்தணர் இல்லமும் கோட்டைக்கு வெளியே அமைந்திருந்தது.

மகட்பேறு

பெண் கோட்டையை விட்டு வெளியே வருவதில்லை என்பதால் மகப்பேறும் கோட்டைக்குள்ளே நடைபெற்றது. சீமந்தச் சடங்குகளில் அத்திக்காய் ஆலங்காய் பிழிதல் என்ற சடங்கும் இவர்களிடம் உண்டு. அத்திக்காய் ஆலங்காய் இரண்டையும் கன்னிப்பெண்கள் கல்லால் நசுக்குவர். அப்போது ஆண்பிள்ளை ஆண் பிள்ளை எனச் சத்தமிடுவர். பின் நசுக்கிய காய்களை மாப்பிள்ளையின் கையில் கொடுப்பர். அவர் கர்ப்பிணி மனைவியின் கழுத்து, மார்பு பகுதிகளில் பிழிந்துவிடுவார்.

பெற்ற குழந்தைக்குக் கருப்புக்கட்டி, விளக்கெண்ணெய் இரண்டையும் கலந்து (சேனை) நாக்கில் தடவுவது வழக்கம். குழந்தையைப் பார்க்க வருகின்றவர்கள் சிறிய ஓலைப் பெட்டியில் நெல்லை நிறைத்துக் கொண்டு வருவர். இவர்களிடம் உருமாக்கட்டு என்ற சடங்கு உண்டு; ஆனால் மாப்பிள்ளையின் அம்மா மட்டும் உருமா கட்டுவார்.

இனப்பரப்பு

கோட்டைப் பிள்ளைமார் சாதியினர் மதுரைக்கு தென்கிழக்கே உள்ள ராமநாதபுரம் பகுதியிலும், ஸ்ரீவைகுண்டம் பகுதியிலும் கோட்டை கட்டி வாழ்ந்தனர். 1985-ல் நிகழ்ந்த கலவரத்திற்குப் பின் இவர்கள் கோட்டையை விட்டு வெளியேறி திருநெல்வேலி பகுதியில் வாழத் தொடங்கினர். அதன் பின் தங்கள் இன அடையாளத்தை திருநெல்வேலியிலுள்ள சைவ பிள்ளைமார்களுடன் சேர்த்துக் கொண்டனர்.

தொழில்

கோட்டை பிள்ளைமார் ராமநாதபுரம் பகுதியில் வாழ்ந்த போது அரசனுக்கு ஆலோசகராகவும், வேளாண்மையிலும் பணியாற்றி வந்தனர். ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இவர்கள் நில உரிமையாளர்களாக விவசாயம் செய்துவந்தனர்.

கல்வி

கோட்டை பெண்கள் முறையான பள்ளிக்கல்வி கற்கவில்லை என்றாலும் தமிழ், ஆங்கிலம், கணிதம் கற்றுத் தேர்ந்திருந்தனர்.

சாதி உட்பிரிவு

கோட்டை பிள்ளைமார் சைவ பிள்ளைமார் இனத்தின் உட்பிரிவை சேர்ந்தவர்கள் எனச் சொல்லப்பட்டாலும் இவர்கள் சைவ வழிபாட்டை சேர்ந்தவர்கள் இல்லை.

திருமண முறை

கோட்டை பிள்ளைமார் சாதியினரில் விதவை மறுமணம் கிடையாது. கோட்டை பிள்ளைமார் சாதியினரில் இளவயது திருமணமும் வழக்கில் இருந்தது. பொ.யு. 1911-ன் கணக்கெடுப்புப்படி 17 விதவைப் பெண்கள் இருந்தனர்.

உறவு முறை

கோட்டை பிள்ளைமார் இனத்தவர்கள் தாய்வழி உறவு முறைச் சமூகங்கள்

மக்கள் தொகை

  • பொ.யு. 1911-ன் கணக்கெடுப்பின் படி 400 பேர் (ஆண்களும், பெண்களும்) இருந்தனர்.
  • பொ.யு. 1979-ல் 300 பேர் கோட்டைக்குள் வாழ்ந்தனர். இது பொ.யு. 1971 கணக்கெடுப்பின் தகவலாக இருக்கலாம்.
  • பொ.யு. 1985-ல் உத்திரகுமாரி நடத்திய கள ஆய்வில் 34 பேர் இருந்தனர். கோட்டைக்குள் இருந்த வீடுகள் பொ.யு. 1985-ற்கு முன்னே சேதமடையத் தொடங்கிவிட்டன.

கோவில்கள்

கோட்டைக்குள் இருந்த அடிகள் கோவில், கோட்டையின் வெளியே உள்ள கரியமாணிக்க பெருமாள் கோவில், கோட்டைக்கு அடுத்த சாகைப் பகுதியில் உள்ள விநாயகர் கோவில் எல்லாம் கோட்டை மக்களுடன் தொடர்புடையது. இவர்களுக்கு நாட்டார் தெய்வ வழிபாடும் உண்டு. திருமணத்திற்கு முன் அகால மரணமடைந்த கன்னிப் பெண்களுக்கு வழிபாடு செய்யும் வழக்கமும் உள்ளது.

கோட்டை பிள்ளைமார் சாதியினர் பாண்டியனுக்கு முடிசூட்டும் உரிமை கொண்டிருந்தார்கள். அக்காலத்தில் இவர்களுக்கு திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சில உரிமைகள் இருந்தன. இதில் பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் நிகழும் சிறப்பு விழாவில் இவர்களுக்கு மான்யம் உண்டு. பொ.யு. 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ரூபாய் 4 உம், 18 பொற்காசுகளும் பெற்றிருக்கின்றனர்.

கோட்டை தலைவர்

கோட்டைக்குள் இருப்பவர்களுக்கு ஒரு தலைவரும் இருந்தார். முந்தைய காலங்களில் இங்கே தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் முறையும் இருந்தது. பொ.யு. 1970-ற்குப் பின் இது நின்றது. அதன் பின் வயதில் மூத்தவர் தலைவராக அறிவிக்கப்பட்டார். நிர்வாகப் பணிகளுக்கென்று பொது கட்டிடமும் கோட்டைக்குள் இருந்தது. தலைவர் கோட்டையை பராமரிப்பது, கோட்டைக் காவலாளிக்கு சம்பளம் கொடுப்பது, கோட்டைக்க்ச் சொந்தமான கோவில்களை மேற்பார்வை செய்வது போன்ற வேலைகளைச் செய்வார்.

கோட்டையின் வீழ்ச்சி

கோட்டையின் வீழ்ச்சி பொ.யு. 1972-73 காலத்தில் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது. கோட்டை பிள்ளைகளில் சண்முக சுந்தர ராஜா அரசியல் கட்சி ஒன்றின் பிரமுகராக இருந்தார். அவர் கட்சி வட்டாரங்களில் பிரபலமான போது கோட்டைக்கு வெளியே இருந்த அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். சுந்தர ராஜாவின் பங்காளிகள் தான் இதற்கு காரணம் என சந்தேகித்த போலீசார் கோட்டைக்குள் புகுந்தனர். போலீசார் உள்ளே சென்று கைது செய்த போது ஊர் மக்கள் கோட்டைக்குள் புகுந்தனர். மூந்நூறு ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்ட மரபு மீறப்பட்டதால் கோட்டையின் புனிதம் மறைந்ததாக எல்லோரும் கோட்டையை விட்டு வெளியேறினர். பொ.யு. 1985-ல் கோட்டையிலிருந்து அனைவரும் வெளியேறினர்.

ஆய்வுகள்

கோட்டை பிள்ளைமார் சாதியினர் பற்றி நிகழ்ந்த ஆய்வுகள் மிகக் குறைவே.

  • பொ.யு.1916-ம் ஆண்டு எச்.ஆர். பேட் வெளியிட்ட திருநெல்வேலி மாவட்ட வரலாறு நூலில் கோட்டை பிள்ளைமார் பற்றிய தகவல் உள்ளது. இத்தகவல் அனைத்தும் மக்கள் தொகை கணக்கெடுப்பு வழி அறியப்பட்டது.
  • பொ.யு. 1930-ல் எழுதப்பட்ட 'தாமிரபரணி வரலாறு' என்ற நூலிலும், பொ.யு. 1926-ல் எழுதப்பட்ட 'ஸ்ரீவைகுண்டபதி' என்னும் நூலிலும் கோட்டை பிள்ளைமார் பற்றிய தகவல் கிடைக்கின்றன.
  • முருக தனுஷ்கோடி மணிவிழா சிறப்பு மலரில் மனோகர சிங் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.
  • பொ.யு. 1981-ல் மதுரையில் நிகழ்ந்த உலக தமிழர் மாநாட்டில் கோட்டை பிள்ளைமார் பற்றி கமலா கணேஷ் ஒரு கட்டுரை படித்துள்ளார்.
  • ஆறுமுக நயினார் எழுதிய 'நற்குடி வேளாளர் வரலாறும் பாண்டியர் வரலாறு குடிமரபும்' என்னும் கவிதை நூலில் கோட்டை பிள்ளைமார் பற்றிய குறிப்புகள் உள்ளன.

உசாத்துணை

வெளி இணைப்புகள்


✅Finalised Page