under review

கோடங்கிப் பாட்டு

From Tamil Wiki

To read the article in English: Kodangi Paatu. ‎

கோடங்கிப் பாட்டு

கோடங்கி என்னும் இசைக்கருவியை அடித்துப் பாடும் பாட்டு கோடங்கிப் பாட்டு என்னும் நிகழ்த்துக் கலையாகும். குறி பார்த்தல், பேய் விரட்டுதல், நோய் தீர்த்தல் போன்ற நிகழ்ச்சியின் போது கோடங்கிப் பாட்டு நிகழ்த்தப்படும். கோடங்கிப் பாட்டினை உடுக்குப் பாட்டு, பேய் விரட்டுப் பாட்டு, குறிப்பாட்டு என்று வேறு பெயர்களிலும் அழைக்கின்றனர்.

நடைபெறும் முறை

ஒரு நபருக்குப் பேய் பிடித்ததும் அதனை விரட்டக் கோடங்கி அடித்துப் பாடும் போது பேய் விரட்டுப் பாட்டு என்றும், ஒருவருக்கு ஏற்பட்ட நோய் குனமாக கோடங்கி அடித்துப் பாடுவது குறிப்பாட்டு என்றும் அழைக்கின்றனர். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் நிகழும் கலையாகும். ஒருவருக்கு பேய் பிடித்தல், குறி பார்த்தல் போன்ற சமயங்களில் இது நிகழ்த்தப்படும்.

கிராம பெண்களில் பெரும்பாலானவர்களுக்கு பேய் பிடிப்பதும், கோடங்கி அடித்துப் பாடினால் பேய் விலகிவிடும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. எனவே இந்நிகழ்வை வீதிகள், திருவிழா மற்றும் பொது நிகழ்ச்சிகளில் நிகழ்த்துவதில்லை. இந்நிகழ்வு கோடங்கிக்காரரின் வீட்டில் நிகழ்கிறது.

பேய் விரட்ட விரும்புபவர் அல்லது குறி கேட்டு நோய் தீர்க்க விரும்புபவர் கோடங்கிக்காரரின் வீட்டிற்கு செல்வர். இந்நிகழ்வில் பாடுவதற்கு முக்கிய இசைக் கருவியாக கோடங்கி பயன்படுத்தப்படுகிறது. இதனை தவிர பேயோட்டுவதற்குச் சவுக்கு, மூங்கில் போன்ற பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. பேய் விலக மறுக்கும் போது சவுக்கை பயன்படுத்தி பேய் இருப்பவரின் உடலை அடிக்கின்றனர். பேய் பிடித்தவரின் தலையில் அடிப்பதற்கு மூங்கில் பிரம்பு பயன்படுத்தப்படுகிறது.

குறி சொல்லும்போது குறி சரியாக விழவில்லை என்றால் கோடங்கி அடித்துப் பாடத் தொடங்குவர். கோடங்கிக்காரர்கள் தங்கள் குல தெய்வத்தை நினைத்து கோடங்கி அடித்தவுடன் குறி சரியாக விழும் என நம்புகின்றனர்.

இந்நிகழ்வில் குறி கேட்க தாயம் விளையாடப்படுவதும் உண்டு. அதற்கு பயன்படுத்தப்படும் சோவியை 'முத்துக்குறி’ என்கின்றனர். முத்துக்குறி வீசுவதன் மூலம் குறி கேட்க வரும் வாடிக்கையாளர்களுக்கு என்ன நடந்தது, என்ன நடக்க இருக்கிறது, என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை சொல்கின்றனர். குறி சொல்லி முடித்ததும் திருநீறு வழங்குவர்.

இதனைப் பார்ப்பதற்கு தனியாக பார்வையாளர்கள் வருவதில்லை. குறி கேட்க வருவோர், பேய் விரட்ட வருவோர், நோய் தீர்க்க வருவோர் மட்டுமே பார்வையாளர்களாக உள்ளனர். கோடங்கிப் பாட்டில் குறி சொல்வதற்கு 50 ரூபாயும், பேய் விரட்டுவதற்கு 2000 ரூபாயும் பெறுகின்றனர்.

இந்த சார்ந்த நம்பிக்கைகள் காலப் போக்கில் குறைந்து வந்தாலும், குறிப்பிட்ட சாதியினரால் இது நிகழ்த்தப்பட்டு மக்களின் நம்பிக்கையினால் கோடங்கிப் பாட்டு வாழ்ந்து வருகிறது.

நிகழ்ந்த சான்றுகள்

தற்கொலை செய்துக் கொண்டவர்கள், கொலை செய்யப்பட்டவர்கள் இவர்களே பேயாக வந்து பிறரைப் பிடிப்பதாக நம்பப்படுகிறது.

இந்நிகழ்த்துக் கலையினை நேரில் ஆய்வு செய்து தொகுத்த முனைவர் அ.கா. பெருமாள் கமுதிப் பகுதியில் இதற்கு சான்றாக கிடத்த தகவல்களை பின்வருமாறு சொல்கிறார்.

"கமுதிப் பகுதியில் உள்ள வேல்சாமி கொலை செய்யப்படுகிறார். சாராயத் தொழில் செய்த இவர் கொலையுண்ட பிறகு பேயாக அலைந்து, பெண்களைப் பிடிப்பதாக கோடங்கிப்பட்டி கிராம மக்கள் நம்புகின்றனர்." என்கிறார். செய்வினை அகற்றவும் கோடங்கிப் பாட்டு இசைக்கப்படுகிறது.

கூத்து பயிற்றுமுறை

கோடங்கிப் பாட்டு குல வழியாகக் கற்பிக்கப்படுகிறது. இதற்குத் தனிப் பயிற்சி என எதுவும் வழங்கப்படுவதில்லை. தந்தைக்குப் பிறகு மூத்த மகன் இதனைச் செய்கிறான்.

நடைபெறும் இடம்

கோடங்கிப் பாட்டு வீதிகளிலோ, திருவிழா மற்றும் பொது நிகழ்வுகளிலோ நிகழ்த்தப்படுவதில்லை. இது கோடங்கிக்காரரின் வீட்டில் வெளி பார்வையாளர்கள் யாரும் இல்லாத போது நடைபெறுகிறது.

கோடங்கிப் பாடி பேய் விரட்டுதல்

நிகழ்த்தும் சாதி

சக்கம்மாளைக் குல தெய்வமாக கொண்டோரே கோடங்கிப் பாட்டு நிகழ்த்துகின்றனர். எனவே இது கம்பளத்து நாயக்கர் சாதியினரால் நிகழ்த்தப்படுகிறது. பிற சாதியினரில் மிகச் சிலர் இதனை நிகழ்த்துகின்றனர்.

உசாத்துணை

  • தமிழக நாட்டார் நிகழ்த்துக் கலைகள் களஞ்சியம் - அ.கா.பெருமாள்

வெளி இணைப்புகள்


✅Finalised Page