கோகிலாம்பாள் கடிதங்கள்
To read the article in English: Kokilambal Kadithangal.
மறைமலையடிகள் (சுவாமி வேதாச்சலம்) எழுதிய நாவல். (1921) இது தனித்தமிழ் நடையில் அமைந்தது. கடிதங்களின் தொகுப்பு என்னும் வடிவம் கொண்டது. தமிழில் தொடக்க காலத்தில் எழுதப்பட்ட நாவல்களில் ஒன்று.
பதிப்பு
கோகிலாம்பாள் கடிதங்கள் மறைமலையடிகள் எழுதிய இரண்டாவது நாவல். அவர் எழுதிய முதல் நாவல் குமுதவல்லி அல்லது நாகநாட்டு அரசி (1911). 1921-ல் கோகிலாம்பாள் கடிதங்கள் நூலாக வெளிவந்தது. ஆனால் 1911-ல் இது தொடராக வெளிவந்துள்ளது.
கோகிலாம்பாள் கடிதம் மறைமலை அடிகள் நடத்திவந்த ஞானசாகரம் இதழின் ஆறாம் இலக்கத்தில் இருந்து தொடராக வெளியிடப்பட்டது. "’எமது ஞானசாக ஆறாம் பதுமத்தின் முதல் சித்திரைத் திங்களில் வெளியிதற்கு துவக்கங்செய்யப்பட்டது. சாலிவாகன சகம். கஅசச ஆண்டு ஆனித்திங்களில் ஞானசகர ஒன்பதாம் பதுமத்தின் க0 கக கஉ இதழ்களில் முடிக்கப்பட்டது’ என மறைமலை அடிகளார் இந்நாவலின் நூல் வடிவுக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
இந்நாவல் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவருவதற்கு மேலும் பத்தாண்டுகள் ஆயின என்று மறைமலை அடிகளார் குறிப்பிடுகிறார்.
கதை
இந்நாவல் கோகிலாம்பாள் என்னும் பிராமணப் பெண் தன் காதலனாகிய தெய்வநாயகம் என்பருக்கு எழுதிய 17 கடிதங்களின் வடிவில் அமைந்துள்ளது. கோகிலாம்பாள் இளம் விதவை. அவள் தெய்வநாயகத்தை காதலிக்கிறாள். கோகிலாம்பாளுக்கு தெய்வநாயகம் கடிதங்களை எறிந்து கொடுக்க அவற்றை வாசித்துவிட்டு கோகிலாம்பாள் எழுதி திரும்ப எறிந்து கொடுக்கும் கடிதங்களே இந்நூலில் உள்ளன. கோகிலாம்பாள் இக்கடிதங்களில் சாதி மறுப்பு திருமணம், தனித்தமிழ் உரையாடல், கல்வியின் தேவை ஆகியவற்றைப் பற்றிய விவாதங்களை எழுதுகிறாள். பல இடர்களுக்குப் பின் அவள் தன் காதலனை மணக்கிறாள். பம்பாய்க்கு தம்பதிகள் சென்று சேர்கிறார்கள். தன் மனைவி தனக்கு எழுதிய கடிதங்களை தெய்வநாயகம் மறைமலை அடிகளுக்கு அனுப்பி அவற்றை நூல் வடிவில் வெளியிடும்படி கோருகிறான். இவ்வாறு இந்நாவல் முடிவுறுகிறது.
இந்நாவலில் கோகிலாம்பாள் நரகத்தையும் தேவர்களையும் அதைப்போன்ற தீய சக்திகளையும் காண்பது போன்ற மாயக் காட்சிகள் உள்ளன. கோகிலாம்பாளை கவர்ந்து சென்று சிறைப்படுத்திய குகையில் இருந்து அவள் ஒரு குடத்தை பற்றிக்கொண்டு ஆறு வழியாக தப்பி வருவதுபோன்ற சாகச நிகழ்வுகளும் உள்ளன. சென்னை, செகந்திராபாத் நகரப் பின்னணியில் அன்றாட வாழ்க்கைச் சித்தரிப்பும் உள்ளது.
இலக்கிய இடம்
மறைமலை அடிகள் தனித்தமிழ் இயக்க முன்னோடியாக அறியப்பட்டவர். இந்நாவல் தனித்தமிழில் எழுதப்பட்டது, 'இம்மைக்கும் மறுமைக்கும் என் இன்னுயித்துணையாய் அமர்ந்த காதற்கற்பகமே ’ என கோகிலாம்பாள் தன் காதலனுக்கு எழுதும் கடிதத்தை தொடங்குகிறாள். 'எனக்குண்டான மனப்புழுக்க உடம்பின் புழுக்கத்தாற் இருண்ட அவ்வானை ஓர் அரக்கன் உடம்பாகவும் அதிற்றோன்றும் மீன்களை அவனுடம்பிற்றோன்றிய வியர்வைத்துளிகளென்றும் நினைத்தேன்’ என்னும் நடை சித்தரிப்புக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. ’குழந்தாய் பெரிய ஐயாவுக்கு உடம்பின் நிலைமை எப்படியிருக்கிறது? யான் கேள்விப்பட்டதில் அவர்கள் பிழைத்தெழுவது அருமையென்று தெரிந்து இவ்வளவுக்கும் யான் காரணமாயிருந்ததை எண்ணி எண்ணி என் நெஞ்சம் ஏங்குகின்றது’ என்பது உரையாடலின் மொழி.
கோகிலாம்பாள் கடிதங்கள் நாவலை தூய தமிழ் நடையில் எழுதியதாக 1931-ல் இரண்டாம் பதிப்புக்கு மறைமலை அடிகளார் எழுதிய முன்னுரையில் குறிப்பிடுகிறார். 'இங்ஙனம் சொற்களையும் பொருள்களையும் தூயவாக்கி வகுத்தலே நூல்யாக்குமுறையென்பதனைச் சிறிதும் ஆய்ந்து பார்த்திராத இஞ்ஞான்றை கதைநூற்காரர்கள் வடசொல்லும் ஆங்கிலச் சொல்லும் கொச்சைத்தமிழ்ச்சொல்லும் விரவிய மிகச் சீர்கெட்ட நடையில் அவை தம்மை வரைந்து நூன்மாட்சியினைப் பாழ்படுத்துகின்றனர்’ என்கிறார் அதன் பொருட்டே இந்நாவலை எழுதியதாகச் சொல்கிறார்.
இந்நாவல் பின்னர் தனித்தமிழ் நடையில் எழுதப்பட்ட பல தமிழ்நாவல்களுக்கு முன்னோடியானது. குறிப்பாக மு. வரதராசனாரின் நாவல்கள் கோகிலாம்பாள் கடிதங்களின் நேரடியான செல்வாக்கு கொண்ட படைப்புகள். கோகிலாம்பாள் கடிதங்கள் சாமுவேல் ரிச்சர்ட்ஸன் எழுதிய பமீலா என்னும் கடித வடிவ நாவலில் இருந்து உத்தியை எடுத்துக்கொண்டது என்று சிட்டி-சிவபாதசுந்தரம் அவர்களின் "தமிழ் நாவல்" நூலில் குறிப்பிடுகிறார்கள்.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:32:58 IST