கொற்றவை நிலை
கொற்றவை நிலை வெட்சித்திணையின் துறைகளில் ஒன்று. வெட்சி மறவர் பகைவரின் ஆநிரையைக் கவர்வதற்காக கொற்றவையின் அருள்வேண்டி வழிபடுவதைக் கூறும் துறை.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் வெற்றியைத் தரும் சூலப் படையினை உடையவளும், கருணையினின்றும் அகலாதவளும், ஞானப் பாவையுமான கொற்றவையின் அருள் சிறப்பை வியந்து உரைப்பது என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
ஒளியின் நீங்கா விறல் படையோள்
அளியின் நீங்கா அருள் உரைத்தன்று (கொளு 1.23
வெண்பா
ஆளி மணிக்கொடிப் பைங்கிளிப் பாய்கலைக்
கூளிமலிப் படைக் கொற்றவை - மீளி
அரண் முருங்க ஆ கோள் கருதின் அடையார்
முரண் முருங்கத் தான் முந்துறும் (20)
பொருள்: சிங்கவுருவம் கொண்டு சிறப்புற்ற அழகிய கொடியினையும், பகங்கிளியினையும், பாய்கின்ற கலைமானாகிய ஊர்தியினையும், பேய்களால் மிகுந்துள்ள படைகளையும் கொண்ட கொற்றவை நம் தலைவன் பகைவரது அரண் அழியுமாறு சென்று ஆநிரைகளைக் கவர எண்ணினால் அப்பகைவரின் மாறுபாடுகெடும்படியாக, அவனுக்கு முற்படத், தான் அவ்விடத்தே எழுந்தருளி அருள் புரிவாள்.
உசாத்துணை
நொச்சித் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Mar-2025, 18:22:12 IST