கே.வி. கிருஷ்ணன் சிவன்
- கிருஷ்ண என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கிருஷ்ண (பெயர் பட்டியல்)
- சிவன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சிவன் (பெயர் பட்டியல்)
To read the article in English: K. V. Krishnan Sivan.
கே.வி. கிருஷ்ணன் சிவன் (ஜனவரி 04, 1928 - ஜூலை 15, 2023) தமிழ் பேராசிரியர், மிருதங்க வித்வான். கிருஷ்ணன் சிவன் பனாரஸ் பல்கலைகழகத்தில் தமிழ் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். டைகர் வரதாச்சாரியார், மகராஜபுரம் சந்தானம் போன்ற கர்நாடக சங்கீத பாடகர்களுக்கு வடக்கே ஆஸ்தான மிருதங்க வித்வானாக இருந்தவர். ஆரம்ப நாட்களில் கல்லிடைக்குறிச்சி ராமு பாகவதரின் மாணவராக மிருதங்கம் கற்றுக் கொண்டார். பின்னால் தபலா சாம்ராட் அனோகேலால் மிஸ்ராஜி, வாரணாசி அவர்களின் மாணவராக பயின்றார்.
பிறப்பு, கல்வி
கிருஷ்ணன் சிவன் ஜனவரி 04, 1928 அன்று அவரது பூர்வீக வீடான காசியில் உள்ள சிவமடத்தில் பிறந்தார் (அனுமன் காட் அருகில்). பாரதியின் அப்பாவுடன் பிறந்த குப்பம்மாள் மகள் வழி மருமகன் இவர். சுப்ரமணிய பாரதி 1898 முதல் 1903 வரை காசியில் வாழ்ந்த அத்தை குப்பம்மாளும், அவர் கணவர் கிருஷ்ணசிவனும் அழைக்கவே காசிக்கு வந்து தங்கியிருந்தார். காசியில் கல்விகற்றார். குப்பம்மாளின் மகளின் மகன் கிருஷ்ணன் சிவன். பாரதி வாழ்ந்த குப்பம்மாளின் வீடு பின்னர் சிவமடம் என பெயர்மாற்றம் அடைந்தது.
கிருஷ்ணன் சிவன் பள்ளி, கல்லூரியை வாரணாசியில் முடித்தார்.பனாரஸ் பல்கலைக்கழகத்தில் தமிழ் பயின்றார். தமிழில் முனைவர் பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
கிருஷ்ணன் சிவன் இளமையிலேயே பாரதியின் மீது பற்றுக் கொண்டிருந்தார். இவரது தாய் பாரதியாரின் பாடல்களை பாடக் கேட்டே வளர்ந்ததால் பள்ளி நாட்களில் தமிழ் பயிலாவிடினும் பாரதி பாடல்கள் மீது தனிப்பற்று இருந்தது. இசை செவியில் விழும் சூழலில் வளர்ந்ததால் மிக இளமையிலேயே இவரது நாட்டம் மிருதங்கம் நோக்கி சென்றது. பனாரஸ் பல்கலையில் தமிழ்த் துறை பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார். ஓய்விற்கு பிறகு காசி தமிழ் சங்கத்தின் தலைவராக பொறுப்பில் இருக்கிறார். இவருக்கு இரண்டு மகள்கள். இவரது இளைய மகளான ஜெயந்தி பாரதியாரின் கவிதையில் முனைவர் பட்ட ஆய்வு செய்துள்ளார்.
இலக்கியப் பணி
இவர் பாரதியின் வாழ்க்கைக் குறிப்பு பற்றி புத்தகத்தை தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் எழுதி வெளியிட்டார். "காசி நிவாஸ் சம்பந்தி கவி பாரதி கா ஏக் பரிச்சா" என்னும் உத்தரப்பிரதேச ஹிந்தி சம்ஸ்தனின் ஹிந்தி நூலில் இவரது பங்கு அதிகம். பாரதிக்காக பனாரஸ் பல்கலைகழகத்தில் தனி இடம் நிறுவியதிலும் பாரதியின் பல கவிதைகளை ஹிந்திக்கு கொண்டு சென்றதிலும் இவருக்கு பெரும் பங்கு உண்டு. காசியில் இவர் இருக்கும் அனுமன் காட்டிற்கு அருகே பாரதியார் தமிழ் சங்கம் நிறுவினார்.
மறைவு
கே.வி. கிருஷ்ணன் சிவன் ஜூலை 15, 2023 அன்று தன் 95-வது வயதில் காசியிலுள்ள பூர்வீக வீட்டில் இயற்கை எய்தினார்.
நூல்கள்
- மகாகவி பாரதியார் வாழ்க்கைக் குறிப்பு - தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் எழுதினார்.
- காசி நிவாஸ் சம்பந்தி கவி பாரதி கா ஏக் பரிச்சா - ஹிந்தி நூலில் பங்களிப்பு.
விருதுகள்
- தமிழ் சுடர் விருது - பிரசிடென்சி கல்லூரி, சென்னை
- தமிழ் மாமணி - தமிழ் சுரங்கம், சென்னை
- தமிழ் திரு - 2001 - வாரனாசியில் நடந்த அகில இந்திய சென்னை தமிழ்நாடு மாநாட்டில் வழங்கப்பட்டது
- தமிழக அரசின் பாரதியார் விருது (1992)
உசாத்துணை
- மகாகவி பாரதியார் வாழ்க்கைக் குறிப்பு - கே.வி. கிருஷ்ணன் சிவன்
- மகாகவி உலாவிய கங்கை கரை வீட்டில்...| Dinamalar
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:32:51 IST