under review

கே.டி. பால்

From Tamil Wiki
கே.டி. பால்
கே.டி. பால்

கே.டி. பால் (கனகராயன் திருச்செல்வம் பால்) (மார்ச் 24, 1876 - ஏப்ரல் 11, 1931). இதழாளர், கட்டுரையாளர். சுதந்திரப் போராட்ட வீரர். காந்தி ஆதரவாளர். இந்திய சுதேச மிஷனரி சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவர். இளைஞர் கிறிஸ்தவ சங்கத்தின் (YMCA) முதல் இந்திய தேசிய பொதுச் செயலாளர். கிறிஸ்தவ மத்திய கூட்டுறவு வங்கி நிறுவனர். காந்தி-இர்வின் ஒப்பந்தம் ஏற்படக் காரணமானார். முதலாம் வட்ட மேசை மாநாட்டில் இந்தியக் கிறிஸ்தவர்களின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் உயரிய விருதான Order of the British Empire-OBF விருது பெற்றார்.

பிறப்பு, கல்வி

கனகராயன் திருச்செல்வம் பால் என்னும் கே.டி. பால், மார்ச் 24, 1876 அன்று, சேலத்தில், டேவிட் பால் பிள்ளைக்கு மகனாகப் பிறந்தார். தந்தை டேவிட் பால் பிள்ளை சேலத்தில் உதவி கலெக்டராகப் பணியாற்றினார். கே.டி. பால், சேலம் லண்டன் மிஷன் உயர்நிலைப்பள்ளியில் உயர்நிலைக் கல்வி கற்றார். சேலம் நகரசபைக் கல்லூரியில் இண்டர்மீடியட் படித்தார். சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். சைதாப்பேட்டையில் உள்ள ஆசிரியர் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

கே.டி. பால், அரசுச் செயலகத்தில் பணிபுரிந்தார். 1899-ல் கனகம்மாளை மணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின் அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டு, கோயம்புத்தூர் லண்டன் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் புங்கனூர் ஆற்காடு மிஷன் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்தார். சென்னை கிறித்தவக் கல்லூரியில் வரலாற்றுத் துறை ஆசிரியராகப் பணியாற்றினார்.

கே.டி. பால் (படம் நன்றி: கிறிஸ்தவ வரலாற்றுச் சுவடுகள் இதழ், நவம்பர் 2020)

மதப்பணிகள்

கே.டி. பால், தேசியவாதச் சிந்தனை கொண்ட கிறிஸ்தவர். பிரிட்டிஷ் மற்றும் இந்திய மிஷனரிகளை உள்ளடக்கிய தேசிய மிஷனரி கவுன்சில் (NMC) அமைப்பில் முக்கியப் பொறுப்பு வகித்தார். கிறிஸ்தவர்களுக்கிடையே இருக்கும் பிரிவினைகளையும், சபை வேறுபாடுகளையும் களைய முயற்சி மேற்கொண்டார். மேற்கத்திய வகையான தேவாலய அமைப்பை எதிர்த்தார். மேற்கத்திய மதவாதத்தின் பிடியில் இருந்து தேவாலயங்கள் மற்றும் கிறிஸ்தவத் திருச்சபைகள் விடுபட வேண்டுமென்று விரும்பினார். மேற்கத்திய வழிமுறைகளுக்கு மாற்றாக இந்திய கிறிஸ்தவ இறையியல் வழிபாட்டை வலியுறுத்தினார். இந்திய திருச்சபையின் கட்டமைப்பை உள்நாட்டுமயமாக்க பரிந்துரைத்தார். தேசிய மிஷனரி கவுன்சிலை இந்திய தேசிய கிறிஸ்தவ கவுன்சிலாக மாற்றுவதற்கு உழைத்து, இந்திய தேசிய கிறிஸ்தவ கவுன்சிலின் முதல் தலைவரானார். இந்தியா முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ மதக் குழுவினருடன், சபைகளுடன் தொடர்பில் இருந்தார். ‘தென்னிந்திய ஐக்கிய திருச்சபை’ அமைப்பு உருவாக, பேராயர் வேதநாயகம் சாமுவேல் அசரியாவுடன் இணைந்து உழைத்தார்.

கே.டி. பால் எழுதிய அரசியல் கட்டுரை

சமூகப் பணிகள்

கே.டி. பால், சேலம் நகரசபை உறுப்பினராகப் பணியாற்றினார். சேலம் நாட்டாண்மை கழக உறுப்பினராகப் பணிபுரிந்தார். மேற்கல்விக்காக இங்கிலாந்து செல்லும் இந்திய மாணவர்களுக்கு உதவும் வகையில், ஐக்கிய மாணவர்கள் சங்கத்தை (Union of Christian Students of India) ஏற்படுத்தினார். ஷேக்ஸ்பியர் குடில் (Shakespeare Hut) என்ற பெயரில், இந்திய ஒய்.எம்.சி.ஏ. மாணவர் விடுதியை இங்கிலாந்தில் உருவாக்கி, இந்திய மாணவர்கள் தங்கிப் படிக்க உதவினார்.

கே.டி. பால், கிராம மக்கள் மேம்பாட்டிற்காக உழைத்தார். பல நலத்திட்ட உதவிகளை முன்னெடுத்தார். கிராமப்புற இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக கிராமப்புற ஒய்.எம்.சி.ஏ மையங்களை நிறுவினார். ஒய்.எம்.சி.ஏ. மற்றும் தேவாலயங்களின் மூலம் கிராமக் கல்வித் திட்டம் மற்றும் கிராமப்புற மறுசீரமைப்பு திட்டத்தை உருவாக்கிச் செயல்படுத்தினார். 1916-ல், மெட்ராஸ் கிறிஸ்டியன் கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட் என்னும் கிறிஸ்தவ மத்திய கூட்டுறவு வங்கியை நிறுவினார். அதன் மூலம் கிறிஸ்தவர்கள் மற்றும் ஏழை கிராம மக்கள் கடன் பெற்று உயர வழி வகுத்தார்.

கே.டி. பால் எழுதிய நூல்

அரசியல்

இராஜகோபாலாச்சாரியார், பி.வி. நரசிம்ம சுவாமி, குருராஜா ராவ் போன்றோர் கே.டி. பாலின் நண்பர்களாக இருந்தனர். அவர்கள் மூலம் கே.டி. பால் இந்திய அரசியலில் ஆர்வம் கொண்டார். காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். இந்தியாவின் கடந்த கால வளமான பரம்பரையில் இருந்து கிறிஸ்தவ சமூகம் அந்நியப்படுவது குறித்து மனம் வருந்தினார். இந்திய கிறிஸ்தவர்கள் தேசிய இயக்கத்தில் இணைந்து இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று இந்தியக் கிறிஸ்தவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் சிக்கல்களைச் சரி செய்ய உதவினார். வைஸ்ராய் இர்வினைப் பலமுறை சந்தித்து காந்திக்கும் இர்வினுக்குமிடையே சமரசம் நிகழவும், காந்தி-இர்வின் ஒப்பந்தம் ஏற்படவும் காரணமானார். காந்தியின் நன் மதிப்பைப் பெற்றார்.

கே.டி. பால், அரசியல் தொடர்பான நிகழ்வுகளில் சுதந்திரமாகச் செயலாற்றும் பொருட்டு, தேசிய மிஷனரி சொசைட்டி மற்றும் ஒய்.எம்.சி.ஏ. பணிகளின் பொறுப்புக்களிலிருந்து விலகினார். லண்டனில் நிகழ்ந்த முதலாம் வட்டமேசை மாநாட்டில், இந்தியக் கிறிஸ்தவர்களின் பிரதிநிதியாகப் பங்கேற்றார். மாநாட்டுக் கருத்தரங்கில் பி.ஆர். அம்பேத்கர், இரட்டமலை சீனிவாசன் ஆகியோருடன் கே.டி. பாலும் உரையாற்றினார். நாட்டு விடுதலைக்காகவும், மொழி, இன, சாதி, சமய ஒடுக்குதலிலிருந்து விடுதலைக்காகவும், சிறுபான்மையினரின் பாதுகாப்புக்காகவும் பல கருத்துக்களை, திட்டங்களை முன் வைத்தார்.

இதழியல்

கே.டி. பால், இளைஞர்களிடையே அரசியல், சமூக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காக ‘யங் மேன் ஆஃப் இந்தியா’ (Young Man of India) என்ற பெயரில் இதழ் ஒன்றை ஆரம்பித்து நடத்தினார். அதில் ‘வாட்ச்மேன்’ (Watchman) என்ற புனை பெயரில் கருத்தாழமிக்க பல கட்டுரைகளை எழுதினார். சுதந்திரப் போராட்ட உணர்வைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார்.

கே.டி. பால் நினைவுச் சாலை, சேலம் (படம் நன்றி: இதுவும் சேலத்தின் சிறப்புதாங்க - Salem முக நூல் குழுமம்)

பொறுப்புகள்

  • ஒருங்கிணைந்த இந்திய துணைக் கண்டத்தின் இளைஞர் கிறிஸ்தவ சங்க (YMCA) அமைப்பின் முதல் இந்திய தேசியப் பொதுச் செயலாளர்
  • வேதநாயகம் சாமுவேல் அசரியாவுடன் இணைந்து, சேரம்பூரில் இந்திய தேசிய மிஷனரி சங்கத்தை நிறுவி, அதன் கௌரவப் பொருளாளராகச் செயல்பட்டார். பின் பொதுச் செயலாளர் ஆகப் பணிபுரிந்தார்.
  • இந்திய சுதேச மிஷனரி சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவர்.
  • இந்திய தேசிய கிறிஸ்தவ கவுன்சில் தலைவர்.
  • கிறிஸ்தவ மத்திய கூட்டுறவு வங்கி நிறுவனர்.
  • பெங்களூரு ஐக்கிய இறையியல் கல்லூரியின் ஆட்சி மன்றத் தலைவர்.
  • கிராம மறுசீரமைப்பு திட்டத்தை உருவாக்கிச் செயல்படுத்தினார்.

மறைவு

கே.டி. பால், திடீர் உடல்நலக் குறைவால், ஏப்ரல் 11, 1931 அன்று, தனது 55- ஆம் வயதில் காலமானார்.

கே.டி. பால் நினைவிடம் (படம் நன்றி: இதுவும் சேலத்தின் சிறப்புதாங்க - Salem - முக நூல் குழுமம்)

நினைவு

  • கே.டி. பாலின் நினைவிடம் சேலம், நான்குரோடு, பெரமனூர் கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் அமைந்துள்ளது.
  • கே.டி. பால் நினைவாக, சேலம் மாநகராட்சி அலுவலகங்களின் பின்புறம் உள்ள சாலைக்கு கே.டி.பால் பெயர் சூட்டப்பட்டது.
  • சேலம் சத்திரம் அருகே உள்ள சந்தைக்கு பால் மார்க்கெட் என்று பெயர் சூட்டப்பட்டது.
  • சேலம் கோட்டை சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் விடுதிக்கு கே.டி. பால் இல்லம் என்று பெயரிடப்பட்டது.
  • சேலம், YMCA வளாகத்தில் கே.டி.பால் பெயரில் ஓர் அரங்கம் அமைந்துள்ளது.

வரலாற்று இடம்

கே.டி. பால், பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் நல்ல தொடர்பில் இருந்தார். இந்திய விடுதலைக்கான முயற்சிகளை ஆதரித்தார். காந்தியத்தின் மீது நம்பிக்கை கொண்டு காந்தி ஆதரவாளராகச் செயல்பட்டார். அக்காலத்துக் கிறிஸ்தவர்கள் பலர் இந்திய தேச விடுதலையில் ஆர்வம் காட்டாதிருந்த நிலையில், அதனை மாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். இதழ்களில் அதுகுறித்து எழுதி கவனம் ஈர்த்தார். ஒய்.எம்.சி.ஏ. அமைப்பை கிராமப்புறங்களுக்கு விரிவுபடுத்தி நலப்பணிகளை மேற்கொண்டார். கே.டி. பால், இந்திய தேசிய இயக்கத்தின் முதல் கிறிஸ்தவ அரசியல்வாதியாக அறியப்படுகிறார்.

நூல்கள்

  • British Connection wih India

உசாத்துணை


✅Finalised Page