கே.சி.நாராயணன்
கே.சி.நாராயணன் (பிறப்பு: பெப்ருவரி 21, 1952) மலையாள இதழாளர், இலக்கிய விமர்சகர், இலக்கிய ஆய்வாளர். மாத்ருபூமி, பாஷாபோஷிணி இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றிய காலகட்டத்தில் நவீன மலையாள இலக்கியத்திற்குப் பெரும்பங்களிப்பாற்றியவர்.
பிறப்பு , கல்வி
கே.சி.நாராயணன் பெப்ருவரி 21, 1952-ல் பாலக்காடு மாவட்டம் ஸ்ரீகிருஷ்ணபுரத்தில் கிழியேடத்து மனை என்னும் நம்பூதிரி இல்லத்தில் பிறந்தார். முழுப்பெயர் கிழியேடத்து மனையில் செறிய நாராயணன் நம்பூதிரி. ஸ்ரீகிருஷ்ணபுரத்தில் பள்ளிக் கல்வியும், மன்னார்காடு எம்.இ.எஸ் கல்லூரியில் புகுமுக வகுப்பும், பாலக்காடு விக்டோரியா கல்லூரியில் இளங்கலை அறிவியலும் ,பயின்றார். கோழிக்கோடு பல்கலையில் பட்டாம்பி கல்லூரியில் ஆற்றூர் ரவிவர்மாவின் மாணவராக மலையாளம் முதுகலை பயின்றார். கேரள பண்பாட்டில் தாளக்கருவிகள் என்னும் தலைப்பில் முனைவர் பட்டப்படிப்பை தொடங்கினாலும் முடிக்கவில்லை.
தனிவாழ்க்கை
கே.சி.நாராயணனின் மனைவி பெயர் ஷீலா. இரு மகள்கள். ஆசிரியராக பணியாற்றிய ஷீலா 2017-ல் மறைந்துவிட்டார். இரு மகள்கள் பிரியதா, பிரேஷிதா. 2013-ல் ஓய்வுபெற்றபின் மனோரமா குழுமங்களின் ஆலோசகராக 2019 வரை பணியாற்றினார்
இதழியல்
கே.சி.நாராயணன் முதுகலைப் படிப்பு முடித்து சிலகாலம் தனிப்பயிற்சிக் கல்லூரிகளில் ஆசிரியராக பணியாற்றினார். டெல்லியில் உயராய்வுக்கு சென்றார். 1975-ல் மாத்ருபூமி இதழில் துணையாசிரியராக சேர்ந்தார். 1979-ல் கல்லூரி ஆசிரியர்களுக்கான அரசுத்தேர்வில் முதலிடம் பெற்றாலும் அப்பணியை தவிர்த்து மாத்ருபூமியிலேயே நீடித்தார்.
மாத்ருபூமி கல்கத்தா, மாத்ருபூமி சென்னை பிரிவுகளின் தலைவராக பணியாற்றினார். மாத்ருபூமி இணைப்பிதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றிய கே.சி.நாராயணன் 1998 முதல் மலையாள மனோரமா குழுமத்தின் இதழ்களின் பொது ஆசிரியராகப் பணியாற்றினார். மலையாள இலக்கிய இதழான பாஷாபோஷிணி அதில் ஓர் இதழ். இதழாசிரியராகப் பணியாற்றிய காலகட்டங்களில் முதன்மைப் படைப்பாளிகளை தேடி எழுதச்செய்வது, இளம்படைப்பாளிகளைக் கண்டடைவது என கே.சி.நாராயணன் பெரும்பங்களிப்பாற்றியிருக்கிறார்.
இதழாளராக கே.சி.நாராயணனின் முதன்மைநூல் ஒரிசாவின் பலியபால் என்னும் ஊரில் நிகழ்ந்த போராட்டத்தையும் அதன் வீழ்ச்சியையும் பற்றிய ‘பலியபாலின் பாடங்கள்’. இந்நூல் தமிழில் ஜெயமோகன் மொழியாக்கத்தில் நிகழ் வெளியீடாக வந்தது.
கே.சி.நாராயணன் எம்.கோவிந்தன், எம்.டி.வாசுதேவன் நாயர் ,ஆற்றூர் ரவிவர்மா ஆகியோரை முன்னோடிகளாகவும் வழிகாட்டிகளாகவும் கொண்டவர்.
இலக்கிய வாழ்க்கை
கே.சி.நாராயணன் இலக்கியவிமர்சனம், கதகளி ஆய்வு, புராண மறுஆய்வு என்னும் களங்களில் நூல்களை எழுதியுள்ளார். கதகளியைப் பற்றிய 'மலையாளிகளுடே ராத்ரிகள்', இலக்கிய விமர்சன நூலான 'மாதவிக்குட்டியும் மகாத்மாகாந்தியும்' ஆகியவை குறிப்பிடத்தக்கவை. 'மகாபாரதம் ஒரு ஸ்வதந்த்ர சாஃப்ட்வேர்' என்னும் நூல் மகாபாரதத்தை மறு ஆய்வுசெய்வது. கே.சி.நாராயணன் பத்தாண்டுகள் ஏசியாநெட் தொலைக்காட்சியில் புகழ்பெற்ற நூலறிமுக நிகழ்ச்சியை நடத்தினார்.
விருதுகள்
- கேரளசாகித்ய அகாதெமி விருது (2003)
- இதழாளருக்கான ஹாரி பிரிட்டன் நினைவு காமன்வெல்த் விருது
- இதழாளருக்கான லீலாமேனன் விருது (2022)
- கே.பாலகிருஷ்ணன் நம்பியார் விருது (2023)
இலக்கிய இடம்
கே.சி.நாராயணன் முதன்மையாக இலக்கிய இதழாளராக மதிக்கப்படுகிறார். ஒட்டுமொத்தப் பண்பாட்டுப் பார்வையுடன் இலக்கியவிமர்சனம் செய்பவராகவும் மலையாளத்தில் கவனிக்கப்படுகிறார்
நூல்கள்
- பலியபாலின்றே பாடங்கள் 1982
- மலையாளிகளுடே ராத்ரிகள் 1987
- மகாபாரதம் ஒரு ஸ்வதந்த்ர சாஃப்ட்வேர் 2021
- மாதவிக்குட்டியும் மகாத்மாகாந்தியும் 2022
உசாத்துணை
- கே.சி.நாராயணன் பேட்டி- தேசாபிமானி இதழ்
- கே.சி.நாராயணன் மேளம் மரபு குறித்து
- ஶ்ரீகிருஷ்ணபுரத்தில் மூன்றுநாள்
- இரண்டு நாட்கள்
- இனியவை திரும்பல்
- கே.சி.நாராயணனின் உலகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
03-Jun-2023, 18:19:42 IST