கே.என்.சிவராமன்
- சிவராமன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சிவராமன் (பெயர் பட்டியல்)
To read the article in English: K.N. Sivaraman.
கே.என்.சிவராமன் (ஜூன் 4, 1971) இதழாளரும் எழுத்தாளருமாக செயல்பட்டுவருபவர். இந்தியத் தொன்மங்களை மறுஆக்கம் செய்து பொழுதுபோக்கு நாவல்களை எழுதுகிறார்.
பிறப்பு, கல்வி
கே.என்.சிவராமன் சென்னை ராயப்பேட்டையில் ஜூன் 4, 1971 அன்று கே.நாகராஜன், என்.ஆனந்தி ஆகியோருக்கு பிறந்தார். இளமைப்பருவமும் கல்வியும் வேலூரில். நான்காம் வகுப்பு வரை டவுன்ஷிப் இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல், காந்திநகர்.ஐந்தாம் வகுப்பு பஞ்சாயத்து யூனியன், காந்திநகர். ஆறாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தொன்போஸ்கோ மேல்நிலைப்பள்ளி, காந்திநகர். மேல்நிலை வகுப்புகள் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, வேலூர். சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் டிப்ளமா இன் டூல்ஸ் பொறியியல்.
தனிவாழ்க்கை
மணமுறிவு பெற்றவர். இதழாளராகப் பணியாற்றுகிறார். இப்போது குங்குமம் வெளியீட்டு நிறுவன இதழ்களின் பொறுப்பாசிரியர்.
இலக்கியவாழ்க்கை
'கண்ணாடி’ என்னும் சிறுகதை. திருவண்ணாமலை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் ஒன்றிணைந்த வடாற்காடு மாவட்ட படைப்பாளிகளின் படைப்புகளை ஒருதொகுப்பாக வெளியிட்டபோது அதில் பிரசுரமானது. 1988-ல் எழுதிய அந்தக்கதை 1989-ல் பிரசுரமானது.
இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள் புதுமைப்பித்தன், கு.பா.ரா., வண்ணநிலவன், வண்ணதாசன், ஜெயமோகன், மெளனி, கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி மற்றும் சாண்டில்யன் என்று குறிப்பிடுகிறார். கே.என்.சிவராமன் குங்குமம் இதழில் கர்ணனின் கவசம்,சகுனியின் தாயம், விஜயனின் வில் ஆகிய நாவல்களை எழுதினார்.
தமிழ் சினிமாவில் அதிகம் அறியப்படாத ஆளுமைகள் குறித்த கட்டுரைத் தொகுப்பு தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் என்ற பெயரில் நூலாகியது. உயிர்ப்பாதை சயாம் பர்மா ரயில் பாதை அமைக்க உயிரிழந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் குறித்த ஆவணம். சிவந்த மண் ரஷ்யப்புரட்சி பற்றியது. தினகரன் வசந்தம் இணைப்பிதழில் மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வெளிவந்த தொடரான ஜமீன்களின் கதை இவருடைய இதழியல் எழுத்தில் முக்கியமானது.
இலக்கிய இடம்
டான் பிரவுனின் டாவின்ஸி கோட் நாவலின் பாணியில் இந்தியாவின் தொன்மங்களை நிகழ்கால குற்றவுலகுடன் இணைத்து பொதுவாசிப்புக்குரிய பரபரப்புநாவல்களை எழுதியவர் கே.என்.சிவராமன்.
நூல்பட்டியல்
நாவல்கள்
- கர்ணனின் கவசம்
- சகுனியின் தாயம்
- விஜயனின் வில்
- ரத்த மகுடம்
கட்டுரைகள்
- தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்
- உயிர்ப்பாதை
- சிவந்த மண்
- மாஃபியா ராணிகள்
- ஜமீன்களின் கதை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:32:49 IST