under review

கெலாபிட்

From Tamil Wiki
கெலாபிட் பழங்குடி மக்கள்
கெலாபிட் மக்களின் நீண்டவீடுகள்
கெலாபிட் மக்கள்
சேப்
நுபுக் லாயக்
லோங் பங்காவில் இருக்கும் செதுக்கப்பட்ட கற்றூண்
லோங் செபுவாவில் இருக்கும் கற்றூண்

சரவாக் மாநிலப் பழங்குடி இன மக்களில் கெலாபிட் இனத்தவரும் அடங்குவர். ஏறக்குறைய 3000 மக்கள்தொகையுடன் கெலாபிட் பழங்குடியினர் சரவாக் மலைப்பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பரியோ எனும் பகுதியின் மலையக மக்களாக அடையாளப் படுத்தப்படுகின்றனர்.

இனப்பரப்பு

பரியோ எனும் பகுதியில் உள்ள 18 கிராமங்களில் பல தலைமுறைகளாக கெலாபிட் மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். கெலாபிட் மற்றும் லுன் பவாங் பழங்குடியினருக்கு இடையில் நெருங்கிய தொடர்பிருக்கிறது கெலாபிட் இன மக்கள் மத்திய போர்னியோவின் மலைப்பகுதிகளில் நீண்ட வீடுகளில் வசித்து வந்தனர். இருப்பினும், பொருளாதார மற்றும் சமூக காரணிகளால், 1980-களில் இருந்து பலர் நகர்ப்புறங்களில் வசிக்க இடம்பெயர்ந்துள்ளனர். ஏறக்குறைய 1,200 கெலாபிட்கள் மட்டுமே இன்னும் மலைப்பகுதிகளில் வாழ்கின்றனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சமயம்

கெலாபிட் மக்கள் ஆன்மவாதம் சார்ந்த நம்பிக்கையுடையர்களாக இருக்கின்றனர். கெலாபிட் மக்கள் தங்கள் மூதாதையர்களின் நினைவாகப் பெருங்கற்கால நினைவுச்சின்னங்களை அமைப்பர். கெலாபிட் மலைகளில் கண்டுபிடிக்கப்பட்ட பெருங்கற்கால நினைவுத்தூண்கள் 2000 ஆண்டுகள் பழைமைவாய்ந்தவை என மதிப்பிடப்பட்டிருக்கிறது. கிருஸ்துவச் சமயத்தின் வருகைக்குப் பின் கெலாபிட் மக்கள் பலரும் தங்கள் பூர்வநம்பிக்கைகளை கைவிட்டுக் கிருஸ்துவச் சமயத்தைத் தழுவினர். 1930 தொடங்கி 1940-கள் வரையில் போர்னியோ எவங்கலிக்கல் மிஸனால் பரப்பப்பட்ட கிருஸ்துவ சமய போதனைகளை ஏற்று முழுமையாகத் தம் பூர்வநம்பிக்கைகளைக் கைவிட்ட இனத்தவர்களாக கெலாபிட் மற்றும் லூன் பவாங் இனத்தவர் கருதப்படுகின்றனர்.

மொழி

கெலாபிட் மக்கள் கெலாபிட் மொழியைச் பேசுகிறார்கள். கெலாபிட் மொழி மேற்கு ஆஸ்திரோனேசியன் மொழிக்குடும்பத்தைச் சார்ந்ததாக வகைப்படுத்தப்படுகிறது. சரவாக் மற்றும் இந்தோனேசியாவின் கலிமாந்தான் எல்லைப்பகுதியைச் சேர்ந்த வெகு சில மக்களே இம்மொழியைப் பேசுகின்றனர். கெலாபிட் மொழியைப் பரவலாக்கும் நோக்கில் கெலாபிட் மொழிக்கான அகராதி தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

வாழ்க்கை முறை

கெலாபிட் மக்கள் நெல் விவசாயம் செய்கிறார்கள். அது மட்டுமின்றி, மலைப்பிரதேசங்கள் மற்றும் குளிர்ந்த காலநிலைக்கு ஏற்ற பல்வேறு பயிர்களையும் பயிரிடுவர். கெலாபிட் மக்கள் மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு, அன்னாசி, பூசணி, வெள்ளரி, அவரை, காப்பி, தேசிப்புல், சாமை, கொடித்தோடை பழம் மற்றும் செம்புற்றுப்பழம் போன்றவற்றைகளையும் பயிரிடுகின்றனர்.

பண்பாடு

கெலாபிட் பழங்குடி மக்களிடத்தில் நீண்ட வித்தியாசமான பெயர்களைச் வைத்துக் கொள்ளும் வழக்கம் உள்ளது. கெலாபிட் மக்கள் தங்களுக்கு வழங்கப்படும் பெயர் மற்றும் தங்கள் தந்தையின் பெயர் இரண்டையும் சேர்த்து ஒரு பெயராக ஏற்றுக் கொள்வார்கள். கெலாபிட் ஆண்களுக்குப் பொதுவாக லியான் (Lian), அகன் (Agan), கியாக் (Giak) மற்றும் அபுய் (Apui) ஆகிய பெயர்களை வழங்குவது வழக்கம். அது போல், பெண்களுக்கு அதிகமாக சுபாங் (Supang), சிகாங் (Sigang), ரினாய் (Rinai), தயாங் (Dayang) மற்றும் ருரன் (Ruran) போன்ற பெயர்களைச் சூட்டுவது உண்டு.

உணவு முறை

கெலாபிட் மக்கள் அரிசி உணவையே மிகுதியாக உட்கொள்கின்றனர்.அவர்கள் அரிசி, இறைச்சி, பழங்கள், காய்கறிகள், சோளம் மற்றும் கரும்பு ஆகிய உணவுகளை விரும்பி உண்கிறார்கள். நுபக் லாயக் (இசிப் இலையில் மசித்த அரிசி), மனுக் பன்சுஹ் (பதப்படுத்தப்பட்டு மூங்கிலில் சமைக்கப்பட்ட கோழி), உடுங் உபிஹ் (தேசிப் புல் சேர்த்து வறுக்கப்பட்ட மரவள்ளிக்கிழங்கு), அ’பெங் (எலும்பு நீக்கப்பட்ட மீன்), பௌஹ் அப்ப (கத்திரி மற்றும் வெள்ளரி கொண்டு சமைக்கப்படும் மீன்) மற்றும் லபோ செனுடக் (காந்தன் பூ கொண்டு சமைக்கப்பட்ட மாட்டிறைச்சி) ஆகியவை கெலாபிட் பழங்குடியின் சில பாரம்பரிய உணவு வகைகள் ஆகும்.

கலைகள் / கருவிகள்

கெலாபிட் மக்கள் தங்களின் பாரம்பரிய நடனம் மற்றும் இசைக்கு மிகவும் முக்கியத்துவம் வழங்குபவர்கள். 'சேப்' (sape) எனப்படும் வீணை போன்ற கருவியை இவர்களே சுயமாக உருவாக்குகின்றனர். நீளமான மரத்தின் தண்டை கொண்டு வெவ்வக வடிவில் செதுக்குவதன் மூலம் இந்த இசைக்கருவி உருவாக்கப்படுகின்றது. சேப் மற்றும் பகங் கருவியின் இசைக்கு கெலாபிட் மக்கள் இருவாட்சி மற்றும் போர் நடனங்களை ஆடுவார்கள் எனச் சொல்லப்படுகிறது. இருவாட்சி பறவையின் அசைவுகளைப் பின்பற்றி ஆடுவதே இருவாட்சி நடனமாகும். இருவாட்சி பறவை கருணையுள்ளம் கொண்டவை என்பதால் கெலாபிட் மக்கள் அப்பறவையை வணங்கி அதற்கு சிறப்பு செய்யும் வகையில் அப்பறவைகள் போல் நடனம் ஆடுவது வழக்கம்.

மட்பாண்டங்கள் செய்தல் மற்றும் மர வேலைப்பாடுகளை கொண்டு கைவினைப்பொருள்களை உருவாக்குவதில் கெலாபிட் மக்கள் திறமைவாய்ந்தவர்கள். அதனை தவிர, இவர்கள் ஊசி வேலைப்பாடுகளிலும் ஆர்வம் உள்ளவர்கள். முத்துக்களைக் கொண்டு அணிகலன், தலைக்கவசம் என சுமார் 69 பொருள்களை உருவாக்குகிறார்கள். முத்துகளைக் கொண்டு செய்யப்படும் கழுத்தணிகளை ஆண்கள் பெண்கள் என இருவராலும் அணியப்படுகின்றன, அதே சமயம் தலைக்கவசம் பெண்கள் மட்டுமே அணிவார்கள்.

இறப்புச்சடங்குகள்

கெலாபிட் இனத்தவரின் இறப்புச்சடங்குகள் முன்னோர்களின் அனுமதி வேண்டும் சடங்குடன் தொடங்குகிறது. கெலாபிட் இன மூதாதையர்களின் நினைவாக நடப்பட்டிருக்கும் பெருங்கற்காலத் தூண்களுக்கு முன்னால் விலங்கு பலியிடலும் அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் கள் படையலும் நடைபெறும். கவாங் என்றழைக்கப்படும் நினைவுக்கற்களின் முன் ஆட்டை அறுத்து பலி கொடுக்கப்படும். ஆட்டின் ரத்தத்தை நினைவுகற்களின் மீது தெளிப்பர். அதன் பின்னர், பூசகரிடம் பன்றி கொடுக்கப்படும். கெலாபிட் இன முது மூதாதையரான புயன், செலுயா ஆகிய இருவரையும் வருவிக்கும் சடங்குகள் நடைபெறும். இறந்து போன ஆளைப் புதைக்க அவர்களிருவரின் உதவி வேண்டப்படும். இறந்தவரின் குடும்பத்துக்கு எவ்வித தீங்கும் நேராமல் காத்தருள வேண்டப்படும். அந்த வேண்டுதலை நிறைவேற்ற எருமை மாடுகள், மான்கள், மாடுகள் ஆகியன பெருநாட்களின் போது பலிதரப்படும் என உறுதி கூறப்படும். புராக் எனப்படும் அரிசிக்கள்ளிலிருந்து சில துளிகள் மலைநோக்கித் தெளிக்கப்பட்டு, கொண்டுவரப்பட்ட பன்றியை அறுத்துப் பலி கொடுக்கப்படும். அதன் பின்னரே இறந்தவரைப் புதைத்துக் கல் நடும் சடங்குகள் நடைபெறும்.

உசாத்துணை


✅Finalised Page