குழையர் கூட்டம்
குழையர் கூட்டம் (குழையர் குலம், குழாயர் குலம்): கொங்கு வேளாளக் கவுண்டர் சாதியின் உட்பிரிவான அறுபது கூட்டங்களில் ஒன்று. குழையர் என்ற பெயர் காதிலணியும் குழை என்னும் ஆபரணத்தில் இருந்து வந்திருக்கலாம்
(பார்க்க கொங்குவேளாளர் கூட்டங்கள்)
வரலாறு
குழையரே குழாயர் எனப்பட்டனர் என கூறப்படுகிறது. வாய்மொழி வரலாற்றின்படி குழையர்களின் முதற்காணி கோயிலூர். இவர்கள் சேர மன்னர்களுக்குப் படை உதவி புரிந்தனர் என்று சொல்லப்படுகிறது. குழாயன் குடியுடன் ஐந்து குலங்களை ஒன்று என குறிப்பிடுகிறது கொற்றனூர் காணிப்பாடல்
காவல் குழாயன் கதித்த பெரியகுலன்
ஆவல்சேர் ஆந்தை அதிசேரன் - மேவியசீர்
செம்பூத்தன் செட்டியுடன் தென்கொற்றை மாநகர்க்கு
இன்புற்ற எழ்முதன்மை யே
ஞாயம் நிலைபெருக்கும் நற்கா வலன்குழையன்
நேயப் பெரியகுலன் நீள்ஆந்தை - ஆயன்
திருவளர் கொற்றைக்குச் சேரன்செம் பூதன்
பெருகுசெட்டி யும்காணிப் பேர்
குழையர்களின் கோவிலூர் குளித்தலை வட்டத்தைச் சார்ந்தது. குழையர் குலத்தினர் வேத மன்றாடி பட்டமும் பெற்றார்கள். பொங்கலூர் நாட்டின் புத்தரசன் கோட்டையை ஆட்சி புரிந்தனர். காப்புளி அம்மனையும், அங்கியம்மனையும் இவர்கள் வழிபட்டனர். கொங்கு பூந்துறை நாட்டில் விளக்கேத்தி என்ற இடத்தில் மாந்தரஞ்சேரல் செய்த போருக்கு குழையர் உதவி செய்தனர். சேரல் கொளாநல்லியை அளித்தான். இதில் குழவி அம்மனையும் மாரியம்மனையும் வைத்து வழிபட்டனர். கொளாநல்லியில் கோட்டை கட்டி கொடி, படை முரசோடு அரசு புரிந்தனர். காவலியரை வென்று தென்கரை நாட்டையும் கைப்பற்றினர். 'காவல் குழார் கதித்த குலர்’ என்று காணிப்பாடல் கூறுகிறது. வேணாடர் இவர்களை வென்றனர். அதன்பின் வடுகனூரிலும், பிற கொங்கு நாடெங்கும் இக்கூட்டத்தினர் சென்றனர் . வேள் அரசி குழையர் குழாயர் கொற்றனூர், புத்தரசன் கோட்டை, குள்ளம்பாளையம், கொளாநல்லி ஆகிய ஊர்களில் காணி கொண்டனர்.
தொன்மம்
சேர அரசனுக்கு வேடர், வேட்டுவர், துன்பம் செய்தபோது கோவிலூர் குழையர்குல குமாரத்தினமால் வேட்டுவர்களை வென்று இலவந்திக் கோட்டையைப் பிடித்தார் (வேளராசி எலவந்தி). அரசன் இந்த வெற்றி விழாவை நடத்தினான். ஒதாளன் பொன்னர், சாத்தந்தை, குழையர், செம்பர் ஆகிய ஐம்பெரும் வெளிர்களுக்கும் மன்றாடி பட்டம் கொடுத்தான். மன்றாடி என்பதற்குப் போரில் வெற்றி பெரும் வீர்ம்மிக்கவர்கள் என்று பொருள். மன்றத்தில் வாதாடி வெல்வோரையும் மன்றாடி என்பர். (பழைய மன்றாடி போலும் என்று பெரிய புராணம்)
குழாயர் ஊர்கள்
குழாயரின் ஊர்களை ஒரு காணிப்பாடல் இவ்வாறு சொல்கிறது
வளமிலகு நாகமலை சென்னிமலை கொல்லிமலை
வானிலகு ஆனைமலைசேர்
மாசிலா அலகுமலை பன்றிமலை பொன்னூதி
மலைசெம்பொன் மலைகுடகுடன்
தளமிலகு காஞ்சிமா நதிவானி நள்ளாறு
தாழ்வில்ஆன் பொருனைலவணம்
தாங்குநதி காவேரி ஆழியாறு உடன்பல
தருமதென் கரைநாடுகாண்
புளகண்ணை அவிநாசி வைகாவூர் நாடுகீழ்ப்
பூந்தறை மேல்பூந்தறை
புகழ்கோயி லூர் விளங்கில் கண்டியன் கோயில்நிழலி
பொற்பமரும் கலியாணியூர்
களபமுள ஆனையூர் குழாநிலை குயபள்ளி
கருமாபுரம் புத்தரசை
கவசைநிரை யூர் கொற்றை மேவிய குழாயரைக்
காத்திடும் பெரியம்மனே
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:38:23 IST