under review

குமரித்தோழன்

From Tamil Wiki
குமரித்தோழன்

குமரித்தோழன் (ஜான்; ஜான் குமரித் தோழன்) (பிறப்பு: ஜூன் 5, 1967) கவிஞர், எழுத்தாளர். இதழாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நடிகர், நாடக ஆசிரியர், நாடக இயக்குநர், பாடலாசிரியர். பொம்மலாட்ட ஆசிரியர் மற்றும் பயிற்சியாளர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். பொது வாசிப்புக்குரிய புதினங்களையும், சிறுகதைகளையும் எழுதினார். பல நாடகங்களை எழுதி மேடையேற்றினார்.

பிறப்பு, கல்வி

ஜான் என்னும் இயற்பெயர் உடைய குமரித்தோழன், ஜூன் 5, 1967 அன்று, குமரி மாவட்டத்தில் உள்ள மணவிளாகம் என்ற சிற்றூரில், யோவேல்-முத்தம்மாள் இணையருக்குப் பிறந்தார். மெதுகும்மலில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். நடுநிலை மற்றும் உயர்நிலைக் கல்வியை சூரியகோட்டில் உள்ள மார் எப்ரேம் மலங்கரை சிறியன் கத்தோலிக்க உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். மேல்நிலைக் கல்வியினை 1988–ல், தனித்தேர்வராக எழுதித் தேர்ச்சி பெற்றார். தேரூர் ஆசிரியர் பயிற்சி மையத்தில் பயின்று இடைநிலை ஆசிரியருக்கான பட்டயம் பெற்றார்.

குமரித்தோழன், தொலைநிலைக் கல்வி மூலம், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில், பி.ஏ. (வரலாறு), எம்.ஏ. (வரலாறு) பி.எட்., பி.ஏ. (தமிழ்), எம். ஏ. (தமிழ்) ஆகிய பட்டங்களைப் பெற்றார். பி.ஏ. (ஆங்கிலம்) மற்றும் எம்.எட். பட்டத்தினை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பெற்றார். ஆய்வியல் நிறைஞர்(எம். பில்.) பட்டத்தினை, தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பெற்றார்.

தனி வாழ்க்கை

குமரித்தோழன், பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். மனைவி: அமலோற்பவம். ஒரு மகன், ஒரு மகள்.

குமரித்தோழன்
தோல்வியில் கலங்கேல் - குமரித்தோழன் புத்தக வெளியீடு

இலக்கிய வாழ்க்கை

ஜான் குமரி மாவட்டத்தின் மீது கொண்ட பற்றினாலும், தமிழின் மீது கொண்ட ஆர்வத்தினாலும் ‘குமரித்தோழன்’ என்ற புனை பெயரைச் சூட்டிக் கொண்டார். பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளை, கட்டுரைகளை எழுதினார். குமரித்தோழனின் படைப்புகள் 'ஒளிவெள்ளம்', 'மார்த்தாண்டம் மாலை', 'எதிர் நீச்சல்', 'எழுமின்', 'தென்னொளி', 'முதற்சங்கு', 'சுடரொலி' போன்ற இதழ்களில் வெளியாகின. குமரித்தோழனின் படைப்புகளை ஆய்வு செய்து பல மாணவர்கள் இளம் முனைவர் மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றனர். மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டும் பேச்சாளராகவும் அறிவியல் பயிற்சியாளராகவும் செயல்பட்டு வருகிறார். குமரித்தோழன் 12 நூல்களை எழுதினார்.

நாடகம்

குமரித்தோழன், பள்ளியில் படிக்கும்போதே ஓரங்க நாடகங்களில் நடித்தார். ஜூன் 1982-ல், ‘குடும்பங்கள்’ என்ற முழுநீள நாடகத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பல நாடகங்களில் நடித்தார். குமரித்தோழன் எழுதிய முதல் நாடகம் வைரநெஞ்சம், 1994-ல் அரங்கேறியது. சில நாடகங்களுக்குக் கதை வசனம் எழுதினார். நாடகங்களை எழுதி இயக்கி நடித்தார்.சில நாடகங்கள் கேரளாவிலும் மேடையேறின. கிறிஸ்தவ மதம் சார்ந்தும் சில நாடகங்களை எழுதினார்.

இதழியல்

குமரித்தோழன் ஒளிவெள்ளம், சுடரொலி போன்ற இதழ்களின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார்.

அமைப்புச் செயல்பாடுகள்

குமரித்தோழன், மத்திய அரசின் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் மத்திய கலாச்சார வளம் மற்றும் பயிற்சி மையம்’ (CCRT புதுடில்லி) அமைப்பின் மாவட்டக் கருத்தாளராகப் (DRP) பணிபுரிந்தார். மேடைப் பேச்சு, பட்டிமன்றம், வழக்காடு மன்றம், வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம், மாணவர்களுக்குப் பயிற்சிகள் என்று பல களங்களில் செயல்பட்டார்.

பொறுப்புகள்

  • புனித வின்சென்ட் தே-பவுல் சபை உறுப்பினர்
  • தென்றல் தியேட்டர்ஸ் நிறுவனர்
  • சுடர் கலைக் குழும நிறுவனர்
  • கலைத்தமிழ் மன்ற நிறுவனர்
விருது

விருதுகள்

  • கலைவாணர் விருது
  • கலைச்சுடர் விருது
  • சிறந்த செயல்வழிக் கற்பித்தல் ஆசிரியர் விருது
  • செயல்வழிக் கற்பித்தல் சிறப்பாசிரியர் விருது
  • சிறந்த தொடக்கநிலை ஆசிரியர் விருது
  • கவிமணி விருது
  • இலக்கியத் திறனாளி விருது
  • இலக்கியச் செம்மல் விருது
  • இலக்கியச் சுடர் விருது

இலக்கிய இடம்

பொதுவாசிப்புக்குரிய பல படைப்புகளைத் தந்திருக்கும் குமரித்தோழன், அடிப்படையில் நாடகக் கலைஞர். சமூக நாடகங்கள் பலவற்றை அரங்கேற்றி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினார். கிறிஸ்தவ மதம் சார்ந்த நாடகங்களை மேடையேற்றினார். இரணியல் கலைத்தோழன் வரிசையில், குமரி மாவட்டத்தின் முக்கிய நாடக ஆசிரியர்களுள் ஒருவராக குமரித்தோழன் அறியப்படுகிறார். கிறிஸ்தவ இறையியல் சார்ந்த பல ஞானிகளின் வாழ்க்கையை ஆவணப்படுத்தியிருப்பது இவரது முக்கிய பணியாக மதிக்கப்படுகிறது.

குமரித்தோழன் புத்தகங்கள்

நூல்கள்

கவிதைத் தொகுப்பு
  • தணியாத தாகங்கள்
  • விடியல் தேடும் விதிகள்
சிறுகதைத் தொகுப்பு
  • இரண்டாம் பிறவி
குறுங்காவியம்
  • மிலனின் முத்து (புனிதர் பிரடரிக் ஓசானம் வாழ்க்கை வரலாறு)
புதினங்கள்
  • மறப்புலி புனித தாமஸ் மூர் (வரலாற்றுப் புதினம்)
கட்டுரை நூல்
  • பிள்ளைகளே உங்களுக்காக (பொது அறிவு)
தோல்வியில் கலங்கேல் (சுயமுன்னேற்றம்)
வாழ்க்கை வரலாறு
  • இறைவனின் உண்மை ஊழியன் (புனித தாமஸ் மூர்)
  • ஏழைகளின் தாய் (இறையடியார் அன்னை பேட்ரா)
  • அர்ப்பண மலர் (புனித அல்போன்சம்மா)
  • தூய ஜான் மரிய வியானி
  • சின்னராணி

நாடகங்கள்

  • வைர நெஞ்சம்
  • உதிரிப்பிறவி
  • பாஞ்சால சிறுத்தை
  • இறை மாட்சி
  • புனித தோமையார்
  • மூர்க்க வீரன்
  • இறை மைந்தன்
  • ஏன்?
  • மாமுனி அந்தோணி
  • மாவீரன் இப்தா
  • மறைத் தொண்டன்
  • மாயரூபம்
  • முத்துப்பல்லன்
  • மாளிகை தேடிய மயில்
  • பாலைவன முழக்கம்
  • யூதித்
  • அறிவிலியின் செல்வம்
  • ஓயாத அலைகள்
  • விருந்தாளிகள்
  • யார் இந்த ராஜா
  • விழிப்பாயிரு
  • வலப்புறம் வீசு
  • தோபித்
  • கூக்குரல்
  • எஸ்தர்
  • ஆகார்
  • முதற்கொலை
  • அயலான்
  • முடியப்பர் வாளின் வலிமை
  • இறைவன் இருக்கிறான்
  • மீட்பரைக் கண்டேன்
  • நெற்றிச்சுழி
  • வரலாற்று நட்பு
  • சோம்பேறியின் செல்வன்
  • திருவுளச்சீட்டு
  • பாறை
  • சுவரில்லா வீடு
  • திருப்புமுனை
  • மாய மந்திரவாதி
  • சக்தி
  • கள்ளிப்பூ
  • கல்வீசாதே
  • திரும்பு

உசாத்துணை


✅Finalised Page