under review

கீழ்சாத்தமங்கலம் சந்திரநாதர் கோயில்

From Tamil Wiki
கீழ்சாத்தாமங்கலம் கோயில் (நன்றி பத்மாராஜ்)

கீழ்சாத்தமங்கலம் சந்திரநாதர் கோயில் (பொ.யு. 8-ம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டலம்) வந்தவாசியில் அமைந்த சமணக் கோயில்.

இடம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசிக்கு தென்மேற்கில் நான்கு கிலோமீட்டர் தொலைவில் சேத்துப்பட்டு சாலைக்கும் திண்டிவனம் சாலைக்கும் நடுவே கீழ்சாத்தமங்கலம் கிராமம் உள்ளது. இங்குள்ள சந்திர நாதர் கோயில் பொ.யு. 8-ம் நூற்றாண்டிலிருந்து முக்கியத்துவம் வாய்ந்த சமணத்தலம்.

வரலாறு

பண்டைக் காலத்தில் சந்திரநாதர் கோயில் விமலஸ்ரீ ஆர்ய தீர்த்தப் பள்ளி என்னும் பெயர் பெற்றிருந்தது. இப்பள்ளி பல்லவ, சோழராட்சியின் போதும் புகழ் பெற்றிருந்தது. அவ்வூரில் பெருமாள் பாறை என்ற இடத்தில் உள்ள தமிழ் கல்வெட்டில் பொ.யு. 745-ல் பல்லவ (நந்தி வர்மர் ஆட்சிக்காலம்) மன்னரிடமிருந்து மான்யம் பெற்ற செய்தி உள்ளது. ஆகவே அதற்கு பல நூற்றாண்டிற்கு முன்னர் சமணர்கள் குடியேறி, பின்னர் ஜிநாலயம் ஒன்றை சந்திரநாதருக்காக கட்டியுள்ளனர் என்பது தெரிகிறது. மேலும் பொ.யு. 846-ல் ஆலயம் சீரமைப்பதற்கும், சோழர் ஆட்சி (பராந்தக சோழன்) தொண்டை நாட்டில் ஏற்பட்ட பிறகு அவ்வாலயத்தை ஆதரித்த செய்தியும் உள்ளது. அக்காலத்தில் விமல ஸ்ரீஆரிய தீர்த்தப்பள்ளி என்ற சிறப்புப்பெயரும் பெற்றுள்ளது . மேலும் விழுக்கம், வெண்குன்றம் போன்ற ஊர்களிலும் சமணர்கள் வாழ்ந்துள்ளதற்கான ஆதாரங்களும் அங்குள்ள கல்வெட்டில் உள்ளது. ஆகவே மிகவும் பழமையான ஜிநாலயங்களில் இதுவும் ஒன்றாகும். (மேலும் பல ஜிநாலயங்களின் பழமைக்கான ஆதாரங்கள் ஆலய சீரமைப்பின் போதும், அப்பகுதியில் பாறை உடைக்கும் பணி தொடங்கியதாலும் மறைந்து விட்டன. முதன் முதலில் பெண் தெய்வத்திற்கான தனி சன்னதி தமிழகத்தில் முதலில் ஏற்பட்டதும் இவ்வாலயத்தில் தான்.

சந்திரநாதர் வெண்பளிங்கு சிலை

அமைப்பு

கீழ்சாத்தமங்கலம் ஊரின் வடமேற்குப் பகுதியிலுள்ள பாறையின் மீது சந்திரநாதர் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இப்பாறை அதிக உயரம் இல்லாததாலும், கோயிலைச் சுற்றியுள்ள பகுதி சமமாக்கப்பட்டிருப்பதாலும் வெளியிலிருந்து பார்ப்பதற்கு பாறை எளிதில் புலப்படுவதில்லை.

இங்கு முதன் முறையாக எந்த ஆண்டில் கோயில் தோற்றுவிக்கப்பட்டது என்பதனை வரையறை செய்ய சான்றுகள் இல்லை. ஆனால் பொ.யு. 745-ம் ஆண்டிலிருந்தே இக்கோயில் பல்வேறு தானங்கள் பெற்று வந்துள்ளது. பொ.யு. 8-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சந்திரநாதர் கோயில் சிறிய அளவில் பாறையின் மீது அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும். பின்னர் பொ.யு. 876-ல் புதுப்பிக்கப்பட்டபோது கருவறை, முகமண்டபம், யக்ஷி கருவறை ஆகிய பகுதிகள் ஏற்படுத்தப்பட்டது. இருமுறை புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த கோயிலில் பண்டைக்காலகட்டட, சிற்பக் கலையம்சங்கள் எவையும் எஞ்சி நிற்கவில்லை.

சிற்பங்கள், படிமங்கள்

கருவறையில் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் சந்திரநாதர் சலவைக் கல்லால் செய்யப்பட்டது. இந்த தீர்த்தங்கரர் உருவங்கள் தற்காலத்தில் பிரதிட்டை செய்யப்பட்டது. பண்டைக் காலத்தில் இந்தக் கோயிலில் நிறுவப்பட்ட சந்திரதாதர், யக்ஷி ஆகியோரது திருவுருவங்கள் காலப்போக்கில் அழிந்திருக்கவேண்டும். நுழைவாயிலின் மேற்குப்பகுதியிலும் சாமரம் வீசுவோர் புடைசூழ தியானக்கோலத்தில் வீற்றிருக்கும் தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

இந்த கோயிலில் ஏராளமான தீர்ந்தங்கரர்களது உலோகத் திருவுருவங்களும் காணப்படுகின்றன. இவற்றுள் சந்திரநாதர், புஷ்பதந்தர், முனிஸ்விரதர் ஆகியோரைக் குறிப்பவை சற்று பெரிய அளவிலானவையாகும். இவையன்றி சிறிய அளவில் மேலும் சில தீர்த்தங்கரர்கள், யக்ஷி, அஷ்டமங்கலச் சின்னங்கள் மேரு முதலிய வடிவங்களும் இடம் பெற்றிருத்தலைக் காணலாம். இவையாவும் சமீபத்தியவை எனவே பண்டைய கலையம்சங்களை இங்குள்ள சிற்பங்களிலும், படிமங்களிலும் காண இயலாது.

மகாமண்டபத்திலுள்ள தூண்கள் சிலவற்றில் சிவன், பார்வதி ஆகியோர் நந்திவாகனத்தில் வீற்றியிருத்தல், இலங்க ஒருவர் வழிபடுதல், நரசிம்மர், அனுமன் முதலியவர்களைக் குறிக்கும் சிற்றுருவச் சிற்பங்கள் செதுப்பட்டிருக்கின்றன. இவை இவ்வூரில் முற்றிலுமாகச் சிதைந்த நிலையிலிருந்த சிவன் கோயிலைச் சார்ந்தவை என்றும் சந்திரநாதர் கோயிலைப் புதுப்பித்தபோது அவற்றை நிறுவினர்.

சந்திரநாதர் கோயில் சிலைகள்

கல்வெட்டுக்கள்

கீழ்சாத்தமங்கலத்திலிருந்த பண்டைக்காலக் கோயிலின் கட்டட சிற்பக்கலையம்சங்களைப் பற்றிய சில வரலாற்றுண்மைகளை இங்கு உள்ள கல்வெட்டுக்களின் வழி அறியலாம். இச்சாசனங்கள் கோயிலிலிருந்து ஏறத்தாழ 300 அடி தெற்கிலுள்ள 'பெருமாள் பாறை' எனும் சிறுகுன்றில் பொறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு கல்வெட்டு தற்போதைய கோயிலின் கருவறை எழுப்பப்பட்டுள்ள பாறையில் உள்ளது.

கல்வெட்டுச் செய்திகள்
  • மிகப் பழமை வாய்ந்த கல்வெட்டு பல்லவ மன்னனான இரண்டாம் நந்திவர்மன்னனின் 14-வது ஆட்சியாண்டில் (பொ.யு. 745) ’இளையார் பவணந்தி’ இங்கிருந்த பள்ளிக்கு ஏழுகழஞ்சு பொன் தானமாக இவ்வூர் மக்களிடம் அளித்தார்.
  • நந்திவர்மபல்லவனது ஐம்பத்தாறாவது ஆட்சியாண்டில் (பொ.யு. 787) விழுக்கம் என்னும் ஊரைச் சார்ந்த ஜின அடியார் என்பவரின் மகளாகிய பூண்டி மூப்பாவை பதினேழு கழஞ்சு பொன்னைக் கொடுத்தார்.
  • கம்பவர்ம பல்லவனது ஆட்சிக் காலத்தில் (பொ.யு. 876) சந்திரநாதர் கோயில் முதன்முறையாகப் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. அப்போது கருவறையை ஒட்டி முகமண்டபமும், யக்ஷிக்கெனத் தனிக் கருவறையும் கட்டப்பெற்றிருக்கின்றன. இந்த நற்பணியினைக் காடகதியரையர் என்பவரின் துணைவியாகிய மாதேவி செய்துள்ளார்.
  • இந்த கோயிலின் கருவறையை ஒட்டியுள்ள பாறைப் பகுதியில் மதுரையை வெற்றி கொண்ட கோப்பரகேசரிவர்மனை முதலாம் பராந்தக சோழனது (பொ.யு. 907-953) பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது
தர்மதேவி
  • அக்காலத்தில் சாத்தமங்கலத்துத் துறவியாகிய ஆதிதேவரின் சீடராகிய பலதேவப் பிடாரன் என்பவர் இந்த பள்ளியில் நந்தா விளக்கொன்று எரியவிடுவதற்காக சில நிலங்களைத் தானமாக அளித்திருக்கிறார்.
  • பொ.யு. 11-ம் நூற்றாண்டிலும் இப்பள்ளிக்கு வரி செலுத்தப்படவேண்டியதில்லாத நிலங்கள் (இறையிலி நிலங்கள்) கொடுக்கப்பட்டிருக்கின்றன.

சாத்தமங்கலத்திலுள்ள கோயிலைப்பற்றிக் கூறும் சாசனங்கள் இங்குள்ள பாறைகளில் மட்டும் தான் காணப்படுகின்றன. முன்பு இங்கிருந்த கட்டடக்கோயிலின் சுவர்களிலும் கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டிருந்திருக்கலாம்.

வழிபாடு

நித்ய பூஜை , நந்தீஸ்வர பூஜை மற்றும் விசேஷ பூஜை போன்றவை நடக்கிறது. மேலும் அக்ஷய திரிதியை அன்று ஸ்ரீஆதிநாதர் திருவீதி உலாவும், ஆடி வெள்ளி அன்று ஸ்ரீஜ்வாலாமாலினி மற்றும் ஸ்ரீபத்மாவதி தேவியர்களின் ஆலயம் வலம் வரும் விழாவும் ஆண்டு தோறும் நடைபெறுகிறது.

உசாத்துணை


✅Finalised Page