under review

கீதா மதிவாணன்

From Tamil Wiki
கீதா மதிவாணன்
கீதா மதிவாணன்

கீதா மதிவாணன் (1971- ஆம் ஆண்டு ஏப்ரல் 2) தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர். மொழிபெயர்ப்பாளர். ஆஸ்திரேலியா பற்றிய செய்திகளை எழுதுவதுடன் மொழியாக்கங்களும் செய்து வருகிறார்.

பிறப்பு - கல்வி

தமிழ்நாட்டில் திருச்சியிவ் பொன்மலை என்ற சிற்றூரில் ஜெயபால் - ராஜம் இணையருக்கு 1971-ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் திகதி கீதா மதிவாணன் பிறந்தார். இவர் தனது ஆரம்பக்கல்வியை பொன்மலை புனித சிலுவை மகளிர் உயர்நிலைப் பள்ளியிலும் மின்னணு தகவல் தொடர்புத்துறையில் பட்டயப்படிப்பை திருச்சி PNRM Polytechnic கல்லூரியிலும் பயின்றார்.

தனி வாழ்க்கை

கீதா மதிவாணனுடைய கணவர் பெயர் மதிவாணன். மகள் பெயர் வெண்ணிலா. மகன் பெயர் சூர்யா. கீதா மதிவாணனின் குடும்பம் தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்து, 2008-ல் ஆஸ்திரேலியாவின் பிறிஸ்பன் மாநகரில் குடியேறினார்கள். அங்கிருந்து 2010-ல் மெல்பேர்னுக்குச் சென்று ஒரு வருட காலம் வசித்தார்கள். 2011-ஆம் ஆண்டு முதல் - தற்போது - சிட்னியில் வசித்துவருகிறார்கள்.

பங்களிப்பு

பாடசாலைக்காலம் முதல், கவிதையில் ஈடுபாடு கொண்டிருந்த கீதா மதிவாணனுக்கு புலம்பெயர் வாழ்வு ஏற்படுத்திய தனிமையயும் புதிய நிலம் கொடுத்த வசீகரமும் எழுத்துவதற்கான தூண்டுதல்களாக அமைந்தன என்கிறார்.

ஆரம்பத்தில், ஆஸ்திரேலியா குறித்த பல அரிய தகவல்களை எழுத ஆரம்பித்த கீதா மதிவாணன், அவற்றை இணைய இதழ்களுக்கு அனுப்பினார். ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரனங்கள், தாவரங்கள், நிலங்களின் தனித்துவம், உணவுகள், பூர்வகுடி வரலாறு போன்ற பல அபுனைவுகள், கீதா மதிவாணன் தன்னை எழுத்துக்களில் பொருத்திக்கொள்வதற்கு உதவியாக அமைந்தன. கீதா மதிவாணனின் இந்தப் படைப்புக்கள் பதிவுகள், நிலாச்சாரல், தமிழ்மன்றம் போன்ற இதழ்களில் வெளியாயின. ஆஸ்திரேலியாவின் வானொலியிலும் கீதா மதிவாணனின் இந்த தகவல் செறிவான எழுத்துக்கள் தொடராக ஒலிபரப்பாயின."கீதமஞ்சரி" என்ற தனது இணையப் பக்கத்தில் ஏராளமான தகவல் செறிவுள்ள பதிவுகளை எழுதினார்.

ஆஸ்திரேலியாவின் பிரபல எழுத்தாளர் ஹென்றி லோசன் கதைகளை மொழிபெயர்க்கத் தொடங்கிய கீதா மதிவாணனுக்கு நவீன இலக்கியத்தின் அறிமுகம் கிடைத்தது. இவரது கதைகளும் மொழிபெயர்ப்பு கதைகளும் கனலி, நடு, அதீதம்,வல்லமை, மஞ்சரி, பூவுலகு போன்ற சஞ்சிகைகளில் வெளிவந்தன.

இலக்கிய இடம்

கீதா மதிவாணன் ஆஸ்திரேலியா பற்றிய ஏராளமான தகவல்களை பொதுவாசகர்களுக்காக எழுதியிருக்கிறார். வானொலிகளுக்கு தொடர் செவ்விகளாகவும் எடுத்துச் சென்றிருக்கிறார்.

'வெளிநாடுகளில் வாழும் ஈழத்து இலக்கியவாதிகள், தாயக நினைவுகளுடன் இன்றும் எழுதிக்கொண்டிருக்கும் சூழலில், தமிழகத்திலிருந்து இந்த நாட்டுக்கு புலம்பெயர்ந்து வந்திருக்கும் கீதா மதிவாணன், தமிழ் இலக்கிய உலகிற்கு அவுஸ்திரேலிய மண்ணின் மைந்தர்களை - அவர்கள் வாழ்ந்த மண்ணின் வாசனையய - 230  வருடகால வரலாற்றைக்கொண்டிருக்கும் இந்தக்கண்டத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த காடுறை மனிதர்களின் வாழ்க்கைக்கோலத்தை - உயிர்ப்புடன் தந்திருப்பதானது, விதந்து பாராட்டத்தக்கது மட்டுமல்ல. எம் அனைவருக்கும் முன்மாதிரியான எழுத்துப்பணியுமாகும்" - என்கிறார் எழுத்தாளர் முருகபூபதி

படைப்புக்கள்

மொழிபெயர்ப்பு
  • என்றாவது ஒரு நாள் - ஹென்றி லோசன் கதைகள் (அகநாழிளை - 2015)
  • மழை நிலா கதைகள் - யுடா அகினாரியின் ஜப்பானிய சிறுகதைகள் (கனலி 2022)
சிறுகதை
  • அம்மாச்சியும் மகிழம் பூக்களும் (கோதை பதிப்பகம் - 2020)
சிறுவர் இலக்கியம்
  • கொக்கரக்கோ குழந்தைப் பாடல்கள் (லாலி பப் சிறுவர் உலகம் - 2020)
அமேசானில் வெளியாகியுள்ள மின்னூல்கள்
  • ஆஸ்திரேலியாவின் அற்புதப் பறவைகள் – தொகுப்பு 1 & 2
  • கங்காரூ முதல் வல்லபி வரை

வெளி இணைப்பு