under review

காட்டுப் பெருமாள்

From Tamil Wiki
காட்டுப் பெருமாள்
காட்டுப் பெருமாள்.jpg
காட்டுப்பெருமாள் அறிவிப்பு
காட்டுப்பெருமாள் அறிவிப்பு
காட்டுப்பெருமாள் நூல்

காட்டுப் பெருமாள் (பெருமாள்) சமூக அக்கறையுள்ளவராகவும் போராட்டவாதியாகவும் அறியப்படுகிறார். இவர் பெரியாரின் கருத்துகளில் ஈடுபாடு கொண்டவர். மலேசியக் கம்யூனிஸ அமைப்பின் வழி போராட்டங்களை முன்னெடுத்தவர்.

பிறப்பு, கல்வி

காட்டுப் பெருமாளின் இயற்பெயர் பெருமாள். இவர் இந்தியாவில் பிறந்து பின் மலாயாவுக்கு வந்தார் என்னும் தகவல் தவிர பெற்றோர் குடும்ப விவரங்கள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. காட்டுப் பெருமாள் சுங்கை சிப்புட் கமுனிங் தோட்டத்தில் வசித்தார். மூன்றாமாண்டு வரை தமிழும் பின் மெதடிஸ்ட் பள்ளியில் ஆங்கிலமும் பயின்றார்.

தனிவாழ்க்கை

காட்டுப் பெருமாளின் மனைவி பாப்பா. இவர்களுக்கு ஜெகதாம்பாள் என்ற மகள் இருந்தார். காட்டுப் பெருமாள் பால் மரம் சீவும் தொழிலாளியாக இருந்தார்.

போராட்ட வாழ்க்கை

காட்டுப் பெருமாள் தோட்டத் தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இணைந்தார். சங்கத்திற்கு நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டார். தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களின் நலம், ஊதிய விவரங்களில் அக்கறையின்றி இருப்பதை எதிர்த்துக் கேள்வி கேட்டார். காட்டுப் பெருமாள் தோட்ட நிர்வாகத்தினரின் வெறுப்புக்கு ஆளானதால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். காட்டுப் பெருமாள் குடும்பத்தோடு புருவாஸ் தோட்டத்திற்கு மாறினார். தோட்ட நிர்வாகம் மாறியபின் காட்டுப் பெருமாள் மீண்டும் எல்ஃபில் தோட்டத்திற்குத் திரும்பினார். காட்டுப் பெருமாள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காகத் தொழிற்சங்கத்தின் மூலம் கோரிக்கைவிடுத்தார். சம்பள உயர்வை நிர்வாகத்தினர் ஏற்கவில்லை. காட்டுப் பெருமாள் தொழிலாளர்களிடம் எதிர்ப்புணர்வைத் தூண்டுவதை தோட்ட நிர்வாகம் கடுமையாக எதிர்த்தது.

கள் ஒழிப்பு

காட்டுப் பெருமாள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்குத் தோட்ட மக்கள் பெருமளவு ஆதரவு வழங்கினர். கள்ளுக்கடைகளினால் தோட்ட தொழிலாளிகளின் வாழ்வு பாழாவதைக் கண்டு வேதனையுற்று, இளைஞர்களின் துணையுடன் தோட்டத்திலுள்ள கள்ளுக்கடையை மூடவேண்டுமெனப் போராட்டத்தில் இறங்கினார்.

கம்யூனிஸ இயக்கம்

மலாயாவில் பிரிட்டிஷ் அரசாங்கத்தைக் கவிழ்த்து மலாயா மக்கள் ஜனநாயகக் குடியரசு அமைக்க முயன்ற எம். சி. பியின் (மலாயா கம்யூனிஸ கட்சி) நடவடிக்கைகள் வாழ்வில் மாற்றம் கொண்டுவருமெனக் காட்டுப் பெருமாள் நம்பிக்கை கொண்டார்.

காட்டுப் பெருமாள் ஆங்கில அரசின் எதிர்ப்பாளர் என அறியப்பட்டதால் எந்நேரத்திலும் காவல்துறையினரால் கைது செய்யப்படுவாரென்ற நிலை ஏற்பட்டது. காட்டுப் பெருமாள் மாறுவேடங்களில் நடமாட வேண்டியதாகியது. காட்டுப் பெருமாள் தோட்டத்தில் ஒரு நாடக நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, அவரைப் பிடிக்கக் காவல்துறையினர் முயன்றனர். காட்டுப் பெருமாள் பெண் வேடத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றார். காட்டுப் பெருமாள் நள்ளிரவுக்குப் பின் இரகசியமாகத் தோட்டத்துக்கு வந்து, அவ்வப்போது மக்களைச் சந்தித்தார். காட்டுப் பெருமாள் அவர்களுக்கு உணவுப்பொருட்கள் கொண்டு வந்தும் நலன் விசாரித்தும் வந்தார். காட்டுப் பெருமாள் மாறு வேடத்தில், தோட்ட மக்களோடு ஆலய வழிபாட்டிலும் கலந்து கொண்டார். காட்டுப் பெருமாள் கொள்ளைக்காரன் என்று பழி சுமத்தப்பட்டுச் சிறப்புக் காவல் படையினரால் தேடப்பட்டு வந்தார். காட்டுப் பெருமாளைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்குச் சன்மானம் வழங்கப்படுமென்று அறிவிக்கப்பட்டு, நான்கு மொழிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

காட்டுப் பெருமாள் தலைமறைவாகியபின் அவரது மனைவியும் மகளும் தெலுக் அன்சானிலுள்ள நோவாஸ் ஸ்கோஷியா தோட்டத்திற்குச் சென்றனர். காவல் துறை அவர்களை அணுக்கமாகக் கண்காணித்தே வந்தது.

காட்டுப் பெருமாள் எம்.பி.சியின் இந்தியப் பிரிவுக்குத் தலைமை தாங்கினார். இவரின் தூண்டுதலால் மேலும் சிலரும் இவ்வியக்கத்தில் சேர்ந்தனர். சீனர்களும் இவருடன் இணைந்ததாகக் கூறப்படுகிறது.

சர்ச்சை

காட்டுப் பெருமாளுக்கு இறுதியில் என்ன நேர்ந்ததென்ற சரியான தகவல்கள் இன்று வரை தெரியவில்லை. காட்டுப் பெருமாள் கொல்லப்பட்டதாகவும் குடும்பத்தோடு இந்தியாவிற்குச் சென்றுவிட்டதாகவும் பல வதந்திகள் வெளிவந்தன.

பிற ஈடுபாடுகள்

விளையாட்டு

காட்டுப் பெருமாள் பள்ளிக்காலத்தில் கால்பந்து விளையாட்டில் சிறந்து விளங்கினார். தோட்டத்து இளைஞர்களுக்குக் காற்பந்து பயிற்சி அளித்திருக்கிறார்.

நாடகம்

காட்டுப் பெருமாள் நாடகத்திலும் ஆர்வம் கொண்டிருந்தார். தோட்டத்தில் நடைபெறும் நாடகங்களில் பங்கேற்று நடித்துள்ளார். வள்ளி முருகன் திருக்கல்யாண நாடகத்தில் வள்ளியாகப் பெண் வேடமேற்று நடித்துள்ளார்.

வரலாற்று இடம்

காட்டுப்பெருமாள் மலேசியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் வீரநாயகர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

உசாத்துணை


✅Finalised Page