கல்வி கோபாலகிருஷ்ணன்
'கல்வி' கோபாலகிருஷ்ணன் (கோபாலகிருஷ்ணன்) (அக்டோபர் 10, 1912 - 2007) எழுத்தாளர், இதழாளர், கல்வியாளர், ஓவியர். சிறார்களுக்காக அறிவியல் சார்ந்த பல நூல்களை எழுதினார். 'சுதேசமித்திரன்' இதழில் பணியாற்றினார். 'கல்வி' என்ற இதழைத் தொடங்கி நடத்தினார். குழந்தை எழுத்தாளர் சங்கத் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
கோபாலகிருஷ்ணன் என்னும் இயற்பெயரை உடைய 'கல்வி' கோபாலகிருஷ்ணன், சென்னையில், அக்டோபர் 10, 1912 அன்று பிறந்தார். பட்டப் படிப்பை முடித்த இவர், சுதந்திர எழுத்தாளராகவும், இதழாளராகவும் பணியாற்றினார்.
இலக்கிய வாழ்க்கை
'கல்வி' கோபாலகிருஷ்ணன் சுதேசமித்திரன் இதழில் சிறுவர் பகுதி ஆசிரியராகப் பணியாற்றினார். ஆசிரியராக இருந்த சாண்டில்யனின் ஊக்குவிப்பில் சிறார்களுக்கான பல தொடர்களை எழுதினார். 'மந்திரவாதியின் மகன்', 'பறக்கும் பாப்பா', 'பண்டை உலகில் பறக்கும் பாப்பா', 'கானகக் கன்னி' போன்ற தொடர்கள் மிகுந்த வாசக வரவேற்பைப் பெற்றன. 'பறக்கும் பாப்பா' நூல் தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகி வாசகர்களால் வரவேற்கப்பட்டது. பல பதிப்புகள் கண்டது. 'பறக்கும் பாப்பா' பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு குழந்தைகளுக்கான பல அறிவியல், பொது அறிவு நூல்களை 'கல்வி' கோபாலகிருஷ்ணன் எழுதினார். கல்கி போன்ற இதழ்களில் சிறார்களுக்காகவும், பெரியோர்களுக்காகவும் பல படைப்புகளை எழுதினார்.
தமிழ்நாட்டின் அறிவொளி இயக்க வளர்ச்சிக்காக அறிவியல், உடல்நலம், மருத்துவம், பொது அறிவு சார்ந்து ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். டில்லி, மைசூர், சிம்லா ஆகிய இடங்களில் நடந்த குழந்தை இலக்கியக் கருத்தரங்களில் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
கோபாலகிருஷ்ணன், 250-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். கோபாலகிருஷ்ணன் தனது படைப்புகள் பற்றிக் கூறும்போது, "மறைந்த ஸ்ரீ சாண்டில்யன் என்னை குழந்தைகளுக்கான எழுத்தாளராக உருவாக்கி, குழந்தைகளுக்காக தொடர்ந்து எழுத ஊக்குவிப்பதில் உந்து சக்தியாக இருந்தார். எனது வெற்றிக்கான பெருமை அவரையே சாரும்." என்று குறிப்பிட்டார்.
இதழியல்
பாடப்புத்தகங்களுக்கு ஓவியம் வரையும் பணியில் ஈடுபட்டிருந்த கோபாலகிருஷ்ணன், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும் 'கல்வி' என்ற இதழைத் தொடங்கி எட்டு ஆண்டுகள் நடத்தினார். அதனால் 'கல்வி' கோபாலகிருஷ்ணன் என்று அழைக்கப்பட்டார். தொடர்ந்து 'சிந்தனை கல்வி' என்ற இதழையும் நடத்தினார்.
பொறுப்பு
குழந்தை எழுத்தாளர் சங்கத் தலைவர் (1966)
விருதுகள்
- பூச்சிகளின் வாழ்க்கையைக் கூறும் 'மந்திரவாதியின் மகன்' நூல் மத்திய அரசின் பரிசு பெற்றது.
- தாவரங்களைப் பற்றிய 'கானகக் கன்னி' நூல் மத்திய அரசின் பரிசு பெற்றது.
- 'பறக்கும் பாப்பா' நூல் மத்திய அரசின் பரிசு பெற்றது.
- உயிர் தோன்றியது முதல் மனிதன் தோன்றியது வரையுள்ள பரிணாம வளர்ச்சி குறித்த அறிவியல் செய்திகளைச் சித்திரிக்கும் 'பண்டை உலகில் பறக்கும் பாப்பா' நூல் மத்திய அரசின் பரிசு பெற்றது.
- எறும்புகள், தேனீக்களைப் பற்றிய 'மிட்டாய்ப் பாப்பா' நூல், யுனெஸ்கோ பரிசு பெற்றது.
- 'மணி என்ன?' நூலுக்கு தென்மொழி புத்தக ட்ரஸ்ட் பரிசு
- குழந்தை எழுத்தாளர் சங்கம் வழங்கிய விருது
மறைவு
'கல்வி' கோபாலகிருஷ்ணன், 2007-ல் காலமானார்.
மதிப்பீடு
'கல்வி' கோபாலகிருஷ்ணன் புவியியலையும், அறிவியலையும் சிறார்களுக்குப் புரியும் வகையில் எளிய தமிழில்,கதை வடிவில் வழங்கினார். குழந்தைகள் அறிவியலைக் கற்றுக்கொள்ளும் வகையில் பல்வேறு பொது அறிவுச் செய்திகளுடன் இவரது நூல்கள் அமைந்தன. பெரியோர்களுக்காகவும் உடல் நலம் மற்றும் மருத்துவம் சார்ந்து பல நூல்களை எழுதினார். அறிவியல் உண்மைகளை குழந்தைகளுக்கு எடுத்துரைப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்ட முன்னோடி எழுத்தாளர்களான பெ.நா. அப்புசாமி, ஜே.பி. மாணிக்கம் வரிசையில் 'கல்வி' கோபாலகிருஷ்ணனும் இடம்பெறுகிறார்.
நூல்கள்
- மந்திரவாதியின் மகன் (பூச்சிகளின் வாழ்க்கையைக் கூறும் நூல்)
- மந்திரக்கோல் (தாவரங்களின் ஒளிச்சேர்க்கை பற்றிக் கூறும்)
- பறக்கும் பாப்பா
- பண்டை உலகில் பறக்கும் பாப்பா (பரிணாமத்தின் கதை)
- பாதாள உலகில் பறக்கும் பாப்பா (கடலியல் பற்றிய நூல்)
- மிட்டாய்ப் பாப்பா (எறும்பு, தேனீக்கள் பற்றிய நூல்)
- கானகக் கன்னி (தாவரங்களைப் பற்றிய நூல்)
- பாலர் கதைக் களஞ்சியம்
- காற்றின் கதை
- வியப்புக் கதைகள்
- வன விலங்குக் கதைகள்
- விவேகக் கதைகள்
- வேடிக்கைக் கதைகள்
- சான்றோர் வாழ்க்கை நீதிக் கதைகள்
- மணி என்ன?
- தீ...! தீ... !! தீ...!!!
- சூரப்புலி
- மாருதியின் புலிவேட்டை
- மாருதியின் மோட்டார்
- குறள் நெறியில் காந்தி அடிகள்
- காந்தியின் வாழ்விலே
- நேருவின் வாழ்விலே
- மாய மின்சாரம்
- சுப்ரமணிய பாரதி
- நான் ஒரு இந்தியன்
- சுண்டுவிரல் சீமா
- மாயாவிகள்
- நீலநெருப்பு
- பஞ்ச பூதங்களின் வரலாறு
- தாவரத் தாய்
- பெண் உரிமைச் சட்டங்கள்
- வளரும் குழந்தைக்கான சத்துணவு
- முதியோருக்காக
- விநோத விலங்குகள் - I & II
- வள்ளுவர் வழியில் காந்தியடிகள்
- நேர்மை மிக்க நேரு
- உடல் உறுப்புகளும் அவற்றின் செயல்களும்
- கொடிய நோய்களும் அவற்றைத் தவிர்ப்பதும்
- தொற்று நோய்களும் தடுப்பு முறைகளும்
- ராமகிருஷ்ண பரம்ஹம்ஸர்
- சாலைக் குறியீடுகள்
- சந்திரனுக்குச் செல்வோம்
- கனவுலகக் குழந்தைகள்
- கரடிக் கதைகள்
- அறிவுக் கதைகள்
- தேள்கடிக்கு முதல் உதவி
- பாம்புக் கடிக்கு முதலுதவி
- இளம்பிள்ளை வாதம்
- தடுப்பு ஊசி
- கலப்பினப் பசு வளர்ப்பு
- அற்புதப் படைப்புகள்
- தங்கச் சுரங்கம்
- குட்டிக் கதைக் களஞ்சியம்
- கதைக் கடல்
- என் கதை
- என் கதை - பெருங்குடல்
- என் கதை - சிறுகுடல்
- என் கதை - வயிறு
- என் கதை - உமிழ்நீர் சுரப்பி
- என் கதை - பல்
- ன் கதை - சருமம்
- ன் கதை - கண்
- ன் கதை - கணையம்
- ன் கதை - நீர்
- என் கதை - நாக்கு
- என் கதை - அளவை
- கர்ப்பிணிகள் கவனத்திற்கு
- பிரசவம்
- தாய்ப்பாலும் புட்டிப்பாலும்
- காற்றின் மூலம் பரவும் வியாதிகள்
- சுத்தம் சுகம் தரும்
- கண் பாதுகாப்பு
- பற்களின் பாதுகாப்பு
- சொறி சிரங்கு
- குடல் புழுக்கள்
- காச நோய்
- ஊறு குழி
- மஞ்சள் காமாலை
- கொடும்பாவிக் கொசு
- ஆட்கொல்லி
- சுத்தமான தண்ணீர் தேவையா?
- காலரா
- பிளேக் ஒரு கொள்ளை நோய்
- உயிர்க்கொல்லி எய்ட்ஸ்
- விடா முயற்சி
- மகளிர் மேம்பாட்டுத் திட்டங்கள்
- முதல் விரோதி
- எங்கள் கதை
- உங்கள் ஓட்டு
- அறநெறி அருளிய ஆன்றோர்
- எரியாத ஓலை
- கரையாத மண் சுவர்
- பஞ்சேந்திரிய புராணம்
- ஆன்றோர் நீதிக்கதைகள்
- அற்புதக் கனவு
- இனிப்பின் கதை
- சிறுவர் கதைப் பூங்கா
- அபாயம் நெருங்கிவிட்டது
- கண்ணன் கண்ட கனவு
- ஓர் குலம்
- ஆதிதிராவிடர் நலத் திட்டங்கள்
- இலவசச் சட்ட உதவி
உசாத்துணை
- 'கல்வி' கோபாலகிருஷ்ணன் கட்டுரை, பூஞ்சிட்டு தளம்
- சுட்டிகள் உலகம் குறிப்பு
- இந்து தமிழ் திசை கட்டுரை
- கல்வி கோபாலகிருஷ்ணன் நூல்கள், அமேசான் தளம்
- கல்வி கோபாலகிருஷ்ணன் நூல்கள், காமன்ஃபோல்க்ஸ் தளம்
- கல்வி கோபாலகிருஷ்ணன் நூல்கள்
- ரோஜா முத்தையா ஆய்வு நூலகம், சென்னை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Oct-2024, 12:49:47 IST