under review

கருவூர்த் தேவர்

From Tamil Wiki
கருவூர்த் தேவரும் ராஜராஜனும், கருவூரார் சன்னதி hindutamil.com

கருவூர்த் தேவர் ஒன்பதாம் திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ள திருவிசைப்பா பாடிய புலவர்களுள் ஒருவர். 11-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

வாழ்க்கை வரலாறு

கருவூர்த் தேவர் கருவூரில் அந்தணர் குலத்தில் பிறந்தவர். பெரும்பான்மையும் சோழநாட்டில் தங்கி, சோழர் கட்டிய கோவில்களில் சிறப்பானவைகளான ஆதித்தேச்சுரம், திரைலோக்கிய சுந்தரம், இராஜராஜேச்சுரம் (தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்) மற்றும் கங்கை கொண்ட சோழேச்சுரம் ஆகிய நான்கிற்கும் உடனிருந்து திருப்பதிகங்கள் பாடினார். சோழ மன்னர்கள் இராஜராஜன் மற்றும் இராஜேந்திரனிடம் பெரும் சிறப்பு பெற்று வாழ்ந்தார்.

காலம்

ஆதித்தேச்சுரம், திரைலோக்கிய சுந்தரம், இராஜராஜேச்சுரம் (தஞ்சைப் பெரிய கோயில்) மற்றும் கங்கை கொண்ட சோழேச்சுரம் ஆகிய தலங்கள் கட்டப்பட்டபோது உடன் இருந்து, இறைவன் மீது நான்கு பதிகங்களை பாடியுள்ளார். இந்த கோவில்களை கட்டிய காலம் 985 - 1044. எனவே கருவூர்த் தேவர் வாழ்ந்த காலம் பதினோராம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம். தஞ்சைப் பிரகதீஸ்வரர் கோவிலில் சிவலிங்கத்தை ஆவுடையாருடன் சேர்ந்து பிரதிஷ்டை செய்யக் கருவூரார் உதவினார் எனக் கூறப்படுகிறது.

கோயிலுக்குப் பின்னால் கருவூர்த் தேவரின் திருச்சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. மாமன்னன் இராஜராஜ சோழன் அருகில் நிற்க, கருவூர்த் தேவர் மருந்து இடித்து பந்தனம் செய்யும் காட்சி சிலை வடிவில் உட்பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மன்னனும் கருவூர் சித்தரும் சேர்ந்து இருக்கும் ஓவியம் உட்பிரகாரத்தில் காணப்படுகிறது.

பாடல்கள்

கருவூரார், பன்னிரு திருமுறைகளில் திருவிசைப்பா என்னும் ஒன்பதாம் திருமுறையில் ஒரு பகுதியை இயற்றினார். இவர் கீழ்காணும் பத்து சிவதலங்களிலுள்ள இறைவனைப் போற்றி 10 பதிகங்கள் பாடியுள்ளார். இவற்றில் 103 பாடல்கள் உள்ளன;

  • தில்லை
  • திருக்களந்தை
  • திருக்கீழ்கோட்டூர்
  • திருமுகத்தலை
  • திரைலோக்கிய சுந்தரம்
  • கங்கைகொண்ட சோழேச்சரம்
  • திருப்பூவனம்
  • திருச்சாட்டியக்குடி
  • தஞ்சை இராஜராஜேச்சுரம்
  • திருவிடை மருதூர்

உசாத்துணை

  • உரையாசிரியர் வித்வான் எம்.நாராயண வேலுப்பிள்ளை, பன்னிரு திருமுறைகள், தொகுதி 13, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை
  • மு. அருணாசலம் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு, 11-ம் நூற்றாண்டு பதிப்பு 2005, பக்கம் 200
  • கருவூர்த் தேவர் இயற்றிய பதிகங்கள்


✅Finalised Page