under review

கருணாலய பாண்டியனார்

From Tamil Wiki
கருணாலய பாண்டியனார் (நன்றி: நூல்கம்)

கருணாலய பாண்டியனார் (சிவங். கருணாலய பாண்டியனார்) (ஆகஸ்ட் 9, 1903 - ஜூன் 30, 1976) ஈழத்து தமிழறிஞர், ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், உரையாசிரியர். கலைச்சொல்லாக்கப் பணிகளில் ஈடுபட்டார். வட மொழியிலிருந்து பல நூல்களைத் தனித்தமிழில் மொழியாக்கம் செய்தார். கலைச்சொற்களைத் தனித்தமிழில் சொல்லாக்கம் செய்தார். தமிழ் இலக்கண இலக்கிய நூல்களில் சமூகப் பண்பாட்டுக் கூறுகளை ஆய்ந்து எழுதினார்.

பிறப்பு, கல்வி

கருணாலய பாண்டியனார் தமிழ்நாட்டில் பிறந்து ஈழத்தில் வாழ்வை அமைத்துக் கொண்டவர்களில் ஒருவர். திருநெல்வேலி மாவட்டம் மலையடிக்குறிச்சியில் ஆகஸ்ட் 9, 1903-ல் பிறந்தார். மதுரை தமிழ்ச்சங்கம் நடத்திய பாலபண்டிதர் பரிட்சையில் தேர்ச்சி பெற்றார்.

ஆசிரியப்பணி

கருணாலய பாண்டியனார் கொழும்பில் வணிகத்தொழில் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த கருப்பஞ் செட்டியாரின் புதல்வரான ராமநாதனுக்கு (லெ.ப.கரு. ராமநாதன்) தமிழ் கற்பிக்க இலங்கை வந்தார். ஆறு ஆண்டுகள் அவருக்கு தமிழ் கற்பித்தார். தமிழ் நாட்டிற்குத் திரும்பிச் சென்று வேலை தேடி கிடைக்காததால் மீண்டும் கொழும்பு வந்து தான் இறக்கும் வரை இங்கேயே ஆசிரியப்பணி செய்தார். கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் 1958-1976 வரை தமிழ்வகுப்புகள் நடத்தினார்.

இலக்கிய வாழ்க்கை

கருணாலய பாண்டியனார் பதினெட்டு நூல்களை எழுதினார். அவற்றுள் ஐந்து நூல்கள் பதிப்பிக்கப்பட்டன. செய்யுள்கள் பல இயற்றினார். அகவல், வெண்பா, கலிப்பா, யாப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி எழுதினார். ’அழகியது’ என்னும் கவிதை நூல் யாப்புத்தன்மையை புலப்படுத்துவது. அறநூல்களின் சாயல் கொண்டது. இவர் இயற்றிய 'திருக்கதிர்காமப் பிள்ளைத்தமிழ்' ஆசிரியப்பாவால் அமைந்தது. கதிர்காமத்திலுள்ள முருகனை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது. நாற்பத்திமூன்று ஆசிரியப்பாக்களால் ஆனது.

திருக்குறளின் அறத்துப்பாலுக்கு ’முப்பால் விளக்கம்’ என்னும் பெயரில் உரை எழுதினார். இலங்கை வானொலியில் திருக்குறள் தொடர்பான நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் நடத்தினார். இலக்கண நூல்களுக்கு விளக்கவுரை எழுதினார். ஆ. சதாசிவம் இலங்கை சாகித்திய மண்டலத்தின் 1966-ல் எழுதிய 'ஈழத்து தமிழ்க் கவிதைக் களஞ்சியம்' என்ற நூலுக்கு சிறப்புப் பாயிரம் எழுதினார். பல்வேறு தமிழ் நூல்களுக்கு சிறப்புப் பாயிரங்களும் முன்னுரைகளும் எழுதினார். பத்திரிக்கைகளில் கவிதைகள், கட்டுரைகள் எழுதினார். இவர் எழுதிய கட்டுரைகளில் நாவலர் நூற்றாண்டு விழா மலரில் எழுதிய ‘திருநின்ற செம்மையே செம்மை’ என்பதும் ஒன்று. கலைச்சொல்லாக்கத்தில் ஈடுபட்டார். ஆங்கிலப்பயிற்சி இல்லாததால் ஈழத்தின் எந்த சொல்லாக்க குழுக்களிலும் ஈடுபடவில்லை. ஆனால் இ. ரத்தினம் போன்ற இவரின் மாணாக்கர்கள் இவரின் ஆலோசனைகளை தொடர்ந்து பெற்று சொல்லாக்கப்பணிகளில் முக்கியப்பங்கு வகித்தனர்.

இலக்கிய இலக்கண நூல்களில் சமூக பண்பாட்டு அம்சங்களை ஆராய்ந்தார். 'எழினி' என்ற பெயரில் ஆராய்ச்சி நூலை வெளியிட்டார். 'தொல்காப்பியர் காலத் தமிழகம்' என்ற பெயரில் இவர் எழுதிய ஆய்வு நூல் கையெழுத்துப் படி நிலையில் உள்ளது. இந்நூல் தமிழகம், தொல்காப்பியரின் காலம், தமிழரினம், ஆட்சிமுறை, வாழ்க்கை முறை, பண்பாடு என ஆறு இயல்களில் அமைந்துள்ளது. நோக்கு இதழில் (1965, இதழ் 5) வெளிவந்த இவரின் தொல்காப்பியச் செய்யுளில் 34 உறுபுகளில் ஒன்றான நோக்கு பற்றிய கட்டுரை அதைப்பற்றிய விரிவான விளக்கத்தைத் தந்தது.

மொழிபெயர்ப்பு

கருணாலய பாண்டியனார் தனித்தமிழ் பயன்பாட்டில் நம்பிக்கை கொண்டிருந்தார். 1936-ல் “தமிழ்கலையாக்கம்” என்ற பெயரில் ஈழகேசரியில் எழுதிய கட்டுரை மொழிபெயர்ப்பில் தனித்தமிழை பேணுவதைப்பற்றியது. மொழிபெயர்ப்பில் தனித்தமிழ் பேண வேண்டியதன் அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்தினார். இவருடைய எழுத்துக்களில் மிகப்பெரும்பான்மை மொழிபெயர்ப்புகள். வேத-உபநிடதங்கள், பகவத்கீதை ஆகியவற்றிலுள்ள சொற்களின் மொழியாக்கத்தில் ஈடுபாடு கொண்டார். பதினான்கு நூல்களை வடமொழியிலிருந்து மொழியாக்கம் செய்தார். இவற்றுள்' திருவருட் செற்றம்', 'நெடுமால் பெயராயிரம்', 'நம்பியகவல்' ஆகியவை மட்டுமே நூல் வடிவம் பெற்றன. கருணாலய பாண்டியனாரின் மொழிபெயர்ப்புகள் பெரும்பாலும் இந்து சமயம், தத்துவம் சார்ந்து அமைந்தன.

விவாதங்கள்

தொல்காப்பியரின் காலத்தை ஆய்வு செய்யும்போது பொ.யு. பதினாறாம் நூற்றாண்டு என கருணாலய பாண்டியனார் சொன்னது ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

சிறப்புகள்

  • கருணாலய பாண்டியனார் கொழும்பு வாழ் தமிழ் மக்களால் விழா எடுத்து பாராட்டப்பட்டார்.
  • இரத்தினம் கருணாலய பாண்டியனாரின் தமிழ்ப்பணிகளைப் போற்றும் விதமாக ’புலவர் போற்றிசை’ நூலை எழுதினார்.

மறைவு

கருணாலய பாண்டியனார் ஜூன் 30, 1976-ல் காலமானார்.

நூல்கள்

  • அழகியது
  • திருக்கதிர்காமப் பிள்ளைத்தமிழ்
மொழிபெயர்ப்பு
  • கூற்றவன் மறை (வடமொழி மூலம்: கடோப நிடதம்)
  • கேள்வி மறை (பிரசினோப நிடதம்)
  • யார்மறை (கேனோப நிடதம்)
  • அங்கிரன் மறை (முண்டகோப நிடதம்)
  • ஐதரேயம் (ஐதரேய உபநிடதம்)
  • விழுமிய வெண்குதிரை (சுவேதாஸ்வர உபநிடதம்)
  • தேரைவாய் மொழி (மாண்டுக்ய உபநிடதம்)
  • சிச்சிலி மறை (தைத்ரீய உபநிடதம்)
  • கடவுள் மறை (ஈசோப நிடதம்)
  • திருவருட் செற்றம் (ஸ்ரீருத்ரம்)
  • நெடுமால் பெயராயிரம் (விஷ்ணுசஹஸ்ர நாமம்)
  • புணர்ப்பியல் (ஞானசூத்திரம்)
  • நம்பியகவல் (ஸ்ரீமத்பகவத்கீதை)
  • கல்விகிழாள் வணக்கம் (சரஸ்வதி துதி)

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page