under review

கருணானந்தம்

From Tamil Wiki
கருணானந்தம்

கருணானந்தம் (ஆனந்தம்; எஸ். கருணானந்தம்; கவிஞர் கருணானந்தம்) (அக்டோபர் 15, 1925 – செப்டம்பர் 27, 1989) கவிஞர், எழுத்தாளர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக ஆசிரியர், பத்திரிகையாளர். தமிழக அரசின் செய்தித் துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றினார். அரசியல், சமூகம் சார்ந்து பல நூல்களை எழுதினார். திராவிடர் கழகத்தின் முன்னோடி உறுப்பினர்களில் ஒருவர். தமிழக அரசு, 2007-ல், இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியது.

பிறப்பு, கல்வி

கருணானந்தம், அக்டோபர் 15, 1925 அன்று, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுங்கந்தவிர்த்த சோழன் திடலில், சுந்தரமூர்த்தி - ஜோதி அம்மாள் இணையருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். தொடக்கக் கல்வியை தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் படித்தார். எட்டாம் வகுப்பு முதல், பத்தாம் வகுப்பு வரை தஞ்சை செயின்ட் பீட்டர்ஸ் பள்ளியில் பயின்றார். கும்பகோணம், அரசு ஆடவர் கல்லூரியில் இடைநிலை வகுப்பு படித்தார். ஈ.வெ. ராமசாமிப் பெரியாருடனனான சந்திப்பால், படிப்பை முடிக்காமல் இடை நின்றார்.

கவிஞர் கருணானந்தம்

தனி வாழ்க்கை

கருணானந்தம், தபால் தந்தித் துறையில் அஞ்சல் பிரிப்பாளராகப் பணியாற்றினார். 1969-ல் விருப்ப ஓய்வு பெற்றார். அதே ஆண்டில் தமிழக அரசின் செய்தி - மக்கள் தொடர்புத் துறையில், பிரசார அலுவராகப் பணியில் சேர்ந்தார். சில ஆண்டுகள் பணிக்குப் பின் துணை இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றார். தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தில் மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றினார். மணமானவர்.

இலக்கிய வாழ்க்கை

கருணானந்தம், கவிஞராக அறியப்பட்டார். குடியரசு, முரசொலி, திராவிட நாடு, முத்தாரம், தினமணி கதிர் போன்ற இதழ்களில் கவிதைகள் எழுதினார். பின்னர் அவை தொகுக்கப்பட்டு நூல்களாகின. குடியரசு இதழில் கட்டுரைகள் எழுதினார். தந்தை பெரியார் மணிவிழா மலரில் கருணானந்தத்தின் கட்டுரைகள் இடம்பெற்றன. கருணானந்தம் அண்ணாத்துரையைப் பற்றி எழுதிய ’அண்ணா சில நினைவுகள்!’ என்ற கட்டுரை நூல், உண்மை நிகழ்ச்சிகளின் தொகுப்பு. ஈ.வெ.ரா. பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை எளிய நடையில் எழுதினார்.

கவிஞர் கருணானந்தம் நூல்கள்

இதழியல்

கருணானந்தம், குடியரசு இதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். தமிழரசு இதழின் ஆசிரியராகச் சில ஆண்டுகள் பணியாற்றினார்.

நாடகம்

கருணானந்தம் நாடகங்கள் எழுதினார். கருணானந்தத்தின் கவிதை நாடகங்களான 'நறுமணம்', 'தூண்டாவிளக்கு', 'ஏற்றதுணை' ஆகியவை சென்னை வானொலி நிலையத்தில் ஒலிபரப்பாகின.

அரசியல்

கருணானந்தம், ஈ.வெ. ராமசாமிப் பெரியாரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார். கல்லூரியில் படிக்கும்போதே நண்பர் தவமணிராசனுடன் இணைந்து 1943-ல், ’திராவிட மாணவர் கழகம்’ என்பதைத் தோற்றுவித்தார். கல்லூரிப் படிப்பைக் கைவிட்டு சுயமரியாதை இயக்கத்தின் தன்னை இணைத்துக் கொண்டார். கருப்புச் சட்டைப் படை அமைப்பின் தற்காலிக அமைப்பாளராக ஈ.வெ.கி. சம்பத்தையும் கருணானந்தத்தையும் ஈ.வெ.ரா. நியமித்தார்.

திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது கருணானந்தம், ஈ.வெ.ரா. அண்ணா இருவருக்கும் பொதுவானவராகவே இருந்தார்.

விருதுகள்

கருணானந்தம் எழுதிய ‘பூக்காடு’ நூலுக்குத் தமிழக அரசின் பரிசு கிடைத்தது.

மறைவு

கருணானந்தம், செப்டம்பர் 27, 1989-ல் காலமானார்.

நாட்டுடைமை

தமிழக அரசு, 2007-ல் கருணானந்தத்தின் நூல்களை நாட்டுடைமை ஆக்கியது. கருணானந்தத்தின் நூல்கள் சில தமிழ் இணையக் கல்விக் கழக நூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன.

நினைவு

கருணானந்தத்தின் வாழ்க்கையை, ‘தன்மானக் கவிஞர் கருணானந்தம்’ என்ற தலைப்பில், டாக்டர் பா. வீரப்பன் எழுதினார். பூவழகி பதிப்பகம் இதனை வெளியிட்டது.

மதிப்பீடு

கருணானந்தம், திராவிட இயக்க எழுத்தாளர்களுள் ஒருவர். பிற திராவிட இயக்கப் படைப்பாளிகளைப் போன்றே கவிதை, கட்டுரை, நாடகம், இதழியல் போன்ற தளங்களில் செயல்பட்டார். திராவிட இயக்கக் கவிஞர்களில் அதிகம் கவிதைகள் எழுதியவராக கருணானந்தம் அறியப்படுகிறார்.

நூல்கள்

கவிதைத் தொகுப்புகள்
  • பூக்காடு
  • கனியமுது
  • சுமைதாங்கி
வாழ்க்கை வரலாறு
  • தந்தை பெரியார் (உரை நடை)
  • அண்ணா காவியம் (கவிதை நூல்)
கட்டுரை நூல்
  • அண்ணா – சில நினைவுகள்
மொழிபெயர்ப்பு
  • டாக்டர் கோவூரின் பகுத்தறிவுப் பாடங்கள்

உசாத்துணை


✅Finalised Page