கண்ணனூர் பாலசுப்பிரமணியர் கோவில்
To read the article in English: Kannanur Balasubramania Temple.
கண்ணனூர் பாலசுப்பிரமணியர் கோவில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகாவில் அமைந்துள்ள முற்கால சோழர் கோவில். இக்கோவில் முதலாம் ஆதித்ய சோழன் (பொ.யு. 871 - 907) காலத்தில் கட்டப்பட்டது.
ஆலய அறிமுகம்
கண்ணனூர் பாலசுப்பிரமணியர் கோவில் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகாவில் அமைந்துள்ளது. இக்கோவில் முதலாம் ஆதித்ய சோழன் (பொ.யு. 871 - 907) காலத்தில் கட்டப்பட்டது. தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
கோவிலின் மூலவராக சுப்பிரமணியர் சிற்பம் வழிபடப்படுகிறது. கோவிலின் ஆகம முறைகள், தலபுராணங்கள், இலக்கிய சான்றுகள் பற்றிய விவரங்கள் அறியக் கிடைப்பதில்லை.
இடம்
கண்ணனூர் பாலசுப்பிரமணியர் கோவில் புதுக்கோட்டை - திருமயம் சாலையில் உள்ள நமனசமுத்திரம் சந்திப்பில் இருந்து மேற்கே 17 கிலோமீட்டர் தொலைவிலும், திருமயத்தில் இருந்து வடமேற்கே 15 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள கண்ணனூர் என்ற ஊரில் அமைந்துள்ளது.
கோவில் வரலாறு, பெயர்
கண்ணனூர் பாலசுப்பிரமணியர் கோவில் பற்றிய முதன்மையான வரலாற்று செய்திகள் வரலாற்றாய்வாளர் எஸ்.ஆர். பாலசுப்ரமண்யம் எழுதிய 'Early Chola Art' என்ற நூலில் தொகுக்கப்பட்டுள்ளது[1]. இக்கோவிலில் காணப்பட்டும் கல்வெட்டுச் சான்றுகளைக் கொண்டு கோவில் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.
இக்கோவில் முதலாம் ஆதித்ய சோழன் (பொ.யு. 871 - 907) காலத்தில் கட்டப்பட்டு பின்னர் விரிவாக்கம் செய்யப்பட்டது.
முகமண்டபம், கோவிலின் மற்ற பகுதிகளிலிருந்து வேறுபட்டு காணப்படுவதால் இது பிற்காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என எஸ்.ஆர். பாலசுப்ரமண்யம் கருதுகிறார். முகமண்டபத்தில் காணப்படும் கல்வெட்டுகளை கொண்டு இது கட்டப்பட்ட காலம் மாறவர்ம சுந்தர பாண்டியனின் (பொ.யு. 1216 - 1238) ஆட்சி காலமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
எஸ்.ஆர். பாலசுப்ரமண்யம் அர்த்தமண்டப வாயிலில் உள்ள இரண்டு கல்வெட்டுகளை படித்து, அவற்றில் கோவிலின் மூலவர் பெயர் 'சுப்பிரமணிய தேவர்' என்று உள்ளதாக பதிவு செய்துள்ளார்.
கோவில் தெய்வங்கள்
மூலவர்
கோவிலின் மூலவரான சுப்பிரமணியர் சிற்பம் நின்ற நிலையில் சன்னவீரம் மற்றும் கரண்ட மகுடத்துடன் காணப்படுகிறது.
கருவறையை சுற்றியுள்ள கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி சிற்பம் காணப்படுகிறது.
மகாமண்டபம்
மகாமண்டபத்தில் பைரவர் சிலை கையில் திரிசூலம் ஏந்தி இடையில் நாகத்துடன் உள்ளது.
கோவில் கட்டிடக்கலை அமைப்பு
கண்ணனூர் பாலசுப்பிரமணியர் கோவில் முற்கால சோழர் கலை பாணியில் அமைந்துள்ளது. முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது.
இக்கோவில் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் மற்றும் முகமண்டபத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறை 3.81 மீட்டர் பக்க அளவு கொண்ட சதுர வடிவமாக உள்ளது. கருவறைக்கு மேல் வேசர பாணி விமானம் அமைந்துள்ளது. மையக் கட்டுமானத்தைச் சுற்றி கருங்கல் பதிக்கப்பட்ட தளம் உள்ளது.
கோவிலை சுற்றி திருச்சுற்று மதில் இல்லை.
மண்டபங்களில் உள்ள தூண்கள் சதுரம் மற்றும் கட்டுகளுடன் வெட்டு போதிகை கொண்டது.
அர்த்தமண்டபம்
அர்த்தமண்டபம் 2.44 மீட்டர் பக்க அளவு கொண்ட சதுர வடிவமாக உள்ளது. அர்த்தமண்டபத்தில் கருவறை வாயிலை ஒட்டி இரண்டு அரைதூண்களும் மண்டபத்தில் இரண்டு முழுத்தூண்களும் காணப்படுகின்றன. அர்த்தமண்டபமும் மகாமண்டபமும் இணையும் இடத்தில் தெற்கு பகுதியில் சிறிய நுழைவாயில் போன்ற ஒரு அமைப்பு உள்ளது.
மகாமண்டபம்
மகாமண்டபத்தின் கிழக்குப் பகுதியில் ஒரு கல் சாளரம் உள்ளது. மகாமண்டபத்தில் நான்கு முழு தூண்களும் நான்கு அரைத்தூண்களும் உள்ளன. போதிகையின் முகப்பு பகுதியின் மையத்தில் யானை உருவம் செதுக்கப்பட்டுள்ளது.
முகமண்டபம்
முன் பகுதியில் உள்ள சிறிய முகமண்டபத்தில் இரண்டு முழு தூண்களும் இரண்டு அரைத்தூண்களும் உள்ளன.
விமான அமைப்பு
அதிஷ்டானம் (அடித்தளம்), பாதவர்க்கம் (சுவர்ப்பகுதி), பிரஸ்தாரம் (கூரை), கிரீவம் (கழுத்து), சிகரம் மற்றும் கலசம் ஆகிய உறுப்புகளை கொண்டு ஏகதள (ஒருதள) விமானமாக அமைந்துள்ளது.
அதிஷ்டானம்
விமானத்தின் மொத்த கட்டுமானத்தையும் தாங்கும் அடித்தள அமைப்பான அதிஷ்டனமானது உபானம் (மண்ணில் புதைந்திருப்பதால் தெரியவில்லை), ஜகதி, குமுதம், பாதம் மற்றும் பட்டிகை போன்ற உறுப்புகளை கொண்டுள்ளது. பாதபந்த அதிஷ்டானமாக வகைப்படுத்தப்படுகிறது.
பாதவர்க்கம்
கருவறையின் அதிஷ்டானத்திற்கு மேல் உள்ள பாதவர்க்க பகுதியில் அரைத்தூண்களும் (குட்யஸ்தம்பம்) கோஷ்டங்களும் உள்ளன. அரைத்தூண்கள் கலசம், தாடி, ஆமலகம், பலகை மற்றும் இதழுடன் காணப்படுகின்றன.
மூன்று கோஷ்டங்களில் தெற்குப் பகுதி கோஷ்டத்தில் மட்டும் தட்சிணாமூர்த்தி சிற்பம் உள்ளது. மற்ற இரண்டு கோஷ்டங்களில் சிற்பங்கள் இல்லை.
தட்சிணாமூர்த்தி சிற்பம் இடது காலடியில் முயலகன் இருக்க வீராசனத்தில் அமர்ந்துள்ளது. முன்னிரு கைகள் அபய மற்றும் ஊரு ஹஸ்தமாக உள்ளன. இடது பின்கையில் மானும் வலது பின்கையில் நாகமும் காணப்படுகிறது.
பிரஸ்தாரம்
பிரஸ்தாரத்தின் வலபியில் பூதகணங்கள் இசைக்கருவிகளுடன் காணப்படுகின்றன. கபோதத்தில் இடைவெளி விட்டு கூடுகளும் ஓரப்பகுதியில் கோடிப்பாளை கருக்குகளும் உள்ளன. கபோதத்திற்கு மேல் உள்ள பகுதியில் யாளி வரிகள் காணப்படுகின்றன. கருக்குகளுக்கு கீழும் கபோதக்கூடுகளுக்கு இடதும் வலதும் தொடர்ந்து சந்திரமண்டலம் காட்டப்பட்டுள்ளது.
மேல்தளம்
மேல்தளத்தின் நான்கு திசைகளிலும் சுப்பிரமணியரின் வாகனமான யானைகள் உள்ளன. சுப்பிரமணியரின் வாகனம் மயிலாக இருந்தாலும் சங்க பாடல்களிலும் சில ஆகமங்கள் மற்றும் புராணங்களிலும் யானை வாகனமாக கூறப்பட்டுள்ளது. யானை சிற்பங்கள் அமைக்கப்பட்ட அரிதான சுப்பிரமணியர் கோயில்களில் இதுவும் ஒன்று.
கிரீவம்
வட்ட வடிவ வேதிகையை அடுத்துள்ள கிரீவப் பகுதியில் நான்கு கோஷ்டங்கள் உள்ளன. கோஷ்டங்களில் உள்ள சிலைகள் அடையாளப்படுத்த முடியாத அளவிற்கு சிதைந்துள்ளன. கிரீவத்திற்கு மேல் உள்ள வலபி பகுதியிலும் பூத வரிகள் காணப்படுகின்றன.
சிகரம், கலசம்
விமானத்தின் சிகரம் வட்ட வடிவம் கொண்ட வேசர சிகரம். நான்கு கிரீவ கோஷ்டங்களின் மேல் பகுதியிலும் தோரண வளைவுகள் உள்ளன. சிகரத்தின் மேற்பகுதியில் பத்ம வரிகள் காணப்படுகின்றன. அதற்கும் மேல் உள்ள கல்லாலான கலசத்திலும் பத்ம வரிகள் காட்டப்பட்டுள்ளன.
சிற்பங்கள் பட்டியல்
கண்ணனூர் பாலசுப்பிரமணியர் கோவிலில் மூலவர் சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, பைரவர், யானை ஆகிய சிற்பங்கள் உள்ளன.
கல்வெட்டுகள்
கண்ணனூர் பாலசுப்பிரமணியர் கோவிலில் சோழர்களின் காலத்தை சேர்ந்த 2 கல்வெட்டுகளும் பாண்டியர்களின் காலத்தை சேர்ந்த 9 கல்வெட்டுகளும் உள்ளன. அனைத்துமே தமிழ் கல்வெட்டுகள்.
சோழர் கால கல்வெட்டுகள்
- அர்த்தமண்டப சுவற்றில் காணப்படும் 'கோவி ராஜகேசரி வர்மருக்கு' என்று தொடங்கும் கல்வெட்டு எஸ்.ஆர். பாலசுப்பிரமணியனால் கண்டறியப்பட்டது. எழுத்தமைதியை கொண்டு இக்கல்வெட்டு குறிப்பிடும் 'ராஜகேசரி' முதலாம் ஆதித்ய சோழன் (பொ.யு. 871 - 907) என்றும் இக்கோயில் அவனுடைய ஆட்சி காலத்தில் எழுப்பப்பட்டது என்று விளங்குகிறது. கல்வெட்டில் காணப்படும் முக்கிய குறிப்புகள்: கோவி ராஜகேசரி பன்மர், சுப்பிரமணிய தேவர், திருநந்தா விளக்கு.[2]
பாண்டியர் கால கல்வெட்டுகள்
- முகமண்டபத்தின் வெளிப்புற சுவரில் பாண்டியர்களின் காலத்தை சேர்ந்த ஒன்பது கல்வெட்டுகள் உள்ளன. இவற்றுள் பழமையானது வடப்புற சுவரில் காணப்படும் மாறவர்ம சுந்தர பாண்டியனின் (பொ.யு. 1216 - 1238) மூன்றாம் ஆட்சியாண்டு (பொ.யு. 1219) கல்வெட்டு. 28 வரிகள் கொண்ட இக்கல்வெட்டு 'பூ மருவிய திருமடந்தையும்' என்ற சுந்தர பாண்டியனின் மெய்கீர்த்தியுடன் தொடங்குகிறது. பிள்ளையார் அழகப்பெருமாள் என்பவரின் வேண்டுகோளுக்கு இணங்க, அஞ்சனமங்கலம் மற்றும் திருநாவலூர் ஆகிய ஊர்களுக்கு உலகுடைய நாயனார் (சுந்தர பாண்டியன்) வரிக்குறைப்பு செய்ததை பற்றி இக்கல்வெட்டு கூறுகிறது. ஸ்வஸ்தி ஸ்ரீ என்னும் மங்கலச் சொல்லுடன் துவங்கி அதே மங்கலச் சொல்லுடன் முடிவடைகிறது. கல்வெட்டின் இறுதியில் கல்வெட்டை வெட்டியவர் பெயர் அவனி நாரயணதேவன் என்று குறிப்பு உள்ளது.[3]
- கல்வெட்டில் காணப்படும் முக்கிய குறிப்புகள்:
கொளந்த சினப்புலியும், கொடும் சிலையும், வாளார்ந்த பொற்கிரிமேல் வரிக்கயல்கள் விளையாட, மூவகை தமிழ், நால்வகை வேதம், ஐய்வகை வேள்வி, அறுவகை சமயம், எழுவகை பாடல், எண்டிசை, கொங்கர், கலிங்கர், கோசலர், மாளுவர், சிங்களர், தெலிங்கர், சினர், குச்சரர், வில்லவர், மகதர், விக்கலர், செம்மியர், பல்லவர், இந்திரன் பூட்டிய பொலங்கதிர் ஆரம் மார்பில் பொலிய, மனுநெறி தழைப்ப மணிமுடி சூடி, திரிபுவனசக்கரவர்த்திகள் சோணாடு கொண்டருளிய ஸ்ரீ சுந்தரபாண்டிய, திருமுகம், விருத ராஜ பயங்கர வளநாடு, திருநாவலூர், அனுமன் தாயான அஞ்சனமங்கலம், உலகுடைய நாயனார் திருமேனிக்கு நன்றாக இலேசு பெற வேணுமென்று, நானாழி நெல்லிருப்ப, நீரிலி நிலம், நவிரை, வரகு, எள்ளுந்திணையும்.
தொடர்புடைய ஆளுமைகள்
- கண்ணனூர் பாலசுப்பிரமணியர் கோவில் கல்வெட்டுகளின் வாயிலாக கோவிலைக் கட்டி திருப்பணிகள் செய்த ஆளுமைகளாக முதலாம் ஆதித்ய சோழனும், மாறவர்ம சுந்தர பாண்டியனும் அறியப்படுகின்றனர்.
- கண்ணனூர் பாலசுப்பிரமணியர் கோவில் பற்றி நவீன காலகட்டத்தில் வரலாற்றாய்வுகளை தொகுத்தவர் எஸ்.ஆர். பாலசுப்ரமண்யம்.
உசாத்துணை
- Early Chola Art by S.R. Balasubrahmanyam - Page 86 to 89
- Inscriptions in the Pudukkottai State by K.R. Srinivasa Ayyar - Inscription No: 250
- Inscriptions (Texts) of the Pudukottai State by the Commissioner of Museums - Inscription No: 250
அடிக்குறிப்புகள்
- ↑ Early Chola Art by S.R. Balasubrahmanyam - Page 86 to 89
- ↑ இது புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டு தொகுதியில் பதிப்பிக்கப்படாத கல்வெட்டு. எஸ்.ஆர். பாலசுப்ரமண்யம் இக்கல்வெட்டை படித்து பதிவு செய்துள்ளார். பார்க்க: Early Chola Art by S.R. Balasubrahmanyam - Page 86, 87
- ↑ புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டு தொகுதியில் (Inscriptions (Texts) of the Pudukottai State Published by Authority) கல்வெட்டு எண்: 250, பக்க எண்: 139
வெளி இணைப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-Nov-2024, 11:46:29 IST