கண்டராதித்தர்
கண்டராதித்தர் (சிவஞானகண்டராதித்தர், ராஜகேசரி, மேற்கு எழுந்தருளியதேவர்) (பொ.யு. 10-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர், பிற்கால சோழ அரசர். பராந்தக சோழனின் மகன். ஒன்பதாவது திருமுறையான திருவிசைப்பாவைப் பாடிய ஒன்பது ஆசிரியர்களில் ஒருவர்.
வரலாறு
கண்டராதித்தர் பொ.யு. 950 - 957 காலத்தில் சோழப் பேரரசை ஆண்டவர். இவரின் தந்தை பராந்தகசோழன். தாய் வைரமேக வாணகோவரையரின் மகள் செம்பியன் மாதேவி. வேறு பெயர்கள் சிவஞானகண்டராதித்தர், மேற்கு எழுந்தருளியதேவர். கண்டராதித்தர் உறையூரிலும், தஞ்சையிலும் இருந்து அரசாண்டார். சிவபெருமானை வணங்கினார். சோழப்பேரரசில் சைவ நன்னெறியை வளர்த்து, சிவாலயங்கள் அமைத்து, திருப்பணி செய்து, இறைவனுக்குப் பணிவிடை செய்து வந்தார். வைணவம் மற்றும் பிற மதங்களையும் போற்றினார். விஷ்ணுவுக்குக் 'கண்டராதித்த விண்ணகரம்' என்ற கோயிலைக் கட்டியுள்ளார். கண்டராதித்தப் பெரும்பள்ளி எனும் சமண ஆலயத்தை, பள்ளிச்சந்தம் எனும் ஊரிலும் தோற்றுவித்தார்.
இலக்கிய வாழ்க்கை
கண்டராதித்தர் சிவபெருமான் எழுத்தருளியுள்ள பல ஊர்களுக்குச் சென்று ஒவ்வொரு ஊரிலும் கோவில் கொண்ட சிவனுக்கு ஒவ்வெரு பதிகம் பாடினார். அவைகளில் தில்லைக்குரிய ஒரு பதிகம் தவிர மற்றவையெல்லாம் அழித்துபோனதாகச் சொல்லப்படுகிறது.
ஒன்பதாவது திருமுறையான திருவிசைப்பாவைப் பாடிய ஒன்பது ஆசிரியர்களில் கண்டராதித்தரும் ஒருவர். அவரது பனுவல்கள் திருவிசைப்பாவில் நான்காவது தொகுப்பாக அமைகிறது. இது தில்லைக் கூத்தப்பிரானைப் பற்றி பாடப்பட்டது. அப்பதிகத்தின் எட்டாம் திருப்பாடலில் தம் முன்னோர் சிறப்பியல்புகளையும், திருக்கடைக்காப்புச் செய்யுளில் தம்மைக் கோழிவேந்தன் (கோழி - உறையூர்) தஞ்சையர்கோன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இறுதிக்காலம்
கண்டராதித்தர் தனது வாழ்க்கையின் பிற்பகுதியில் தன் தம்பி அரிஞ்சய சோழனிடம் அரசுப் பொறுப்பை விடுத்துத் தம்மை முழுவதுமாக, சைவப்பணிக்காக அர்ப்பணித்துக் கொண்டார். கல்வெட்டுகளில் ஒன்று கண்டராதித்தரை 'மேற்கெழுந்தருளிய தேவர்' எனக் குறிக்கிறது. அரச சிம்மாசனத்தைத் துறந்து பாரதத்தின் மேற்குப் பகுதிகளுக்குத் தலயாத்திரை சென்றார் என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம் என அறிஞர்கள் கருதினர்.
நினைவு
- திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே கொள்ளிடத்திற்கு வடகீழ்ப் பகுதியில் கீழ் மழநாட்டின் தலைநகரான திருமழபாடிக்கு மேற்கே ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊர் ஒன்று கண்டராதித்த சதுர்வேதிமங்கலம் என்ற பெயரால் வழங்கப்பட்டது.
- தென் ஆர்க்காடு மாவட்டம் உலகபுரத்தில் 'கண்டராதித்தப் பேரேரி' எனும் ஏரி ஒன்றினையும் தோற்றுவித்தார்.
எழுதிய நூல்கள்
- திருவிசைப்பா
இவரைப் பற்றிய நூல்கள்
- கண்டன் கோவை (ஒட்டக்கூத்தர் )
- கண்டன் அலங்காரம் (ஒட்டக்கூத்தர் )
உசாத்துணை
- தமிழ்ப்புலவர் வரலாற்றுக் களஞ்சியம் - பகுதி 2 - வெ.பழனியப்பன்,உ.பழநி - அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
- கண்டராதித்தர் வரலாறு - shaivam
- "கண்டராதித்த சோழர் பிறப்பு, தி.மலை வரலாற்றின் புதிய பக்கங்கள்!"- அரிய கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு - vikatan
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-May-2025, 11:19:22 IST