under review

கணேசர் தமிழ்ப்பள்ளி

From Tamil Wiki
கணேசர் தமிழ்ப்பள்ளிச்சின்னம்

கணேசர் தமிழ்ப்பள்ளி மலேசியாவில் கெடா மாநிலத்தின் செர்டாங் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இப்பள்ளியின் பதிவு எண் KBD 1026. கணேசர் தமிழ்ப்பள்ளி அரசாங்க முழு உதவி பெறும் பள்ளி.

வரலாறு

கணேசர் தமிழ்ப்பள்ளி ஆகஸ்ட் 1, 1948-ல் தொடங்கப்பட்டது. A. K. வீரம்மன் என்பவரின் தலைமையில் செர்டாங் மக்களின் முயற்சியில் கணேசர் தமிழ்ப்பள்ளி உருவாகியது. தொடக்கத்தில் அத்தாப்புக்கூரை(ஒருவகை ஓலைக்கூரை) வேய்ந்த பள்ளியாக இருந்த கணேசர் தமிழ்ப்பள்ளியில் நாற்பது மாணவர்கள் பயின்று வந்தனர்.

புதிய கட்டிடம்

பள்ளி முகப்புக்கட்டிடம்

கணேசர் தமிழ்ப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்ததால் பள்ளி நிர்வாகத்தினர் நவம்பர் 18, 1955 -ல் பலகையிலான கட்டிடத்தை எழுப்பினர். இக்காலக்கட்டத்தில் அரசாங்கம் பள்ளி நிர்வாகப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டது. பள்ளியின் பெயர் தேசிய மாதிரி ஆரம்ப கணேசர் தமிழ்ப்பள்ளி என மாற்றங்கண்டது. அருகிலிருந்த பள்ளிகளிலிருந்து 4, 5, 6-ம் வகுப்பு மாணவர்கள் இப்பள்ளியில் கல்வி பயில அனுமதிக்கப்பட்டனர்.

இணைக்கட்டிடம்

சுற்றுவட்டாரத் தோட்டங்களில் பணிபுரியும் இந்தியர்களின் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் பள்ளியில் மாணவர் எண்ணிக்கையும் கூடியது. பள்ளி வாரிய செயலவை உறுப்பினர்களின் முயற்சியால் 1966 -ல் மூன்று வகுப்பறைகளோடு புதிய இணைக்கட்டிடம் எழுப்பப்பட்டது. பெருநிலக்கிழார் என். டி. எஸ் ஆறுமுகம் பிள்ளையின் உதவியால் மேலுமொரு வகுப்பறை அமைந்தது. இக்கட்டிடத்தை ஜூன் 16, 1966 -ல் கெடா மாநில முதலமைச்சர் டத்தோ ஷேய்ட் ஓமார் அல்ஹஜி அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

பள்ளிக்கட்டிடம்

தொடர்ந்து மாணவர் எண்ணிக்கை அதிகரித்ததால் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் புதிய இரண்டு மாடிக்கட்டிடம் வேண்டுமென கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து 1988-ல் கல்வியமைச்சு இரண்டு மாடிக் கட்டிடத்திற்கு அனுமதி வழங்கியது. இக்கட்டிடம் டிசம்பர் 29, 1990-ல் கட்டி முடிக்கப்பட்டது. இப்புதிய கட்டிடத்தை ஏப்ரல் 24, 1991-ல் உள்ளூர் வர்த்தகம் மற்றும் பயனீட்டாளர் விவகாரத்துறைத் துணையமைச்சர் டத்தோ ஹாஜி அப்துல் காதீர் திறப்புவிழா செய்தார். இக்காலக்கட்டத்தில் கணேசர் தமிழ்ப்பள்ளி 270 மாணவர்கள், 14 ஆசிரியர்கள், 2 பள்ளிப் பணியாளர்களுடன் செயல்பட்டது. மாணவர் எண்ணிக்கை கூடியதால் புதிய சிற்றுண்டிச்சாலை கட்டப்பட்டது. இதனை ம. இ. காவின் தேசியத் தலைவரான துன் ச. சாமிவேலு பிப்ரவரி 21, 1997-ல் திறந்து வைத்தார்.

பாலர் பள்ளி

2012 -ஆம் ஆண்டு கணேசர் தமிழ்ப்பள்ளியில் பாலர் பள்ளிக்கான புதிய கட்டிடம் அரசாங்க உதவியில் அமைக்கப்பட்டது. இப்பாலர் பள்ளி அனைத்து வசதிகளுடன் 25 மாணவர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது.

தலைமையாசிரியர் பட்டியல்

எண் பெயர் ஆண்டு
1. வேலாயுதம் ஆகஸ்ட் 1,1948 - 1954
2. நாராயணன் 1955 - 1961
3. இராஜகோபால் 1962 - 1973
4. இராமகிருஷ்ணன் 1974 - 1977
5. T. சுப்ரமணியம் 1978 - 1981
6. S. கோபாலகிருஷ்ணன் ராவ் 1982 - 1985
7. கோபாலு ராமன் 1985 – 1995
8. அண்ணாமலை 1995 – 1999
9. சுப்ரமணியம் 1999 -2002
10. நாகலிங்கம் 2002
11. பேபி பூங்காவனம் 2002 - 2003
12. மஜியப்பன் நாராயணன் 2003 - 2005
13. யவனராணி பெருமாள் 2006 - 2011
14. உதயகுமாரி ஜகநாதன் 2012 - 2014
15. முனுசாமி செங்கோடன் 2014 - 2017
16. சௌந்தரபாண்டியன் கோபால் 2017 - 2018
17. முனுசாமி செங்கோடன் 2019 - 2022
18. மல்லிகா செல்லதுரை 2022 - தற்போது வரை

உசாத்துணை

மலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்க்கல்வியின் மேம்புகழ், 2016 , மலேசியக்கல்வி அமைச்சு வெளியீடு


✅Finalised Page