under review

கணியான் தோற்றக் கதை

From Tamil Wiki

கணியான் தோற்றக் கதை நாட்டார் வழக்காற்றில் உள்ள கதைப்பாடல்களுள் ஒன்று. கணியான் இனத்தவரின் தோற்றம் குறித்த வாய்மொழி கதைப்பாடல் இது. இது நாட்டார் கோவில் திருவிழாக்களில் பாடப்படுகிறது.

பார்க்க: கணியான் கூத்து

கதை

சுடலைமாடன் ஏடு கதை

சிவன் பார்வதியை பாதாள உலகத்திலிருந்து கவர்ந்து சென்ற பின் தட்சராஜன் உலகம் முழுவதையும் தன் கொடைக்கீழ் கொண்டுவர விரும்பினான். அதற்காக யாகம் ஒன்றை செய்தான். அதில் கிடைத்த அவிர்பாகத்தை சிவனுக்கு கொடுக்கக் கூடாது என முனிவர்களுக்கு கட்டளையிட்டான். இதனையறிந்து கோபமுற்ற சிவன் தன் நெற்றிக்கண்ணை திறந்து அதிலிருந்து வீரப்பத்திரனை பிறக்கச் செய்தார். உடன் பத்ரகாளியும் பிறந்தாள். சிவன் நெற்றிக் கண்ணை திறந்த உஷ்ணத்தால் பார்வதி உடல் வியர்த்த போது அதிலிருந்து பேய்ப்படைகள் தோன்றின. அனைவருமாக சென்று தட்சனின் யாகத்தை அழித்தனர். வீரபத்ரன் தட்சனின் தலையை வெட்டினான்.

பார்வதி சிவனைப் பணிந்து தன் தந்தைக்கு உயிர் கொடுக்கும் படி வேண்டினாள். சிவன் அருகிலிருந்த ஆட்டின் தலையை எடுத்து தட்சனின் தலையில் பொருத்தி அவரை உயிர் பெறச் செய்தார். உயிர் பெற்ற தட்சன் தனக்கு தவம் செய்யும் வல்லமை வேண்டும் என சிவனிடம் கேட்டான். சிவன் “ஒரு யாகம் வளர்த்து அதில் சுடலைமாடன், பிரம்மராக்கு, சக்தியை உயிர் பெற செய்து கயிலாத்துக்கு கொண்டு வந்தால் வேண்டும் வரம் கிட்டும்” என்றார்.

சிவன் சொல் கேட்டு தட்சன் யாகம் ஒன்றை நிகழ்த்தினான். அதிலிருந்து முதலில் பிரம்மராக்கு பிறந்து வந்தாள். இரண்டாவது சுடலை மாடன் பிறந்தான். ஆனால் சுடலை மாடன் யாகத்திலிருந்து வர மறுத்தான். தனக்கு பெரிய பூசை படையல் வேண்டும் என தட்சனிடம் சொன்னான். சுடலைமாடன் தனக்கு வேண்டியதை தட்சனிடம் பாட்டாகப் பாடிக் கேட்டான். அதன் இறுதியில் மகுட சத்தத்துடன் நாக்கு வெட்டி பேய் முகத்துடன் இருக்கும் கணியான் வந்தால் தான் நான் வருவேன் என்றான்.

கணியானை பிறப்பிக்க வேண்டி தட்சனும், பிற தேவர்களும் சிவனிடம் வந்தனர். சிவன் அவர்களின் வேண்டுதலுக்கு பணிந்து ‘தேவலோகத்து அரம்பையர் ஏழு பேர் இந்திராணியின் தலைமையில் என் முன்னே வந்து ஆடட்டும். அப்போது கணியான் பிறப்பான்’ என்றார். சிவன் சொல்படி இந்திராணியின் தலைமையில் அரம்பையர்கள் வந்தாட கணியான் பிறந்து வந்தான். சிவன் கணியானுக்கு ஆடும் வித்தையை கற்றுக் கொடுத்தார். அவனுக்கு மகுடம் அடிக்கும் முறையை நந்தி தேவர் கற்றுக் கொடுத்தார்.

இவ்வாறாக கணியான் பிறப்பு பற்றியும், சிவன் ஆடும் முறை கற்பித்ததும் சுடலை மாடன் கதை ஏட்டில் பாடப்பட்டுள்ளது. கணியானை ‘தெய்வ கணியான்’ என்று ஏட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாய்மொழிக் கதை

கணியான் தோற்றம் குறித்து வாய்மொழி பாடல் வேறு விதமாக பாடுகிறது. சிவனுக்கும், பிரம்மாவிற்கும் ஏற்பட்ட சண்டையில் சிவன் பிரம்மாவின் தலையைக் கொய்தார். இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டானது. பிரம்மாவின் தலை சிவனின் வலது கையில் வந்து ஒட்டிக் கொண்டது. சிவன் கையிலுள்ள தலை எனக்கு ரத்தம் வேண்டும் என்றது. சிவன் பித்தனானார். பித்தம் தணியாத சிவன் எப்போதும் ஆடிக் கொண்டே இருந்தார். அவருடன் சேர்ந்து பார்வதியும் ஆடினாள். அப்போது பார்வதியின் சிலம்பின் பரல் தெறித்து இரண்டு குழந்தைகளாகப் பிறந்தன. அந்த குழந்தைகளை சப்தரிஷிகள் வளர்த்தனர்.

சிவனின் பித்தம் தெளியாததால் பார்வதி விஷ்ணுவிடம் வேண்டினாள். விஷ்ணு பிரம்ம கபாலத்தில் ரத்தம் நிரம்பி வழிந்தால் சிவனின் பித்தம் தணியும் என்றார். அதற்கு சப்தரிஷிகளின் வீட்டில் வாழும் இரண்டு குழந்தைகளும் வேண்டும் என்றார். விஷ்ணுவே நேரில் சென்று அவர்களை அழைத்து வந்தார். விஷ்ணுவின் அழைப்பை ஏற்று ஒருவன் முன் வந்தான். விஷ்ணு அவனை சிவன் முன் ஆடும் படி வேண்டினார். கணியானும் பேய் முகத்தைக் கட்டிக் கொண்டு தன் முழங்கையை வெட்டி ஆடினான். கபாலத்தில் வழிந்த ரத்தம் அதனை நிறைத்தது. பிரம்மாவின் தலை சிவனின் கைவிட்டு அகன்றது. சிவன் பித்தம் தெளிந்தார்.

தோஷம் தெளிந்த சிவன் தன் தலையிலிருந்த கிரிடத்தை எடுத்து மகுடமாக்கி கணியானிடம் கொடுத்து வாசிக்கும் படி சொன்னார். அதே போல் கணியான் ஆடியும், பாடியும், மகுடம் இசைத்தும் வந்தான். சிவன் ”இனி கணியானே நீ சுடலையில் பாடு” என வரம் கொடுத்ததாக வாய்மொழி கதைப்பாட்டு ஒன்றுள்ளது.

உசாத்துணை

  • சடங்கில் கரைந்த கலைகள், அ.கா. பெருமாள், காலச்சுவடு வெளியீடு
  • தமிழக நாட்டார் நிகழ்த்துக் கலைகள் களஞ்சியம் - அ.கா.பெருமாள்

வெளி இணைப்புகள்


✅Finalised Page