கணக்கதிகாரம்
கணக்கதிகாரம்(பொ.யு. 15-ம் நூற்றாண்டு) தமிழில் எழுதப்பட்ட கணித நூல்.
பதிப்பு, வெளியீடு
15-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கணக்கதிகாரம் முதன் முதலில் 1854-ல் தஞ்சையில் பதிப்பிக்கப்பட்டது. 1872-ல் சண்முக முதலியார் மேற்பார்வையில் புரசைவாக்கம் ஏழுமலைப்பிள்ளையுடைய "விவேக விளக்கு' அச்சகத்திலிருந்து அச்சுப்பதிப்பாக வெளிவந்துள்ளது. பிழைமலிந்த இப்பதிப்பு திருத்தப்பட்டு 1899, 1938, வெவ்வேறு பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. 1958-ல் சைவ சித்தாந்தக் கழகம் ஒரு பதிப்பை வெளியிட்டது.
ஆசிரியர்
கணக்கதிகாரம் நூலை எழுதியவர் காரி நாயனார். சோழ நாட்டில் கொறுக்கையூர் என்னும் ஊரைச் சேர்ந்தவர். மன்னர் வழி வந்த இவரின் தந்தை பெயர் புத்தன்.
கொறுக்கையர் கோமான் புத்தன் புதல்வன் காரி"
"பொன்னி நாட்டு பொருந்திய புகழோன்...
புத்தன் புதல்வன் கறியென்பவனே.
என்று இந்நூலின் சிறப்புப் பாயிரம் சொல்கிறது.
நூல் அமைப்பு
கணக்கதிகாரம் வெண்பா, கட்டளைக்கலித்துறை மற்றும் நூற்பாக்களால் ஆனது. இந்நூலில் ஆறு பிரிவுகளில் 64 வெண்பாக்களும், 45 புதிர் கணக்குகளும் உள்ளன. நிலம் வழி (23 பாக்கள்), பொன் வழி (20 பாக்கள்), நெல் வழி (6 பாக்கள்), அரிசி வழி (2 பாக்கள்), கால் வழி (3 பாக்கள்), கல் வழி (1 பா), பொது வழி (5 பாக்கள்) என்ற ஆறுவழிக் கணக்குகளையும் புலவர் அறுபது செய்யுள்களால் உணர்த்தினார் என்பதை:
ஆதி நிலம்பொன் நெல்லரிசி அகலிடத்து
நீதி தருங் காலத்து ! நேரிழையாய் - யோத
மறுவதுவா கச்சமைத்தேன் னொன்றொழியா வண்ணம்
அறுபது காதைக்கே அடைத்து
என்ற பாடல்மூலம் அறியலாம். பாடல்கள் மகடூஉமுன்னிலையில் அமைந்தன. பாடல்களும் அவற்றிற்குரிய உரையும் அமைந்து காணப்படுகிறது. உரைநடையிலமைந்த கணக்குகளும் இடயிடையே காணப்படுகின்றன
- தமிழ் முழு எண்களின் பெயர்கள்
- தமிழ் பின்ன எண்களின் பெயர்கள்;
- பொழுதுபோக்கு
- மாயசதுர கணக்குகள் - எப்படிக் கூட்டினாலும் ஒரே விடை
- வினா-விடைக் கணக்குகள்
- புதிர் கணக்குகள்
- பூமியின் அளவு, நிலத்தின் அளவு, நீர் அளவு, சூரியன்-சந்திரன் இடையேயான தொலைவு, மலையின் அளவு
- சூத்திரக் கணக்குகள்: ஒரு படி நெல்லில் எத்தனை நெல் இருக்கும்; ஒரு பலாப்பழத்தில் எத்தனை பலாச்சுளை இருக்கும்; ஒரு பரங்கிக்காயில் எத்தனை விதைகள் இருக்கும்.
பாடல் நடை
பின்ன அளவைகள்
தாயிருபத் தொன்பது தந்தை யிருபத்தேழு தனிவருக்கம்
இருபத்தி மூன்று பாயல் மூத்தொகை பத்தொன்பது
பதினேழு பந்தம் பதினஞ்சு சின்னமாய் குணமும் மூன்று
சிந்தைபதி மூன்று மும்மி பதினொன்று பாகம் நாலு
அணி வெளிம்மி இருபத் தொன்றே(3)
- 47 கொண்டது புற்புதம்
- புற்புதம் 41 கொண்டது புணரி
- புணரி 37 கொண்டது பற்பம்
- பற்பம் 33 கொண்டது பனிச்சங்கம்
- பனிச்சங்கம் 31 கொண்டது தாய்
- தாய் 29 கொண்டது தந்தை
- தந்தை 27 கொண்டது தனி வருக்கம்
- தனி வருக்கம் 23 கொண்டது முத்தொகை
- முத் தொகை 19 கொண்டது பந்தம்
- பந்தம் 17 கொண்டது சின்னம்
- சின்னம் 15 கொண்டது குணம்
- குணம் 3 கொண்டது சிந்தை
- சிந்தை 13 கொண்டது மும்மி
- மும்மி 11 கொண்டது இம்மி
- இம்மி 21 கொண்டது அணு
கால அளவை
நிமைநொடி மாத்திரை நிச்சவித் தன்னை
இமைகுரு பற்றும் உயிரென்றார்-அனைய உயிர்
ஆறு சணீகமீரா றாகும் வினாடிதான்
அறுபத்தே நாழிகை யாம்
வட்டத்தில் விட்டமும் சுற்றளவும்
மூன்றொரு நாலு விட்டத்தால் பெருக்க மூன்றில்
தோன்றிய கடை கோல்கள் சுற்றத்து வட்ட மாமே
ஆற்றவச் சுற்றந் தன்னை ஆறுமா காணிக் கீய
என்றவத் துகைகள் தானே விட்டமென்றெண்ணி னாரே(63)
உசாத்துணை
கணக்கதிகாரம், ஆர்கைவ் வலைத்தளம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-May-2025, 12:59:30 IST