under review

கடைமுடிநாதர் கோயில்

From Tamil Wiki
கடைமுடிநாதர் கோயில்
கடைமுடிநாதர் கோயில்

கடைமுடிநாதர் கோயில் (திருக்கடைமுடி) (கடைமுடி ஈஸ்வரர் கோயில்) கீழையூரில் அமைந்த தேவாரப் பாடல் பெற்ற தலம். இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

இடம்

மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் வழியில் பதினெட்டு கிலோமீட்டர் தொலைவில் திருக்கடைமுடி அமைந்துள்ளது. சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து மாற்றுப்பாதையில் சென்று இரண்டு கிலோமீட்டரில் இந்தக் கோயிலை அடையலாம். செம்பனார் கோயிலில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் கடைமுடி உள்ளது.

பெயர்க்காரணம்

இக்கோயிலின் ஸ்தல விருக்ஷம் கிளுவை மரம் என்பதால் இத்தலம் கிளுவாய் ஊர் என்று பெயர் பெற்றது. இது பின்னர் கீழயூர்/கீழூர் என பெயர் மாற்றம் அடைந்தது. இந்த இடம் முன்பு ஏழு குக்கிராமங்களால் ஆனது என்பதால், இது எழூர் என்றும் அழைக்கப்பட்டது. காவிரி ஆறு இறுதியாக வங்காள விரிகுடாவில் கலக்கும் இடம் இது என்பதால் கடைமுடி என்று அழைக்கப்பட்டது.

கல்வெட்டு

இக்கோயிலில் விக்ரமசோழன், முதலாம் பராந்தக சோழன் மற்றும் பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் காலத்து கல்வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுகளில் சிவபெருமான் ஸ்ரீதிருச்சடைமுடி உடைய மகாதேவர் என்று குறிப்பிடப்பட்டார்.

கடைமுடிநாதர் கோயில்

தொன்மம்

ஸ்தல புராணத்தின் படி இங்குள்ள சிவபெருமான் கடைமுடிநாதர் என்று அழைக்கப்பட்டார். இதை "காலம் வரை காக்கும் இறைவன்" என்று மொழிபெயர்க்கலாம்.

பிரம்மன்

பிரம்மா அதீத கர்வத்தாலும் ஆணவத்தாலும் சாபம் பெற்றதாக நம்பப்படுகிறது. நிவாரணம் பெற இக்கோயில் உட்பட பல இடங்களில் சிவபெருமானை வழிபட்டார். பிரம்மா இங்கு ஒரு குளத்தை உருவாக்கி அந்த நீரில் இருந்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டார். அவரது வழிபாட்டால் மகிழ்ந்த சிவபெருமான் இக்கோயிலின் ஸ்தல விருட்சமான கிளுவை மரத்தின் கீழ் பிரம்மாவுக்கு தரிசனம் அளித்ததாக நம்பப்படுகிறது. பிரம்மாவும் கடைசியில் சாபத்திலிருந்து விடுபட்டார். இவரால் உருவாக்கப்பட்ட தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என்றும், இங்குள்ள சிவபெருமான் கிளுவைநாதர் என்றும், ஆதிநாதர் என்றும் அழைக்கப்பட்டார்.

கண்வ மகரிஷி

முனிவர் கண்வ மகரிஷி காவிரி ஆற்றில் புனித நீராடி இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு பின்னர் முக்தி அடைந்ததாக நம்பிக்கை உள்ளது. அவர் குளித்த படித்துறை "கண்வ மகான் துறை" என்று அழைக்கப்பட்டது.

கோயில் பற்றி

  • மூலவர்: கடைமுடி ஈஸ்வரர், கடைமுடிநாதர், அந்தசம்ரக்ஷணேஸ்வரர்
  • அம்பாள்: அபிராமவல்லி
  • தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், காவேரி, கருணா தீர்த்தம்
  • ஸ்தல விருட்சம்: கிளுவை மரம்
  • பதிகம் வழங்கியவர்: திருஞானசம்பந்தர்
  • இருநூற்று எழுபத்தியாறாவது தேவாரம் பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் இதுவும் ஒன்று. * பதினெட்டாவது சிவஸ்தலம்.
  • இக்கோயிலில் உள்ள சிவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளார்.
  • கடைசியாக கும்பாபிஷேகம் செப்டம்பர் 15, 2000 அன்று நடந்தது.
கடைமுடிநாதர் கோயில்

கோயில் அமைப்பு

மேற்கு நோக்கிய இக்கோயிலுக்கு ஒற்றை நடைபாதை உள்ளது. அதற்கு முக்கிய கோபுரம் இல்லை. அதன் இடத்தில் ஒரு அழகான வளைவு உள்ளது. இங்கு கொடிமரம் இல்லை. சிவன் மற்றும் பார்வதி தேவியின் சன்னதிகள் உள்ளன.

சிற்பங்கள்

விநாயகர்(கடைமுடி விநாயகர்), முருகன், அவரது துணைவியர்கள், நடராஜர், சூரியன், பைரவர், தேவார மூவர், நவக்கிரக சன்னதிகள் ஆகியவை மண்டபம் மற்றும் மாடவீதிகளில் காணப்படுகின்றன. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, சண்டிகேஸ்வரர் சிலைகள் உள்ளன. சிவபெருமானின் பழமையான சிலை கிளுவாய்நாதர் என்று அழைக்கப்படுகிறது. இது ஸ்தல விருட்சஷத்தின் கீழ் உள்ளது.

சிறப்புகள்

  • முக்கிய சிவலிங்கம் பதினாறு பட்டைகளால் ஆனது. இதன் பெயர் "சோடச லிங்கம்". இந்து புராணங்களின்படி செல்வங்கள் 16 வகை. எனவே இந்த லிங்கத்தை வழிபடுபவர்களுக்கு செல்வமும் செழிப்பும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
  • இந்த இடத்தில் காவிரி ஆறு வடக்கிலிருந்து மேற்கு நோக்கி தன் திசையை மாற்றுகிறது. இங்குள்ள ஆற்றில் நீராடுவது மிகவும் புண்ணியமாக கருதப்படுகிறது.
  • இக்கோயிலில் நவக்கிரகங்கள் வழக்கத்திலிருந்து மாறுபட்டு வலதுபுறம் திரும்பிய எண்கோண வடிவுள்ள ஆவுடையாரின் மேல் (நேர்வரிசையில் இல்லாமல்) முன்பின்னாக அமைந்துள்ளன.
  • தட்சிணாமூர்த்தி மற்றும் பைரவர் ஆகிய இருவரின் சிலைகளுக்கும் ஒரு காதில் மட்டும் காதணி உள்ளது.
  • இங்குள்ள இறைவனை வழிபட்டால் திருமண தடைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
  • திருமணமான பெண்கள் மனவாழ்க்கை வளம் பெற இங்குள்ள இறைவனை வழிபடலாம்

திறந்திருக்கும் நேரம்

  • காலை 6-12
  • மாலை 4-8

விழாக்கள்

  • ஆவணியில்விநாயகர் சதுர்த்தி
  • ஐப்பசியில் அன்னாபிஷேகம்
  • கார்த்திகையில் திருகார்த்திகை
  • மார்கழியில் திருவாதிரை
  • தையில் மகர சங்கராந்தி
  • மாசியில் சிவராத்திரி.

உசாத்துணை


✅Finalised Page