under review

ஓ.ரா.ந. கிருஷ்ணன்

From Tamil Wiki
ஓ.ரா,ந.கிருஷ்ணன்
ஓ.ரா.ந. கிருஷ்ணன் (நன்றி குருகு)
ஓ.ரா,ந.கிருஷ்ணன்
ஓ.ரா,ந.கிருஷ்ணன்
ஓ.ரா,ந.கிருஷ்ணன்

ஓ.ரா.ந. கிருஷ்ணன் (ஓடத்துறை ராமாயாள் நல்லுச்சாமி கிருஷ்ணன்) (பிறப்பு: மே 16, 1934) பௌத்த தத்துவம், தியானம், சடங்குகள் சார்ந்த நூல்களை எழுதும் எழுத்தாளர், பதிப்பாளர், இதழாசிரியர், செயல்பாட்டாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

ஓ.ரா.ந. கிருஷ்ணன் தமிழ்நாடு ஈரோடு மாவட்டம் ஓடத்துறையில் மே 16, 1934-ல் ராமாயாள், நல்லுசாமி இணையருக்கு மகனாகப் பிறந்தார். கோபிசெட்டிப்பாளையம் டைமண்ட் ஜூபிலி பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படித்தார். 1950-1952 ஆண்டுகளில் சென்னை லயோலா கல்லூரியில் இண்டர்மீடியட் படித்தார். 1956-ல் கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கில் பட்டம் பெற்றார்.

ஓ.ரா.ந. கிருஷ்ணன் , மனைவி ஜெயா கிருஷ்ணன்

தனிவாழ்க்கை

ஓ.ரா.ந. கிருஷ்ணன் ஜெயாவை மணந்தார். மகள்கள் மாலதி, மணிமேகலை, மகன் அமுதன்.

ஓ.ரா.ந.கிருஷ்ணன்சென்னை மவுண்ட் ரோடில் மின்சார வாரியத்தில் பணியாற்றினார். அரசு வேலையிலிருந்து வெளிவந்தபின் பல தனியார் நிறுவனங்களில் பணி செய்தார். சென்னை அண்ணா நகரில் குடும்பத்துடன் வசிக்கிறார்.

பௌத்த ஈடுபாடு

ஓரா.ந.கிருஷ்ணன் சைவக்குடும்பத்தில் பிறந்தவர். இளமையிலேயே தத்துவ ஈடுபாடு கொண்டிருந்தார். ஐரோப்பிய தத்துவ அறிஞர் ஸ்பினோஸா (Baruch Spinoza) எழுதிய 'எதிக்ஸ்’ என்னும் அறவியல் நூலால் ஈர்க்கப்பட்டு அதன் வழியாக பௌத்த மதம் மேல் ஈர்ப்பு கொண்டார். ஆங்கிலநூல்கள் வழியாக பௌத்த தத்துவத்தைக் கற்றார். புத்த பிட்சு போதிபாலாவுடன் உரையாடி தத்துவத் தெளிவை அடைந்தார்.

கோ. சந்திரசேகரன் நடத்திய ‘தம்ம பேரவை’ எனும் அமைப்பில் 2010 முதல் வெள்ளிக்கிழமைதோறும் கூடி பௌத்தம் பற்றி விவாதித்தனர். ஓ.ரா.ந கிருஷ்ணன் "பௌத்தம் என்றால் தியானம், தியானம் என்றால் பௌத்தம்" என்று பௌத்ததை வரையறை செய்கிறார்

அமைப்புப் பணிகள்

ஓ.ரா.ந. கிருஷ்ணன் 2006-ல் பௌத்த தியான முறைமைகளை பரப்புவதற்கு ‘தமிழ்நாடு பௌத்த சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். சங்கத்தின் தலைவர் பிக்கு போதிபாலர்.

ஓ.ரா.ந. கிருஷ்ணன் சென்னைப் பல்கலைக் கழகங்கத்துடன் ஒருங்கிணைந்து பௌத்தவியல் கருத்தரங்குகளை நடத்தி வருகிறார்.

இதழியல்

ஓ.ரா.ந. கிருஷ்ணன் 2014-ல் ‘போதி முரசு’ எனும் மாத இதழை தங்கவயல் வாணிதாசன் என்பவருடன் இணைந்து தொடங்கினார். அதில் பௌத்தம் பற்றி எழுதி வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

ஓ.ரா.ந. கிருஷ்ணன் பௌத்த தத்துவம், தியானம், சடங்குகள் சார்ந்து அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். இவரது முதல் நூல் 2003-ல் 'In search of reality' மோதிலால் பனார்சிதாஸ் பதிப்பகத்தின் வெளியீடாக வந்தது. 2007-ல்‘பௌத்தத் தத்துவங்களும் தியான முறைகளும்’ என்ற முதல் தமிழ் நூல் வெளியானது.

கிருஷ்ணனின் படைப்புகளில் 'இருளில் ஒளியும் செஞ்சுடர்', 'ஜே.கே – ஒரு பௌத்தரின் நோக்கில்', 'பௌத்த வாழ்வியல் சடங்குகள்', 'நாகார்ஜுனரின் சுரில்லேகா', 'திபேத்திய மரணநூல்', லட்சுமி நரசுவின் 'பவுத்தம் என்றால் என்ன?', 'தலாய்லாமாவின் சொற்பொழிவுகள்', 'தாமரை மலர்ச் சூத்திரம்', 'பௌத்தத்தின் பார்வையில் இந்திய ஞான மரபுகள்' முதலான நூல்கள் மற்றும் மொழியாக்கங்கள் அடங்கும். கிருஷ்ணனின் சில நூல்கள் ‘காலச்சுவடு’ வெளியீடாகவும் வந்துள்ளன.

கிருஷ்ணன் எழுதிய ‘இந்துத்துவமா அல்லது தம்மத்துவமா’ எனும் நூல் ம. வெங்கடேசன் எழுதிய ‘இந்துத்துவ அம்பேத்கர்’ எனும் நூலுக்கு எழுதப்பட்ட மறுப்புரை.

மெத்தா பதிப்பகம்

ஓ.ரா.ந. கிருஷ்ணன் பௌத்த நூல்களை வெளியிடுவதற்கு 2005-ல் ‘மெத்தா பதிப்பகம்’ என்ற பதிப்பகத்தைத் தொடங்கினார். இதன் மூலம் பௌத்தம் சார்ந்த நூல்களையும், பௌத்தத்தின் மூல நூல்களையும் தமிழில் வெளியிட்டு வருகிறார். மெத்தா பதிப்பகம் 'Life and Consciousness' உட்பட எட்டு ஆங்கில நூல்கள் (இவற்றில் சில முக்கிய ஆங்கிலப் பதிப்பகங்களுடன் இணைந்து வெளியிடப் பட்டவை), நாகார்ஜுனரின் ‘சுரில்லேகா’ உட்பட முப்பது தமிழ் நூல்கள், லட்சுமி நரசுவின் ‘பௌத்தம் என்றால் என்ன?’ உட்பட பத்து மொழியாக்க நூல்கள், ‘தீபவம்சம்’ உட்பட பிக்கு போதிபாலரின் ஆறு நூல்கள் ஆகியவற்றை வெளியிட்டுள்ளது.

பங்களிப்பு

ஓ.ரா.ந.கிருஷ்ணன் தமிழ்ச்சூழலில் பெரும்பாலும் மறைந்துவிட்ட பௌத்தத்தின் தத்துவத்தொடர்ச்சியை தக்கவைக்க போராடிவரும் அறிஞர்களில் முதன்மையானவர். தமிழ்ச்சூழலில் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் மற்றும் அயோத்திதாசரால் முன்னெடுக்கப்பட்ட பௌத்த மரபு ஒன்று உண்டு. பி.ஆர்.அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட நவயான பௌத்த மரபும் உண்டு. அவை இரண்டுமே வெவ்வேறு காலகட்டங்களில் தேக்கநிலையை அடைந்தன. அவை பெரும்பாலும் அரசியல் நோக்கம் மட்டுமே கொண்டிருந்தன. ஓ.ரா.ந.கிருஷ்ணன் தனிமனிதராக பௌத்த தத்துவ நூல்களை மொழியாக்கம் செய்தும், இதழ் நடத்தியும் பௌத்தம் பற்றிய உரையாடல் அறுபடாமல் நிலைநாட்டினார்

நூல் பட்டியல்

  • பௌத்த பைபிள் (மெத்தா பதிப்பகம்)
  • புத்த ஜாதக கதைகள் (மெத்தா பதிப்பகம்)
  • பௌத்த தியானம் (காலச்சுவடு)
  • பௌத்த வாழ்க்கை முறையும் சடங்குகளும் (காலச்சுவடு)
  • இந்திய ஞான மரபுகள் பௌத்தத்தின் பார்வையில் (மெத்தா பதிப்பகம்)
  • பௌத்த பாவனை மனவள தியான பயிற்சிகள் (மெத்தா பதிப்பகம்)
  • இந்துத்துவமா அல்லது தம்மத்துவமா

உசாத்துணை


✅Finalised Page