ஏ.எஸ். ராமநாதன்
ஏ.எஸ். ராமநாதன் (ஆகஸ்ட் 16, 1930 - மார்ச் 2, 2011) (சிதம்பரம் ஏ.எஸ்.ராமநாதன்) மிருதங்கக் கலைஞர். தமிழகத்தில் பிறந்தாலும் இலங்கையில் நீண்டகாலம் வாழ்ந்தார். இலங்கையில் ஓர் இசை ஆசிரியராகவும், இசைமரபை உருவாக்கியவராகவும் அறியப்படுகிறார்.
பிறப்பு, கல்வி
ஏ.எஸ்.ராமநாதன் சிதம்பரத்தில் ஆகஸ்ட் 16, 1930-ல் பிறந்தார். (1931 என்றும் சில குறிப்புகளில் உள்ளது) தந்தை சுந்தரேசன், தாயார் மீனாட்சி அம்மாள்.
ராமநாதன் அண்ணாமலை பல்கலையில் மைலாட்டூர் சாமி ஐயரிடம் வாய்ப்பாட்டும் மிருதங்கமும் பயின்றார். பின்னர் பழநி சுப்பிரமணிய பிள்ளையிடமும் இசை பயின்றார்.
தனிவாழ்க்கை
ஏ.எஸ்.ராமநாதன் இலங்கை மக்களின் அழைப்பை ஏற்று 1948-ல் இலங்கைக்குச் சென்றார்.
1961-ல் ராமநாதன் சரோஜாதேவியைத் திருமணம் செய்துகொண்டார். இவர் வாரிசுகளும் இசைக்கலைஞர்கள். ஏ.எஸ்.மீனாகுமாரி (மிருதங்கம்), ஏ.எஸ். கலையரசன் (வயலின்), யோகராஜா (மிருதங்கம்)&கார்த்திகேயன் (மிருதங்கம்).
அமைப்புப் பணிகள்
தமிழிசை இயக்கத்துக்காக அண்ணாமலை இசைத்தமிழ் மன்றத்தை யாழ்ப்பாணத்தில் நடத்தினார். வட இலங்கை சங்கீத சபை, ரசிகரஞ்சனசபா, சங்கீத வித்வ சபை, இளங்கலைஞர் மன்றம், இளந்தொண்டர் சபை ஆகிய அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டார்.
இசைப்பணிகள்
இசைப் புலவர் சண்முகரத்தினம், பரம் தில்லைராஜா, ராம் குமாரசாமி, சத்தியபாமா ராஜலிங்கம், ஐயாக்கண்ணு தேசிகர், பொன். முத்துக்குமாரு, லயஞான குபேரபூபதி தெட்சணாமூர்த்தி, இயலிசை வாருதி வீரமணி போன்றவர்ளின் இசைநிகழ்வுகளில் ராமநாதன் மிருதங்கம் வாசித்தார்.
கல்விப்பணிகள்
ராமநாதன் , 1950 நவம்பர் முதல் யாழ்ப்பாணம் நடன பாடசாலையில் மிருதங்க ஆசிரியராக பணியேற்றார். பரதக்கலை நிபுணர் ஏ. சுப்பையாவுடன் இணைந்து செயலாற்றினார்.
1962 முதல் ராமநாதன் அகாதமியில் இசை, மிருதங்க ஆசிரியராகப் பணியாற்றினார்.
1971 முதல் யாழ்ப்பாணம் நுண்கலைக் கல்லூரியில் மிருதங்க ஆசிரியராகப் பணியாற்றினார்.
1983-ல் யாழ்ப்பாணம் நுண்கலைக் கல்லூரி யாழ்ப்பாணம் பல்கலையுடன் இணைக்கப்பட்ட போது இந்தியக் குடிமகனாகிய ராமநாதன் அங்கே ஆசிரியர் பணி புரிய சில தடைகள் உருவாயின. ஆகவே அவர் இந்தியா திரும்பி அண்ணாமலைப் பல்கலையில் மிருதங்க ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
மாணவர் மரபு
ராமநாதன் யாழ்ப்பாணத்தில் மிருதங்கம், மரபிசை ஆகியவற்றில் நான்கு தலைமுறைக் காலமாக மாணவர் மரபு ஒன்றை உருவாக்கினார்.
ராமநாதனின் முதல் தலைமுறை மாணவர்களாக நாச்சிமார் கோவிலடி வி.அம்பலவாணர், டி .பாக்கியநாதன், ப.சின்னராசா, எச்.டபிள்யூ.தம்பையா, எஸ்.ரட்ணதுரை, டாக்டர் சிவஞானரத்தினம் ஆகியோர் குறிப்பிடப்படுகிறார்கள்.
ராமநாதன் அகாதமி என்னும் அமைப்பில் அவரிடம் இசையும் மிருதங்கமும் பயின்றவர்களாக காராஜபுரம் ஸ்ரீநிவாசன், மகாராஜபுரம் ராமச்சந்திரன், உடுவில் விஜயசிங்கம், ஏ.கே.கருணாகரன் ஆகியோர் குறிப்பிடப்படுகிறார்கள்.
மூன்றாம் தலைமுறையினராக கலாபூஷணம் க.ப.சின்னராசா, கலாபூஷணம் சி.மகேந்திரன், கலாபூஷணம் எஸ்.சிதம்பரநாதன் ஆகியோர் குறிப்பிடப்படுகிறார்கள்.
பிரணவநாதன், சின்னராசா, மகேந்திரன், சிதம்பரநாதன், ஜெம்புநாதன், வரதராஜன், ஜெயமணிதேவி, கண்ணன், விவேகானந்தன், நித்தியானந்ததேவி, ஸ்ரீதரன், செல்வநேசன்,ஆனந்தப்பிரசாத், பிரகலாதன், ரவிச்சந்திரன், பாலசிறீ, நேசராஜ் ஆகியோர் அண்மைக்கால மாணவர்களாகக் குறிப்பிடப்படுகிறார்கள்.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Aug-2025, 07:20:08 IST