ஏகம்பவாணன்
ஏகம்பவாணன் (வாண முதலியார்) பெருஞ்செல்வர். புலவர்களை ஆதரித்தவர்.
வாழ்க்கைக் குறிப்பு
ஆறைநகர் எனப்படும் பழையாறையில் வாணமுதலியாருக்கு மகனாகப் பிறந்தார். தாய் தந்தை காலமானதால் ஏகன்சாம்பான் என்ற வேலையாளிடம் வளர்ந்தார். பள்ளிக் கல்வி பயின்றார். கம்பரிடம் மாணவனாகப் பயின்றார். தன்னை வளர்த்து உயிர் நீர்த்த ஏகன்சாம்பான் மற்றும் ஆசிரியர் கம்பரின் நினைவாக தன் பெயரை ஏகம்பவாணன் என மாற்றிக் கொண்டார். பயிர்த்தொழில், நூலாராய்ச்சியில் ஈடுபட்டார். சேர, சோழ, பாண்டிய மன்னரிடம் தன் பெருஞ்செல்வம் கொண்டு போரிட்டார்.
வினோதரசமஞ்சரியின் புராணக்கதை
ஏகம்பவாணனின் கதை செவிச்செய்தியாகவும் சிற்றிலக்கியங்களாகவும் புழங்கியிருக்கலாம். தனிப்பாடல்களிலும் குறிப்புகள் உள்ளன. பிற்காலத்தைய குறிப்பு வினோதரசமஞ்சரி நூலில் ஏகம்பவாணன் சரித்திரம் என்னும் கதை ஒன்று உள்ளது. அக்கதையே ஏகம்பவாணன் பற்றி அறியக்கிடைக்கும் செய்தி. (ஏகம்பவாணன் கதை, வினோதரசமஞ்சரி)
வாணன் என்பவருக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. சோதிடர்கள் அக்குழந்தையால் அதன் தந்தையும் தாயும் மடிவார்கள் என்கிறார்கள். ஆனால் இன்னொரு அமைச்சர் ஒரு கதையைச் சொல்லி சோதிடம் பொய்க்கலாம் என்கிறார். ஆகவே வாணன் அக்குழந்தையை வளர்க்கிறார். சோதிடர்கூறியதுபோல வாணனும் மனைவியும் இறந்துபோகவே குழந்தையை ஏகன் என்னும் சாம்பான் ( வேலைக்காரர்) வளர்க்கிறார். குழந்தைக்கு கம்பரிடம் தமிழ் கற்க ஏற்பாடு செய்கிறார். குழந்தை வயதுக்கு வந்ததும் சொத்துக்களையும் ஒப்படைக்கிறார்.
அந்தச் சொத்தில் ஒரு புதையல் இருக்கிறது, அதை எடுக்க முயல்கையில் அங்கே வாழும் பூதம் புதையலை தோண்டியவனை பலி கொள்கிறது. பிள்ளையின் கனவில் வந்து பிறபொருளுக்கு ஆசைப்படாத ஒருவனை பலிகொடுத்தால் புதையலை விட்டுவிடுவதாகச் சொல்கிறது. அதைக்கேட்டதும் ஏகன் தன்னை பலிகொடுக்கும்படிச் சொல்கிறான். வாணனின் மகன் அதற்கு ஒப்பவில்லை. தன் எஜமானரின் மகனுக்கு பெரும் செல்வம் கிடைக்கவேண்டும் என விரும்பும் ஏகன் ரகசியமாகச் சென்று தன் கழுத்தை அறுத்துக்கொண்டு பலியாகிறான். வாணனின் மகனுக்கு பெரும் செல்வம் கிடைக்கிறது. அச்செல்வத்தான் கோட்டை கட்டி அவன் அரசனைப்போல வாழ்கிறான். புலவர்களை பேணுகிறான். தன்னை வளர்ந்த ஏகன், தன் ஆசிரியன் கம்பன், தன் தந்தை வாணன் ஆகியோர் பெயர்களை இணைத்து ஏகம்பவாணன் என்னும் பெயரை சூட்டிக்கொண்டான்.
ஏகம்பவாணனை காண வந்த சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் அவன் எங்கே என்று கேட்டபோது அவன் மனைவி வயலுக்குச் சென்றிருக்கிறார் என்று சொன்னாள். அதை கேட்டு கேலியாக 'முடி நடவு செய்யச் சென்றாரா?’ என்று அவர்கள் கேட்டனர். (முடி , நாற்றுமுடிச்சு) அவள் சீற்றம் கொண்டு
சேனை தழையாக்கிச் செங்குருதி நீர்தேக்கி
ஆனை மிதித்த அடிச்சேற்றில் - மானபிரான்
மாவேந்த னேகம்ப வாணன் பறித்துநட்டான்
மூவேந்தர் தங்கண் முடி.
என்ற பாட்டை பாடினாள். மூவேந்தர்களின் படைகளை தழையாக்கி, குருதியை நீராக்கி, யானை மிதித்த சேற்றில் ஏகம்பவாணன் மூவேந்தர் மணிமுடிகளையும் பறித்து நடுவான் என்பது அப்பாட்டின் பொருள். அதைக்கேட்டு அவர்கள் வஞ்சினம் உரைத்துவிட்டுச் சென்றார்கள்.
ஏகம்பவாணன் பூதத்தை அனுப்பி சேரனை சிறையெடுத்து அவனிடம் கப்பம் பெற்று திருப்பி அனுப்பினான். பாண்டியனை பூதத்தால் பிடிக்க முடியவில்லை, பாண்டியன் அணிந்திருந்த வேம்புமாலை பூதத்திற்கு தடையாக இருந்தது. (வேப்பமரத்தை பேய்கள் அணுகுவதில்லை) கம்பனிடம் ஏகம்பவாணன் யோசனை கேட்க அவர் சொன்ன வழியின்படி தாசிகளை அனுப்பி பாண்டியனை நடனத்தால் மகிழ்வித்தான். பாண்டியன் தாசிகளிடம் அவர்களுக்கு என்ன பரிசில் வேண்டுமென்று கேட்டபோது அவர்கள் கம்பன் எழுதிக்கொடுத்த பாடல்களைப் பாடினர்.
மாப்பைந்தார் கல்ல, முத்து வண்ணத்தார்க் கல்ல, என் பெண்
வேப்பந்தார்க்கு ஆசைகொண்டு விட்டாளே! - பூப்பைந்தார்
சேர்ந்திருக்கு நெல்வேலிச் சீவிலிமா றா!தமிழை
ஆய்ந்திருக்கும் வீரமா றா
தென்னவா மீனவா சீவிலிமா றாமதுரை
மன்னவா பாண்டி வளநாடா முன்னம்
சுரும்புக்குத் தாரளித்த துய்யதமிழ் நாடா
கரும்புக்கு வேம்பிலே கண்
வேம்பாகிலும் இனிய சொல்லுக்கு நீமிலைந்த
வேம்பாகிலும் உதவ வேண்டாவோ? - மீன்பாயும்
வேலையிலே வேலைவைத்த மீனவா நின்புயத்து
மாலையிலே மாலைவைத்தாள் மான்
என் மகள் உன் வேப்புமாலைக்கு ஆசைப்படுகிறாள் என தாசி பாட அதைக்கேட்டு பாண்டியன் ஏகம்பவாணனின் பூதத்தை அஞ்சி பரிசளிக்காமலிருந்தான். ஆகவே நான்காவது சேடி கீழ்க்கண்ட பாடலை பாடினாள்.
இலகு புகழாறை ஏகம்ப வாணன்
அலகை வரும்வருமென் றஞ்சி - உலகறிய
வானவர்கோன் சென்னிமேல் வண்கை வளையெறிந்த
மீனவர்கோன் நல்கிடான் வேம்பு
அதன்பிறகும் பரிசளிக்கவில்லை என்றால் அஞ்சுவது உறுதியாகிவிடும் என எண்ணிய பாண்டியன் அந்த மாலையை அவளுக்குப் பரிசளித்தான். பூதம் பாண்டியனை சிறைப்பிடித்தது. பாண்டியனின் மனைவி
என்கவிகை என்சிவிகை என்கவச மென்றுசவும்
என்கரியீது என்பரியீது என்பரே - மன்கவன
மாவேந்தன் ஏகம்ப வாணன் பரிசுபெறும்
பாவேந்தரை வேந்தர் பார்த்து.
என்று ஏகம்பவாணனை புகழ்ந்து ஒரு செய்யுளை அனுப்பினாள். அதைக்கண்டு ஏகம்பவாணன் பாண்டியனை சிறைவிடுத்தான்.
ஏகம்பவாணன் புலவர்களுக்கு ஏராளமான பரிசுகளை வழங்கினான். அதைப்பற்றி ஒரு புலவர் பாடிய ஆற்றுப்படைப் பாடல் இது
தேரு ளைப்புரவி வார ணத்தொகுதி திறைகொ ணர்ந்துவரு மன்னநின்
தேச மேதுனது நாம மேதுபுகல்; செங்கை யாழ்தடவு பாணரே!
வாரு மொத்தகுடி நீரு நானுமக தேச னாறைநகர் காவலன்
வாண பூபதி மகிழ்ந்த ளித்தவெகு வரிசை பெற்றுவரு புலவன்யான்;
நீரு மிப்பரிசு பெற்று மீண்டுவர லாகு மேகுவான் முன்றில்வாய்
நித்தி லச்சிகர மாட மாளிகை நெருங்கு கோபுர மருங்கெலாம்
ஆரு நிற்குமுயர் வேம்பு நிற்கும்வளர் பனையு நிற்குமத னருகிலே
அரசு நிற்குமர சைச்சு மந்தசில அத்தி நிற்குமடை யாளமே.
திரைப்படம்
ஏகம்பவாணனின் கதையை ஒட்டி ஏகம்பவாணன் என்னும் திரைப்படம் 1947-ம் ஆண்டு வெளிவந்தது. பி. என். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கொத்தமங்கலம் சீனு, கே. சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
வரலாறு, இலக்கிய இடம்
தமிழில் பதினைந்தாம் நூற்றாண்டுக்கு பின் எழுதப்பட்ட பல தனிப்பாடல்களில் கம்பன், ஔவையார் போன்றவர்கள் கதைமாந்தர்களாகவும் பாடலாசிரியர்களாகவும் குறிப்பிடப்படுகிறார்கள். இவை பழைய தொன்மங்களை மறுபடியும் கையாண்டிருப்பதற்கு சான்றுகளே ஒழிய வரலாற்றுடன் இணைத்துப் பார்க்கத்தக்கவை அல்ல. இச்செய்யுள்களின் மொழிநடை தெளிவாகவே சிலநூறு ஆண்டுகள் பிற்காலத்தையது என தெரிகிறது.
சோழராட்சிக்காலத்துக்கு பின்னர் புலவர்கள் சிறு நிலக்கிழார்களை அண்டி வாழும் நிலை உருவானபோது வேளிர்குலத்தலைவர்கள், சிற்றரசர்களை புகழ்ந்து எழுதப்படும் சிற்றிலக்கியங்களும் தனிப்பாடல்களும் ஏராளமாக படைக்கப்பட்டன. அவற்றில் சிலவே காலத்தைக் கடந்து எஞ்சின. இவற்றில் நிலக்கிழார்களும் சிற்றரசர்களும் மூவேந்தர்களுக்கு நிகரானவர்களாகவோ, அவர்களை வென்றவர்களாகவோ காட்டப்படுகிறார்கள்.
இந்த வகையான இலக்கியச் சித்தரிப்புக்கு தமிழிலக்கிய மரபில் இடமுண்டு. புறநாநூற்றில் மகடூமறுத்தல் என்னும் துறை மூவேந்தரையும் விட குலமேன்மை கொண்டவர்கள் சிற்றரசர்கள் என்றும், அதனால் அவர்கள் வேந்தர்களுக்கு மகளை மணம் முடித்துக்கொடுக்க மறுப்பதாகவும், மூவேந்தர்களும் அச்சிற்றரசனின் வீட்டுமுன் காத்து நிற்பதாகவும் பாடுவது. மூவேந்தரும் இணைந்து ஒரு சிற்றரசனை வென்றதாகவும் கதைகள் உள்ளன, உதாரணம் பாரியின் பறம்புமலையை மூவேந்தர் சேர்ந்து வென்றது. ஏகம்பவாணனின் கதை அந்த புனைவுமரபைச் சேர்ந்தது. இதன் மொழிநடையில் இருந்து பொயு பதினைந்து அல்லது பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று சொல்லலாம்..
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:30:55 IST