under review

எ. சமாட் சாயிட்

From Tamil Wiki
FF455B63-F2BB-4122-B9BE-E8F2CC3F3C7A.png

எ. சமாட் சாயிட் (A. Samad Said) (பிறப்பு: ஏப்ரல் 9, 1935) மலேசியாவின் மலாய் நாவலாசிரியர், கவிஞர், இதழாளர், இலக்கியப் போராளி, அரசியல் போராட்டவாதி. தன் படைப்புகளில் நாட்டில் நடக்கும் முக்கிய சிக்கல்களைத் தழுவிய தன்னுடைய கருத்துகளைச் சமரசமின்றி வெளிப்படுத்தினார். மலேசியாவின் தேசிய இலக்கியவாதி விருது பெற்றார். PPSMI, பெர்சே போன்ற அமைப்புச்செயலாடுகளிலும் தீவிரமாக ஈடுபட்டார்.

பிறப்பு, கல்வி

எழுத்தாளர் சமாட் சாயிட் ஏப்ரல் 9, 1935-ல், மலாக்காவிலுள்ள கம்போங் பெலிம்பிங் டாலாம், டுரியான் துங்கால் எனும் சிற்றூரில் பிறந்தார். அவரின் இயற்பெயர் Abdul Samad bin Mohamed Said. அவர் ஆறு மாத குழந்தையாக இருந்தபோது, அவரது குடும்பத்தினர் சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்தனர். எழுத்தாளர் சமாட் சாயிட் 1940 முதல் 1946 வரையிலும் சிங்கப்பூரிலுள்ள கோத்தா ராஜா மலாய் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். சிங்கப்பூரில் ஜப்பானிய ஆட்சி காலம் முடிந்து, மீண்டும் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இவர் மோங்க் ஹில் இடைநிலைப்பள்ளியில் (Monk Hill Secondary School) பயின்றார். பின்னர், 1956--ம் ஆண்டில் விக்டோரியா கல்விக்கூடத்தில் கேம்பிரிட்ஜ் சான்றிதழைப் பெற்றார்.

தனி வாழ்க்கை

சமாட் சாயிட் கேம்பிரிட்ஜ் சான்றிதழ் பெற்ற பின் சிங்கப்பூரிலுள்ள பொது மருத்துவமனையில் ஆறு மாத காலம் குமாஸ்தாவாகப் பணிபுரிந்தார். அதன் பின்னர் 1980-கள் வரை பல்வேறு அச்சு ஊடகங்களில் பணி புரிந்தார்.

சமாட் சைட் தன்னோடு 'அங்காதான் 50' இலக்கிய இயக்கத்தில் ஒன்றாக எழுதிக் கொண்டிருந்த சல்மி மாஞ்சாவை (Salmi Manja) ஏப்ரல் 1959-ல் காதல் திருமணம் புரிந்து கொண்டார். சல்மி மாஞ்சாவின் இயற்பெயர் சாலேஹா அப்துல் ரஷீட் (Saleha binti Abdul Rashid). சல்மி மாஞ்சாவும் மலாய் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளராக இருந்தார்.

அச்சு ஊடகப் பணிகள்

சமாட் சைட் கோலாலம்பூரில் அமாட் போஸ்டமாம் (Ahmad Boestamam) தலைமையில் ஃபிகிரான் ரக்யாத் (Fikiran Rakyat) அச்சு ஊடகத்தில் பணிபுரிந்தார்.பிறகு, சிங்கப்பூருக்குத் திரும்பி உஸ்மான் அவாங்கின் (Usman Awang) தலைமையில் இயங்கிய வார இதழான உத்துசான் ஸாமான் (Utusan Zaman) நிறுவனத்தில் பணியாற்றினார். அதனைத்தொடர்ந்து, உத்துசான் மெலாயு நிறுவனத்திலிருந்து (Syarikat Utusan Melayu) உஸ்மான் அவாங் (Usman Awang), சாயிட் சஹாரி (Said Zahari) ஆகியவரோடு சேர்ந்து சமாட் சாயிட்டும் நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் (New Straits Times) அச்சு ஊடகத்திற்கு மாற்றலாகினார். சாமாட் இஸ்மாயில் (Samad Ismail) உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, சமாட் சாயிட் தி நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் (The New Straits Times) செய்திப்பிரிவு ஆசிரியர் குழுவிற்குச் சிறப்பு உதவியாளராக ஆனார். அதன்பின்னர், மார்ச் 8, 1978 வரை பெரித்தா ஹரியான் (Berita Harian) அச்சு ஊடகத்தின் செய்திப்பிரிவு ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1981-ம் ஆண்டில், அவர் வர்த்தா தெபராவ் (Warta Teberau) எனும் அச்சு ஊடகத்தின் செய்திப்பிரிவு ஆசிரியர் குழுவிற்கான தலைவராகப் பணியாற்றினார். இவர் தி நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் (The New Straits Times) அச்சு ஊடகக் குழுவில் இலக்கிய மேம்பாட்டுத் தலைவராகவும் பணிபுரிந்தார்.

இலக்கிய வாழ்க்கை

படைப்புகளை உருவாக்குவதில் எழுத்தாளர் சமாட் சாயிட்டின் புலமையும், பிற எழுத்தாளர்களின் படைப்புகளை வாசிப்பதில் அவர் கொண்டிருந்த முனைப்புமே மலேசிய இலக்கிய வரலாற்றில் அவரை முன்னணி படைப்பாளராக மாறியது. சமாட் சாயிட் இலக்கியத்துறையில் ஹில்மி (Hilmy), இசா தஹ்முரி (Isa Dahmuri), ஜமில் கெலானா (Jamil Kelana), மஞ்சா (Manja), மெஸ்ரா (Mesra), ஷம்சீர் (Shamsir) போன்ற பல்வேறு புனைப் பெயர்களைப் பயன்படுத்தியுள்ளார்.

சமாட் சாயிட்டின் 'Untuk Angkatan 50' என்னும் கவிதை 1950--ம் ஆண்டில் முதல் முறையாக உத்துசான் ஸாமான் (Utusan Zaman) எனும் அச்சு ஊடகத்தில் வெளியிடப்பட்டது. "Seni untuk Masyarakat" என்ற முழக்கத்துடன் முன்னெடுத்த எழுத்தாளர்களின் அமைப்பான அசாஸ் 50-ல் (ASAS 50) எழுத்தாளர் சமாட் சாயிட்டும் உறுப்பினரானார். பாடுபொருள், கதையின் கருத்து ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதிய எழுத்தாளர்களை விழுமியங்களை முதன்மைப் படுத்தும் படைப்புகளை எழுத ஊக்குவித்தார்.

எழுத்தாளர் சமாட் சாயிட் தனது 23-ஆவது வயதில் எழுதிய ‘சலினா’ எனும் நாவலைப் பேராசிரியர் தியாவ் (Teeuw) உலகத்தரம் வாய்ந்த படைப்பு எனக் குறிப்பிடுகின்றார். 'சலினா' 1958--ம் ஆண்டில் Dewan Bahasa dan Pustaka (DBP) நடத்திய நாவல் போட்டியில் ஆறுதல் பரிசை மட்டுமே பெற்றது. ஆனால் இந்நாவல் பின்னாளில் நவீன மலாய் நாவல்களின் முன்மாதிரியாக ஏற்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சிங்கப்பூரின் கம்போங் காம்பிங் (ஆட்டுக் கம்பம்) எனும் கற்பனை கிராமத்தில் வாழும் மலாய் சமூகத்தின் ஏழ்மையான வாழ்க்கையையும் சமூகச் சீர்கேடுகளையும் பிரதிபலிக்கும் கதைக்களத்தை சலினா கொண்டுள்ளது. பிரச்சார கதையாடலாக இல்லாமல் இயல்புவாதமும் கலை நயமும் கொண்ட கதையாக சலினா அமைந்துள்ளது. அக்காலக்கட்டத்தில் இத்தகைய இலக்கியத்தன்மை அடங்கிய மலாய் இலக்கியங்கள் முற்றிலும் புதியவை. ‘சலினா’ நாவல் நாடகக் கலைஞரான ஜோஹன் ஜாஃபரால் (Johan Jaaffar) நாடகமாக மாற்றப்பட்டு, 1986--ம் ஆண்டில் நடைபெற்ற கலை விழாவில் அரங்கேற்றப்பட்டது.

அவரது மற்றொரு நாவலான ‘சுங்கை மெங்காலிர் லெசு’ (Sungai Mengalir Lesu) போரின் விளைவாகச் சிங்கப்பூர் வாழ் மக்கள் அடைந்த துன்பத்தை கதைக்களமாகக் கொண்டது. 1942 முதல் 1946 வரையிலும் சிங்கப்பூரில் நிலவிய ஜப்பானிய ஆட்சியின் போது ஏழ்மையில் வாழ்ந்த மலாய், இந்தோனேசிய தொழிலாளர்களின் நிலையைப் பேசியது.

எழுத்தாளர் சமாட் சாயிட் ‘சலினா’ (Salina, 1961), ‘சுங்கை மெங்காலிர் லெசு’ (Sungai Mengalir Lesu, 1970), ‘லங்கிட் பெத்தாங்’ (Langit Petang, 1980) ஆகிய நாவல்களை எழுதிய அதே காலகட்டத்தில், ‘டரி சலினா கெ லங்கிட் பெத்தாங்’ (Dari Salina ke Langit Petang, 1979) எனும் தனது தன்வரலாற்று நூலையும் எழுதினார். அச்சுயசரிதையில் சமாட் சாயிட்டின் எழுத்துத் துறை சார்ந்த அனுபவங்கள், அவரது நாவல்களில் பயன்படுத்தப்படும் நிகழ்வுகளின் பின்புலம் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன.

சமாட் சைட் கவிதைத் துறையிலும் அதிகம் ஈடுபாடு காட்டினார். மலாய் நவீன கவிதைகளை அவர் பரிசோதனை கவிதைகளாக எழுதினார். அவரின் தொடக்ககால கவிதை முயற்சிகள் liar dalam Api நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. Benih Harapan (1973), Daun Semalu Pucuk Paku (1975), Benih Semalu (1984) போன்ற வேறு கவிதை நூல்களையும் வெளியிட்டார்.

அமைப்புச் செயல்பாடுகள்

(PPSMI ரத்து இயக்கம்)

சமாட் சாயிட் தாய்மொழி ஆர்வலர்களுடன் சேர்ந்து PPSMI ரத்து இயக்கத்தைத் தொடங்கினார். இஃது அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை ஆங்கில மொழியில் கற்பிக்கும் முறையை எதிர்க்கும் இயக்கமாகும். ஜனவரி 31, 2009 மற்றும் மார்ச் 7, 2009 ஆகிய தேதிகளில் அவ்வியக்கத்தின் தலைமையில் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. 15 மார்ச் 2009 அன்று, புக்கிட் செலாம்பாவ் (Bukit Selambau), புக்கிட் கந்தாங் (Bukit Gantang) மற்றும் பத்தாங் ஐ (Batang Ai) ஆகிய இடங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது அமைச்சர்கள் மற்றும் தேசிய முன்னணி (Barisan Nasional) / அம்னோ (UMNO) தலைவர்களை ஆங்கிலத்தில் பேசுமாறு எழுத்தாளர் சமாட் சாயிட் சவால் விடுத்தார். தொடர்ந்து, நாடு முழுவதும் "கெம்பாரா காசேஹ் பஹாசா" (Kembara Kasih Bahasa) திட்டத்தையும் அவர் தொடங்கினார்.

பெர்சே 2.0 (2011)

2011--ம் ஆண்டில் பெர்சே இயக்கத்தின் தலைவர்களில் சமாட் சாயிட்டும் ஒருவராவார். பெர்சேயும் அரசாங்கமும் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்ப வேண்டும் என்ற அறிக்கையைத் தொடர்ந்து, ஜூலை 5, 2011-ல், சமாட் சாயிட்டும் பெர்சே இயக்கத்தின் தலைவரான டத்தோ அம்பிகா ஸ்ரீநிவாசன், ஜைத் கமருடின் இருவரும் இஸ்தானா நெகாராவிலுள்ள (Istana Negara) மாட்சிமை தங்கிய பேரரசரைச் சந்தித்தனர். ஜூன் 19,2011-ல் 'உங்குன் பெர்சிஹ்' (Unggun Bersih) என்ற தலைப்பிலான ஒரு கவிதையை சமாட் சாயிட் கோலாலும்பூரில் வாசித்ததைத் தொடர்ந்து, தேச துரோகச் சட்டம் 4(1)(b) மற்றும் பேச்சுக்கான காவல் சட்டத்தின் பிரிவு 27(5)க்குக் கீழ் அவரது கவிதை விசாரிக்கப்பட்டது.

பெர்சே 3.0 (2012)

ஏப்ரல் 28, 2012-ல் நடந்த பெர்சே பேரணியின் இணைத் தலைவராகவும் சமாட் சாயிட் இருந்தார். அப்பேரணியின் போது, பாசார் சேனி (Pasar Seni), தயாபூமி கட்டிடத்தை (Bangunan Dayabumi) இணைக்கும் பாலத்தில் அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இலக்கிய இடம்

எழுத்தாளர் சமாட் சாயிட்க்கு டத்தோ பட்டம் வழங்கப்பட்டது. (1997)

சமாட் சாயிட் தன்னுடைய இலக்கியப் படைப்புகளில் நாட்டில் நடக்கும் முக்கிய சிக்கல்களைத் தழுவிய தன்னுடைய கருத்துகளைச் சமரசமின்றி வெளிப்படுத்தும் பண்புடையவர். சமூகச் சிக்கல்களையும் சீர்கேடுகளையும் உரத்த குரலில் தன் நாவல்களில் பதிவு செய்துள்ளார். இதன் காரணத்தாலே மலாய் மொழி இலக்கியச் சூழலில் இவரது படைப்புகளுக்குக் கூடுதலான கவனம் கிடைக்கப்பெற்றது. கல்விக் கூடங்களிலும் இவரது படைப்புகள் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. இவரது படைப்புகள் மலாய் இலக்கிய ஆய்வாளர்களிடையே மிகவும் பிரபலமானதாகவும் விவாதத்துக்குரியதாகவும் அமைந்துள்ளது.

‘சலினா’ நாவலைப் பேராசிரியர் தியாவ் (Teeuw) உலகத்தரம் வாய்ந்த படைப்பு எனக் குறிப்பிடுகின்றார். இந்நாவல் பின்னாளில் நவீன மலாய் நாவல்களின் முன்மாதிரியாக அறிஞர்களால் ஏற்கப்பட்டது.

விருதுகள், பரிசுகள்

  • இலக்கியப் போராளி விருது, 29 .5 .1976 (Dewan Bahasa dan Pustaka & மலேசிய கல்வி அமைச்சால் வழங்கப்பட்டது)
  • Panel Anugerah Sastera , 1979
  • தென் கிழக்காசிய எழுத்தாளர் விருது, 1979 ( S.E .A Write Award )
  • தேசிய இலக்கியவாதி விருது 1985
  • ASEAN விருது 1993 (புரூணை அரசாங்கத்தால் வழங்கப்பட்டது)
  • Darjah Mulia Seri Melaka (டத்தோ பட்டம்) 1996 (மலாக்கா மாநில ஆளுநரால் வழங்கப்பட்டது)
  • இலக்கியக் கல்வி கெளரவ முனைவர் பட்டம், 2003 உப்சி பல்கலைக்கழகம்
  • Darjah Gemilang Pangkuan Negeri, (டத்தோஸ்ரீ பட்டம்) 2017 பினாங்கு மாநில ஆளுநரால் வழங்கப்பட்டது.

படைப்புகள்

நாவல்கள்
  • Salina,1961,Dewan Bahasa dan Pustaka
  • Bulan Tak Bermadu di Fatehpur Sikri,1966,Abbas Bandung
  • Sungai Mengalir Lesu,1967, Pustaka Gunong Tahan
  • Di Hadapan Pulau,1978,Dewan Bahasa danPustaka
  • Adik Datang,1980,Penerbitan Adabi
  • Langit Petang,1980, Dewan Bahasa dan Pustaka
  • Daerah Zeni, 1985,Fajar Bakti
  • Hujan Pagi,1992,Dewan Bahasa dan Pustaka
  • Cinta Fansuri, 1994,Fajar Bakti
இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கான நாவல்கள்
  • Bendera Merah di Atas Bukit,1968,Pustaka Melayu Baru
  • Lima Kawan ke Rumah Rahsia,1968,Pustaka Pendidikan
  • Jangan Ikut Jalan Ini, 1969,Pustaka Nasional
  • Mengejar Tetamu di Waktu Senja,1974,Pustaka Melayu Baru
  • Yang Berat Sama Dipikul,1969,Pustaka Nasional
  • Keledang,1979,Mac Millan Publishers Ltd
  • Antara Kabus ke Kabus,1980,Pustaka Melayu Baru
  • Di Simpang Jalan,1980,Dewan Bahasa dan Pustaka
  • Jalan Retak,1980,Pustaka Melayu Baru
சிறுகதைகள்
  • Liar di Api,Federal Berhad.
  • Daun-daun Berguguran (bersama Salmi Manja),1962,Federal Berhad
  • Debar Pertama,1964,Federal Berhad
  • Ke Mana Terbangnya Si Burung Senja,1966,Pustaka Melayu Baru
  • Panorama (Peny),1966,Federal Berhad
  • Bunga Gunung (Peny), 1982,Berita Publishing Sdn. Bhd
  • Angin Pulau (antologi bersama),1985,Teks Publishing Sdn. Bhd.
  • Angin Pulau (antologi bersama),Fajar Bakti Sdn.Bhd.
  • Titisan Indah di Bumi Merkah (antologi bersama),1985,Fajar Bakti Sdn. Bhd
  • Hati Muda Bulan Muda: Kumpulan Cerpen 1954 – 1992 (Peny. Othman Puteh),1993,Dewan Bahasa dan Pustaka
கவிதைகள்
  • Liar di Api,Federal Berhad
  • Puisi Baru Melayu 1942 – 1960 (antologi bersama),1961, Dewan Bahasa dan Pustaka
  • Daun-daun Berguguran (bersama Salmi Manja), 1962, Federal Berhad
  • Sajak-sajak Melayu Baru 1946 – 1961/Modern Malay Verse 1946-1961 (dwibahasa), (antologi bersamaFajar Bakti Sdn. Bhd, 1969 (cetakan keempat). முதல் பதிப்பு : 1963.
  • Benih Harapan, 1973,Grafika Sendirian Berhad
  • Daun Semalu Pucuk Paku, 1975, Balai Penerbitan Nusa
  • Kuala Lumpur, (antologi bersama), 1975,GAPENA
  • Pilihan Puisi Baru Malaysia-Indonesia (antologi bersama), 1980, Dewan Bahasa dan Pustaka
  • Puisi-puisi Nusantara (antologi bersama),1981, Dewan Bahasa dan Pustaka
  • Benih Semalu, 1984, Dewan Bahasa dan Pustaka (cantuman dua antologi: Benih Harapan dan Daun Semalu Pucuk Paku).
  • Bintang Mengerdip (antologi bersama), 1984,Dewan Bahasa dan Pustaka
  • 100 Sajak Malaysia (antologi bersama), 1984, Tra-Tra Publishing & Trading Sdn. Bhd
  • Bunga Gerimis (antologi bersama), 1986,Fajar Bakti Sdn. Bhd
  • Puisirama Merdeka (antologi bersama) ,1986,PENA
  • Malaysia dalam Puisi, 1988, Dewan Bahasa dan Pustaka
  • An Anthology of Contemporary Malaysian Literature (antologi bersama), 1988,Dewan Bahasa dan Pustaka
  • Kumpulan Puisi Malaysia/Malaysian Poetry (1975 – 1985)(antologi bersama) ,1988,Dewan Bahasa dan Pustaka
  • Puisi Baharu Melayu (1961-1986) (antologi bersama), 1990,Dewan Bahasa dan Pustaka
  • Balada Hilang Peta, 1993,Dewan Bahasa dan Pustaka
  • Suara Rasa/Voice from Within (antologi bersama), 1993.
நாடகங்கள்
  • Di Mana Bulan Selalu Retak, 1965,Malaysia Publication Ltd. 1965.
  • Ke Mana Terbangnya Si Burung Senja, 1966,Pustaka Melayu Baru
  • Wira Bukit, 1986,Dewan Bahasa dan Pustaka
  • Lantai T. Pinkie, 1996,Dewan Bahasa dan Pustaka
  • Lazri Meon Daerah Zeni, 1992, Dewan Bahasa dan Pustaka
கட்டுரைகள் மற்றும் விமர்சனங்கள்
  • Tema dan Tugas Sastera Melayu Moden, 1963, Penerbitan Federal Berhad
  • Damai (kata pengantar, 1966,Federal Berhad
  • Laungan (Kata pengantar), 1962,Federal Berhad
  • Tangan yang Simpatik, 1981,Adabi Sdn. Bhd
  • Between Art and Reality (Selected Essays),1994, Dewan Bahasa dan Pustaka
சுயசரிதை
  • Dari Salina ke Langit Petang,1979, Dewan Bahasa dan Pustaka
பொது
  • Warkah kepada Salmi Manja, 1965,Federal Berhad
  • Antara Bulan dan Wira, 1989, Dewan Bahasa dan Pustaka
  • Warkah Eropah, 1991,Dewan Bahasa dan Pustaka
  • Koleksi Terpilih A. Samad Said , 1995,Dewan Bahasa dan Pustaka

உசாத்துணை


✅Finalised Page